அலர்ஜியால் அவதியா?
##~## |
'நின்றால் பயம், நடந்தால் பயம்’ என 'தெனாலி’ படத்தில் கமல் கூறுவதுபோல, இன்று வெளியில் வந்தால், 'தூசு அலர்ஜி, காற்று அலர்ஜி, ஃபுட் அலர்ஜி’ என எங்கும் எதிலும் அலர்ஜி. இந்த ஒவ்வாமையை ஆரம்பத்திலேயே கவனிக்காமல்விட்டால், பல்வேறு நோய்களுக்கு வழிவகுத்துவிடும். அலர்ஜி பற்றிய அனைத்து விஷயங்களையும் அலர்ஜி சிறப்பு மருத்துவர் கைலாஷ் மற்றும் தோல் நோய் சிகிச்சை நிபுணர் செந்தமிழ்ச்செல்வி விரிவாகப் பேசுகின்றனர்.
''ஒவ்வாமை என்பது ஒரு நோய் அல்ல; உடலில் ஏற்படும் ஒரு திடீர் மாற்றம். உணவுப் பழக்கங்கள், மாறிவரும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவை ஒவ்வாமை ஏற்படக் காரணங்களாக இருக்கின்றன. நம்முடைய உடல் என்பது கிட்டத்தட்ட பல்வேறு உயிரிகள் வாழும் ஒரு 'காலனி’. நம் உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. இவற்றுக்கு உணரும் தன்மை உண்டு. வாசனை, நெடியை நம்முடைய மூக்கில் உள்ள செல்கள் நுகர்கின்றன. ஒவ்வாமையை உடலுக்குள் உள்ளே இருக்கும்

காரணிகளால் ஏற்படும் ஒவ்வாமை (Endogenous), வெளிப்புறக் காரணிகளால் ஏற்படும் ஒவ்வாமை (Exogenous) என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறோம்.
உடலுக்கு உள்ளே ஏற்படும் ஒவ்வாமை
வெளியில் இருந்து வரும் வேண்டாத பொருட்களை எதிர்ப்பதற்காக நம் ரத்தத்தில் சில தற்காப்புப் புரதங்கள் உள்ளன. சிலருக்கு இந்தப் புரதங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும். நம் உடலில் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும் செல்களை இந்தத் தற்காப்புப் புரதங்கள் திடீரெனத் தாக்கத் தொடங்கிவிடும். இதனால் தோலில் அரிப்பு, தோல் உரிதல், எரிச்சல் போன்றவை ஏற்படும். இந்த அலர்ஜிக்கு மரபியல் ரீதியான காரணங்களும் இருக்கலாம். இத்தகைய அலர்ஜிகளை சரிப்படுத்த முடியாது. கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும். அப்படிக் கட்டுப்படுத்தும்போது சிலருக்கு இத்தகைய ஒவ்வாமை படிப்படியாகக் குறைந்துவிட வாய்ப்பும் உண்டு.
உடலுக்கு வெளியே ஏற்படும் ஒவ்வாமை
நாம் வாழும் சூழலுக்கு நம் உடல் தானாகவே பழகிவிடும். இதை 'சென்சிடைசேஷன்’ (Sensitisation) என்போம். ஆனால், சிலருக்கு சில விஷயங்களில் இந்த சென்சிட்டைசேஷன் இயல்பிலேயே குறைவாக இருக்கும். இன்றும் வெளி இடங்களில் தண்ணீர் குடித்தால்கூட, அவர்களுக்கு ஒப்புக்கொள்ளாது. சிலருக்கு, காற்றில் லேசாக தூசு இருந்தால்கூட, அது அலர்ஜியை ஏற்படுத்தும். பூவின் மகரந்தத் தூள் காற்றில் கலந்திருந்தால், சிலரால் சரியாக சுவாசிக்க முடியாமலும் போகலாம்.
உணவு அலர்ஜி

