அவேர்னஸ்
##~## |
மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு தகவல்களை சென்ற இதழில் பேசியிருந்தார், சென்னையைச் சேர்ந்த மார்பக புற்றுநோய் மருத்துவ நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா. அது தொடர்பான மேலும் பல சந்தேகங்கள் தெளிய, தொடர்கிறார் இந்த இதழிலும்.
''பெண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு கேன்சர் அல்லாத கட்டிகள்தான் 80 சதவிகிதம் வருகின்றன. அதனால் கட்டிகள் எல்லாம் கேன்சர் என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், பரிசோதனை செய்து தெளிவடைவது முக்கியம். ஒருவேளை மார்பகப் புற்று ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், அதிக செலவின்றி நிச்சயம் குணப்படுத்திவிடலாம். நோயிலிருந்து மீண்டவர்கள் இயல்பான வாழ்க்கை வாழலாம், தாம்பத்யத்திலும் ஈடுபடலாம். மேலும், மார்பகப் புற்று என்பது தொற்று நோயும் அல்ல.
இது ஒருபுறம் இருக்க, மார்பகப் புற்று பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டால் 'மார்பகத்தை அகற்றியாக வேண்டுமா?’ என்பதுதான் இன்று பெண்களின் மனதில் புரளும் கேள்வி. ஏற்கெனவே சொல்லியதைப் போல, கட்டி ஆரம்பக் கட்டத்தில், சிறியதாக இருக்கும்பட்சத்தில் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம். ஆனால், அது பரவி மற்ற உறுப்புகளையும் சிதைக்கும் என்கிற நிலைக்கு முற்றியிருந்தால், மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டி வரும்.
பொதுவாக மார்பகப் புற்றுநோயை மருத்துவரின் நேரடி பரிசோதனையின் மூலம் மேமோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், திசுப்பரிசோதனை உள்ளிட்டவை மூலமாக தெளிவாகக் கண்டறிய முடியும். ஒருவேளை உறுதி செய்யப்பட்டால், உடனே 'அறுவை சிகிச்சை’ என்ற முடிவெடுக்காமல், அந்த செல்கள் உடம்பில் வேறு எங்கும் பரவி உள்ளதா என்பதைக் கண்டறிய, கட்டியின் பரிமாணத்தைப் பொறுத்து... நுரையீரல் எக்ஸ்ரே அல்லது சி.டி ஸ்கேன், கல்லீரல் பரிசோதனை (ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன்), எலும்பில் பரவியுள்ளதா என்பதை அறிய எலும்பு ஸ்கேன் போன்றவற்றை செய்ய வேண்டும்.

மார்பகத்தில் இருக்கும் கட்டி சிறியதாக (2 செ.மீட்டருக்குள்) இருந்து, உடம்பில் வேறு எங்கும் பரவ வாய்ப்பில்லாமல் இருந்தால் அறுவை சிகிச்சையில் அகற்றிவிட்டு, மார்பகத்தை பாதுகாப்பதோடு, ரேடியோதெரபி (கதிர்வீச்சு) சிகிச்சை செய்ய வேண்டும். ஒரு வாரம் கழித்து வரும் மருத்துவ ஆய்வறிக்கை வைத்தே கீமோதெரபி (வேண்டாத செல்களை அழிக்கக் கூடிய திறன் கொண்ட மருந்துகளை ரத்த ஓட்டத்தில் கலக்க செய்வது) செய்ய வேண்டுமா என்பது தீர்மானிக்கப்படும். அதற்கு நோயாளியின் வயது, உடல்நிலை, நோயின் தீவிரம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
ஒருவேளை, ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகள் மார்பகத்தில் இருந்தால், மார்பகத்தை அகற்றித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு கட்டாய சூழலில் மார்பகத்தை அகற்றியபின் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் (பார்க்க: பெட்டிச் செய்தி).

சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த 83 வயது பாட்டிக்கு, ஒரு மார்பகத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 'எனக்கு அவமானமா இருக்கு’ என்று அவர் அழுதார், புலம்பினார். 53 வயதில் இருந்த இன்னொரு அம்மா சிகிச்சைக்கு வந்தபோது, அவருக்கு அறுவை சிகிச்சை தேவையாக இருக்கவில்லை. ஆனால் அவரோ, 'எதுக்கு ரிஸ்க்? ஒரு மார்பகத்தை எடுத்துடுங்க. மார்பகத்தைவிட உயிர் முக்கியம் இல்லையா..?’ என்றார். எனவே, இது ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்தது.
மார்பகத்தை நீக்கியவர்களுக்கு பிரத்யேக சிலிகான் மார்பகம் கிடைக்கிறது. விலை 8,000 ரூபாய் வரை. அந்தளவுக்கு செலவு செய்ய முடியாதவர்கள், எளிமையாக 'பேடட் பிரா’ பயன்படுத்தலாம். கண்ணில் பார்வைக் குறைபாடு என்றால் கண்ணாடி அணிந்து கொள்வதுபோல்தான் இதுவும்!'' என்று எளிதாக புரிய வைத்தார் டாக்டர்.
- ம.பிரியதர்ஷினி

வலது அல்லது இடது என அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மார்பகத்தின் பக்கமிருக்கும் கையில் ஊசி, ரத்தப் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டாம். இரண்டு மார்பகத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், இரண்டு கைகளிலுமே ஊசி, ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவற்றை தவிர்த்து, வேறு பாகங்களில் செய்துகொள்ளலாம்.

சிகிச்சை மார்பகத்தின் பக்கமிருக்கும் கையில் இறுக்கமாக கைக்கடிகாரமோ, ஆபரணமோ அணிவதைத் தவிர்ப்பதுடன், கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். எளிமையான வேலைகள் மட்டுமே செய்ய வேண்டும்.

சிகிச்சை செய்யப்பட்ட மார்பக பக்க கையில் சூடு, வெட்டுக்காயம், பூச்சிக்கடி, நகங்களை பற்களால் கடிப்பது போன்ற கிருமித் தொற்றுக்கு வழி வகுக்கும் செயல்கள் இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

கை வீக்கமடைந்தாலோ அல்லது காய்ச்சலோடு வலி அதிகரித்து கை சிவந்துவிட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சிகிச்சைக்கு பிறகு குறைந்தது 3 - 4 வார ஓய்வு முக்கியம்.