Published:Updated:

குட் நைட்

குட் நைட்

குட் நைட்
##~##

சென்ற இதழில் குழந்தையின்மைக்கு செக்ஸ் பிரச்னைகள் எப்படிக் காரணமாக அமைகின்றன என்பதுபற்றிப் பார்த்தோம். இந்த இதழிலும் அது பற்றி இன்னும் சில கூடுதல் தகவல்களைப் பார்ப்போம். 

பிராப்ளம் ஆஃப் காய்டல் ஃப்ரீக்வென்ஸி (Problems of coital frequency) என்கிற ஒரு பிரச்னை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. சில தம்பதிகள் குழந்தை வேண்டும் என்கிற ஆசையில், உற்சாகத்தில் அடிக்கடி ஒரே நாளில் இரண்டு தடவைக்கும் அதிகமாக உடல் உறவில் ஈடுபடுவார்கள். சதா இதே வேலையாக இருப்பார்கள். இதனால் விந்தின் அளவு குறைந்துபோவதுடன், அது அடர்த்தி அற்றதாகவும், தரமற்றதாகவும் இருந்துவிடலாம். இதனாலும் குழந்தை இல்லாமல் போய்விடும். மேலும் அடிக்கடி அளவுக்கு அதிகமாக அதீத ஆர்வத்தில் உடல் உறவில் ஈடுபடுவதால் விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். இதனாலும் குழந்தை பாக்கியம் தள்ளிப்போய்விடும்.

 இன்னும் சிலர் நீண்ட இடைவெளிவிட்டு உடல் உறவில் ஈடுபடுவார்கள். பணிச் சூழல் காரணமாகவோ, ஆர்வமின்மை காரணமாகவோ, அடிக்கடி உடல் உறவில் ஈடுபட மாட்டார்கள். அதாவது

குட் நைட்

பெண்ணுக்குக் கருமுட்டை வெளியாகும் நாட்களில் அந்தப் பெண்ணுடன் உடல் உறவில் ஈடுபட்டால்தானே, குழந்தை உண்டாகும்? அப்படி குழந்தை உண்டாகக்கூடிய வாய்ப்பு இருந்தும்கூட, அவர்கள் உடல் உறவில் அந்தச் சமயத்தில் ஈடுபடாததின் காரணமாகவும் குழந்தை உண்டாவது தள்ளிப்போகலாம்.

 குழந்தை இல்லாத பல தம்பதிகளுக்கு இன்னுமொரு தவறான நம்பிக்கை உள்ளது. உடல் உறவில் ஈடுபடாமலே இருந்து நீண்ட இடைவெளிவிட்டு உடல் உறவில் ஈடுபட்டால், விந்து திடமாகவும், தரமாகவும், நிறைய உயிரணுக்களுடனும் இருக்கும் என்று நம்பிக்கொண்டு 'சேர்த்துவைத்து செலவளிப்பது மாதிரி’ உறவில் ஈடுபடுவார்கள். இதுவும் தவறான நம்பிக்கையே.

 சிலர் உடல் உறவு எளிதாகவும் இனிமையாகவும் இருக்கும் என்று செயற்கையாக உராய்வு எண்ணெய்களையும் (Lubrication) விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், வாஸலின் போன்றவற்றையும் பிறப்புறுப்புகளில் தடவிக்கொண்டு உடல் உறவில் ஈடுபடுவார்கள். இதுபோன்ற ஃபால்டி செக்ஸுவல் டெக்னிக் (Faulty Sexual Tehnic) களும் குழந்தையின்மைக்குத் தடைக் கற்களாக அமைந்துவிடும். எப்படி எனில் எளிதான உராய்வுக்காக இவர்கள் பயன்படுத்தும் எண்ணெய் வழவழப்பினைத் தாண்டி பெண்ணின் பிறப்புறுக்கு உள்ளே ஆணின் விந்தும், அதில் உள்ள உயிரணுவும் செல்ல முடியாமல் இருந்துவிடும். இதனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல்போய்விடும்.

