'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

##~## |
கீழே விழுந்துகிடந்த அத்திப் பழங்களை அள்ளி முந்தானையில் முடிந்துகொண்ட வாசம்பா, ''தரையில இவ்வளவு பழம் கிடக்குதே... கூடையைத்தான் கொண்டாரணும்போல இருக்கு.
பெரிய நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையா இருந்து காய் பழுக்க ஆரம்பிச்சிடுச்சுன்னா, தானாவே உதிர்ந்துடும் வாசம்பா.
''பழுத்த பழம் கொம்பில் நிக்குமா? ஆமா... ஏன் அம்மணி, இலை, பிஞ்சு, காய், வேர்னு அத்தனையையும் பறிச்சிட்டிருக்க?''
''அத்தி மரத்தோட பட்டை, பிஞ்சு, காய் எல்லாமே வயித்துப் பிரச்னையைப் போக்குற அருமருந்து. அத்திப் பிஞ்சு, கோவைப் பிஞ்சு, மாம்பட்டை இதுகூட வாழைப்பூச் சாறைவிட்டு அரைச்சு சுண்டைக்காய் அளவு லேகியம் மாதிரி உருட்டி தினமும் ரெண்டு வேளை வெந்நீர்ல போட்டு சாப்பிட்டு வந்தா, மூல உபத்திரவம், வயித்துப்போக்கு, ஆசனக்கடுப்பு, மலச்சிக்கல்னு எல்லாமே சரியாயிரும்.

அத்திப்பட்டைகூட நாவல்பட்டை, நறுவிளம்பட்டை, கருவேலம்பட்டை சமமா எடுத்து இடிச்சு, அதுல ஒரு ஸ்பூன் எடுத்துக் கொதிக்கிற நீர்ல ஊறவெச்சு வடிகட்டி தெனமும் மூணு வேளை சாப்பிட்டு வந்தாப்போதும், ரத்தபேதி, சீதபேதி எல்லாமே ஓடிரும்.
அத்தி மரத்தோட துளிர் வேரை அரைச்சு பால்ல கலந்து சாப்பிட்டுவந்தா, எரிச்சல், உடம்பு சூடு குறையும். மயக்கம், வாந்தி இருந்தாலும் உடனே சரியாயிரும்.''
''அப்போ அத்தி மரம் அத்தனையும் வரம்னு சொல்லு....’ என்ற வாசம்பா, பழத்தை இரண்டாக அறுத்தவள், ''அய்யய்ய... என்ன அம்மணி, இந்தப் பழத்துல புழு, பூச்சி எல்லாமே இருக்கே... இதை எப்படிச் சாப்பிடுறது?'' என முகம் சுளித்தாள்.
''அத்திப்பழத்துல மெல்லிசாப் புழுக்கள் இருக்கத்தான் செய்யும். அதனால, அதை நல்லாப் பதப்படுத்தி, நிழல்ல காயவெச்சு அப்புறம்தான் சாப்பிடணும் வாசம்பா. தெனமும் ரெண்டு பழம் சாப்பிட்டுவந்தா, ரத்த விருத்தியடையும். உடம்பு தேறாம மெலிஞ்சுபோனவங்க, சாப்பிட்டு வந்தா, நல்லாக் குண்டாயிருவாங்க.
தெனமும் அஞ்சு அத்திப் பழத்தை சாப்பிட்டுவந்தா, மலச்சிக்கல் பிரச்னை இருக்காது.''
''இரு... மரத்து மேல ஏறி, இலையைப் பறிச்சுத் தாரேன்? என்று வாசம்பா வரிந்து கட்டிக்கொண்டு ஏற முயற்சிக்க,

''அடியே... அத்தி மரத்தை எட்டி நின்னுதான் பார்க்கோணும். மரத்துல ஏறினா, குளவிகள் கொட்டிரும். அத்தி மரம் இல்லேன்னா, குளவிகளே இல்லை. காலங்காலமா குளவிங்க வசிக்கிற வீடும் சமாதியும் ரெண்டுமே அத்தி மரம்தான். நிறையப் பூக்கள் இருக்கிறதைதான் அத்திப் பூ. பூ இதழ் மூடி பிஞ்சு போல இருக்கும்.
ஓஹோ.... காணாமல் பூப்பூக்கும் கண்டு காய்காய்க்குங்கிறதுக்கு அர்த்தம் அத்திப்பூவுக்குதானா... இப்பல்லாம், நாட்டு மருந்து கடைகள்ல ஆஞ்சநேயருக்கு வடைமாலை கட்டியிருக்கிற மாதிரி தொங்க விட்டிருக்கானே... அது அத்திப்பழம் தானே அம்மணி.
ஆமா... அதேதான். அத்திப்பழத்தை தேன்ல ஊற வெச்சு விக்கிறாங்க...
நெறைய அத்தி மரம் இருக்கு. அதுல சீமை அத்தின்னு ஒண்ணு இருக்கு. இந்தப் பழத்தை தெனமும் ஒண்ணு சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளி, வெண்குஷ்டம் குணமாயிடும். இதை அப்படியே அரைச்சு, பன்னீர் விட்டு வெண் புள்ளி மேல பூசினா சரியாயிடும். தோலோட நிறத்தையே பளிங்கும் மாதிரி மாத்திடும் வாசம்பா.
அத்திப்பிஞ்சை பருப்போட சேர்த்து வேக வெச்சு, பூண்டு, மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து கூட்டு மாதிரி செஞ்சு சாப்பிட்டால், உள் மூலம், வெளி மூலம், குடல் சம்பந்தமான நோயும் குணமாயிரும்.
பேசியபடியே, அன்னம்மா வீட்டு வாசலில் வாழை தோரணம் தொங்குவதைப் பார்த்த வாசம்பா, மறந்தே போயிட்டேன் அம்மணி.... அன்னம்மா பேத்திக்கு நாளைக்கு திருவாரூர்ல கல்யாணம்... ஒத்தாசைக்கு முந்தின நாளே வரச்சொன்னா...
அதனால என்ன விடிஞ்சதும், ஓடிருவோம். ரெடியாயிரு... என்றபடியே நடந்தவர்களை அங்கே வந்த ஊர் மணியக்காரரான அய்யனாரு, ''இந்தாங்கம்மா, தேன் அடை பறிச்சு அதுல எடுத்த தேன். எத்தனையோ பேருக்கு வைத்தியம் பாக்கறீங்க... கை வைத்தியம் சொல்றீங்க... இது உங்களுக்காக கொண்டாந்தது'' என்றபடியே நீட்ட...
இருவர் முகத்திலும் ’தேன்’ வடிந்தது. அடுத்து என்ன தேன் அரங்கம்தான்...
- பாட்டிகள் பேசுவார்கள்...