இன்று, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது உணவு அலர்ஜி. சில குழந்தைகளுக்கு பால் குடித்தவுடன் ஒவ்வாமை ஏற்பட்டு பேதியாகும். இதற்கு 'லாக்டோஸ் இன்டாலரன்ஸ் அலர்ஜி’ என்று பெயர். இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் எதுவும் ஒப்புக்கொள்ளாது. முட்டை, வேர்க்கடலை, கொட்டை வகை உணவுகள், கடல் மீன்கள், இறால், நண்டு, செர்ரி வகைப் பழங்கள் ஆகியவை பெரும்பாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சாப்பிட்ட உடனோ அல்லது சாப்பிட்ட சில மணி நேரங்களிலோ ஒவ்வாமை வெளிப்படும். ரத்தப் பரிசோதனை செய்து இந்த ஒவ்வாமையைக் கண்டறியலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
• உணவை வாயில் வைத்தவுடன் கூசும்.

• சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம். உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.
• குரல்வளையில் மாற்றங்களை உணரலாம். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
• மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
மருந்து அலர்ஜி
சாதாரணக் காய்ச்சலுக்கு ஊசி போடப் போய், ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவங்கள் அதிகம் அரங்கேறியுள்ளன. மருந்துகூட ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்றாலும் ஆஸ்பிரின், பென்சிலின், இன்சுலின் தடுப்பு ஊசி போன்றவை பெருமளவு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. சாதாரண அரிப்புப் பிரச்னையில் தொடங்கி உயிரிழப்பு வரை நேரலாம். களிம்பு போன்ற மருந்துகளை பேட்ச் டெஸ்ட் எடுத்து அரிப்பு ஏற்படுகிறதா என்பதைப் பார்த்துவிட்டு பிறகு பயன்படுத்துவதன்மூலம் பிரச்னையைத் தவிர்க்கலாம். ரத்தப் பரிசோதனை மூலமும், நோயாளி சொல்லும் மருந்துகளின் விபரங்களைக்கொண்டும் மருத்துவர் ஒவ்வாமையைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப மருந்து அளித்தால், பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
புற ஊதாக்கதிர் அலர்ஜி
சூரியனில் இருந்துவரும் புற ஊதாக் கதிர்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். தோலில் கொப்புளம், நிறம் மங்குதல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். சன் ஸ்கிரீன் லோஷன் போடுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். சன் ஸ்கிரீன் அளவு எஸ்.பி.எஃப். 15-க்கு மேல் இருக்க வேண்டும்.


தவிர்க்க வேண்டியவை எவை?
யாருக்கு எதனால் ஒவ்வாமை ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அதைத் தவிர்ப்பதன் மூலம் பிரச்னையை சமாளிக்கலாம். என்றாலும்

ஒவ்வாமையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள ஸ்டீராய்டு வகை மருந்துகள் பயன்படுகின்றன. முள்ளை முள்ளால் எடுப்பது போல், ஒவ்வாமையை ஏற்படுத்திய பொருளின் ஆன்டிஜினை மிகச் சிறிய அளவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பதன் மூலம் நோயாளிக்கு ஒவ்வாமைத் தொல்லைகளைக் குறைக்க முடியும். இதனை 'இம்யூனோதெரபி’ (Immunotherapy) என்பர். இதனை ஊசி மூலமாகவோ அல்லது நாக்கின் அடியில் வைத்துச் சாப்பிடும் மருந்தாகவோ கொடுப்பார்கள்.
ஒவ்வாமையிலிருந்து எளிதில் மீள...
சுய மருத்துவம் கூடாது. ஒருவருக்கு எதனால் ஒவ்வாமை உண்டாகிறது என்பதை மருத்துவரின் உதவியுடன் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்றால், அந்த மருந்தின் பெயரைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல், தலைவலி என எந்தப் பிரச்னைக்கு மருத்துவரைப் பார்த்தாலும், உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் மருந்து விவரங்களையும் அவரிடம் சொல்லிவிடுங்கள். இப்படிச் செய்தால்... ஒவ்வாமை, இனி இல்லாமை என்ற நிலை ஏற்படும்.
- பா.பிரவீன்குமார்,
உமா ஷக்தி
படங்கள்: ரா.மூகாம்பிகை