 இன்னும் சில பெண்கள் 'தான் சுத்தமாக இருக்க வேண்டும்’ என்கிற அதீத ஆர்வத்தில் பிறப்புறுப்பில் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கிற முறையிலோ, செயற்கையான சோப், கிரீம்களைப் பயன்படுத்தியோ பிறப்புறுப்பை(frequent chemical Touching)அடிக்கடி சுத்தம் செய்துகொண்டே இருப்பார்கள். இதனால் பிறப்புறுப்பின் இயற்கைத் தன்மையும் சூழலும் கெட்டுப்போய்விடும். இதனாலும் குழந்தை உண்டாவது தள்ளிப்போகும்.

 தவறான நிலைகளில் ஈடுபடுகிற உடல் உறவு முறைகளுக்கு இம்ப்ராப்பர் செக்ஸுவல் பொசிஷன் (improper sexual positions) என்று பெயர். ஆண் கீழிருந்தும், பெண் மேலிருந்த நிலையிலும், சில தம்பதிகள் பக்கவாட்டு நிலையில் ஈடுபடக்கூடும். இந்த உறவு நிலைகளில் பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு சரியாக உள் நுழையாது. இன்னும் சிலர், உடலுறவு  முடிந்த அடுத்த நொடியே எழுந்துவிடுவார்கள். இதுவும் குழந்தை பிறப்புக்குத் தடையாகலாம்.

 கோலாகலமாக பலர் அட்சதை தூவ, உறவினர்கள் பாசத்தைத் தித்திப்புடன் பந்தி வைக்க... திருமணம் தடபுடலாக நடந்தேறி இருக்கலாம். ஆனால், தனிமையில் தம்பதிக்கு இடையே சந்தோஷமாக உறவு நிகழ்ந்து இருக்காது(unconsummated marraige). வெளி உலகத்துக்குத் தெரியாத இதுபோன்ற மர்மத் தடைகள்கூட குழந்தை இல்லாமைக்குக் காரணமாக அமைந்துவிடலாம்.

  . திருமணம் நடைபெற்ற நாள் அன்று சடங்கு சம்பிரதாய, கொடுக்கல் வாங்கள் போன்ற நடமுறைகளில் ஏற்படுகிற சிக்கல்... சம்பந்தப்பட்ட அந்த இருவரின் வாழ்க்கையையே கசப்பான உறவாக்கிவிட்டுவிடலாம்.

 குடி, போதை போன்ற தவறான பழக்கம் உள்ளவர்களுக்கும் குழந்தை பாக்கியம் தள்ளிப்போகலாம்.

 நீலப்படங்களைப் பார்ப்பதற்கு அடிமையானவர்கள்(Phornographic addiction) மனைவியுடன் உடல் உறவில் ஈடுபடுவதில் அவ்வளவு ஆர்வமாக இருக்கமாட்டார்கள். நிழலில் செக்ஸ் உறவு நிலையை விதம் விதமாக ரசித்துப் பார்ப்பவர்கள், நிஜத்தில் அதில் முழு ஈடுபாட்டுடன் இறங்க மாட்டார்கள்.

 இன்னொரு ரகத்தினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பம், மனைவி, இல்லறம்,  தூக்கம், செக்ஸ் சந்தோஷம் எல்லாமே அவர்களின் தொழிலுக்கு அடுத்ததுதான். இரவு பகல் என்று நேரங்காலம் பார்க்காமல் மாங்கு மாங்கென்று உழைப்பார்கள். அதிலேயே அவர்களுக்கான எனர்ஜி, மகிழ்ச்சி, உற்சாகம், மன திருப்தி எல்லாமும் கிடைப்பதாக நம்புவர்கள். இதுபோன்ற  உழைப்பு அடிமைகள் (workalcocolic) இல்லற உறவில் அரிதாகத்தான் ஈடுபடுவார்கள். நிலைமை இப்படி இருந்தால் எப்படி குழந்தை பிறக்கும்?

அடுத்த இதழில்...குழந்தையின்மையால் ஏற்படுகிற செக்ஸ் பிரச்னைகளைப் பார்ப்போம்...

- இடைவேளை...