Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

உடம்பில் நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதற்கே அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் கிருமிகள் மூலம்தான் நோய்கள் உண்டாகிறது என்பதை நிரூபிக்க, ஒரு மனிதர் நோய்க் கிருமிகளை பாலுட்டி, சோறூட்டி(!?) வளர்த்தார் என்றால் நம்ப முடிகிறதா?

 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனி நாட்டில் பிறந்த ராபர்ட் ஹென்ரிச் ஹெர்மன் காக் (ROBERT HEINRICH HERMAN KOCH) சுருக்கமாக காக். சிறு வயதிலிருந்தே காக், படிப்பில் படுசுட்டி.  அறிவியலிலும் கணிதத்திலும் மிகச் சிறந்த மாணவனாக விளங்கிய காக், மருத்துவராவதை தனது லட்சியமாகக்கொண்டிருந்தார். அதேபோல் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்தார்.

மருத்துவ மாணவராக இருக்கும்போதே, தனது ஆசிரியர் டாக்டர் ஹென்லியிடம் இணைந்து கர்ப்பப்பைக்குச் செல்லும் நரம்புகள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அடுத்த சில மாதங்களிலேயே உடலில் சுரக்கும் திரவங்கள் பற்றித் தனியாகவே ஓர் ஆராய்ச்சி செய்தார். 1866-ல் மருத்துவராகப் பட்டம் பெற்று அறுவைசிகிச்சை மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கிய காக், பிறகு நுண்ணுயிரிகள் பற்றி ஆராய்ச்சிசெய்தார். கால்நடைகளைத் தாக்கும் 'ஆந்த்ராக்ஸ்’ என்ற நோய்,  'பாசில்லஸ் ஆந்த்ராசிஸ்’ எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது என்று தெளிவாக உணர்த்தினார் காக்.

முன்னோடிகள்

ஒரு கண்ணாடித் தகட்டில் பல்வேறு சாயங்களைப் பயன்படுத்தி மைக்ரோஸ்கோப் மூலம் பாக்டீரியாக்களைப் பார்க்கலாம் என்று காக் நிரூபித்த முறைதான், இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோய்கள் தானாக ஏற்படுவதில்லை, அது கிருமிகள் மூலம்தான் ஏற்படுகிறது என்பதைத் தெளிவாகவும், அறிவியல்ரீதியாகவும் நிரூபித்தார்.

தொடர் ஆராய்ச்சிகளால் காக், ஜெர்மனி அரசின் சுகாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட காக்கின் நான்கு கோட்பாடுகள்  (KOCH’S- FOUR POSTULATES) இன்றளவும் உலகப் பிரசித்தம். இந்தக் கோட்பாடுகள் நோய்க்கும் கிருமிக்கும் உள்ள தொடர்பினை விளக்கும் சித்தாந்தங்களாக விளங்குகின்றன.  இந்த நான்கு கோட்பாடுகள்தான், நவீன நுண்ணுயிரி விஞ்ஞானத்தின் அடிப்படை.

நோயாளியைப் பரிசோதனை செய்யும் அறையின் அருகிலேயே தனது ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்திருந்தார் காக். முதலில் உருளைக்கிழங்குத் துண்டுகளில் பாக்டீரியாக்களை வளர்க்க முயற்சி செய்தார். பிறகு ஜெலாட்டினை வைத்து முயற்சிசெய்த பிறகும் தோல்வியே கண்டார். பிறகு அகர் (AGAR)  எனப்படும் சர்க்கரைக் கரைசல் (POLY SACCHARIDES) பாக்டீரியாக்களை வளர்ப்பதற்கு ஏதுவான ஊடகம் என்று கண்டறிந்தார். நவீன காலத்திலும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.

உலகத்தையே உலுக்கிய காலரா நோய் பற்றி எகிப்தில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய காக்கினால், ஆரம்பத்தில் காலராவை ஏற்படுத்தும் கிருமியைத் தனியே பிரித்தெடுக்க இயலவில்லை.  மனம் தளராது போராடி 'விப்ரியோ காலரா’ எனும் நோய்க் கிருமிதான் காலரா நோயைப் பரப்புகிறது என்று கிருமியைப் பிரித்தெடுத்து வெற்றி கண்டது நம் இந்தியாவில்தான்!  

இதன் மூலம் இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் காலரா தடுப்பு முறைகளைக் கண்டறிந்த காக்கிற்கு, 1,00,000 ஜெர்மன் நாணயங்கள் பரிசு கிடைத்தது.

காசநோய் என்பது பரம்பரை நோய் அல்ல; 'மைகோபாக்டீரியம் ட்யூபர் குளோசிஸ்’(MYCOBACTERIUM TUBERCULOSIS) எனும் கிருமியால் ஏற்படுகிறது என்று கண்டறிந்த காக்கிற்கு, 1905-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் காசநோய் வெவ்வேறு கிருமிகளால் என்பதைக் கண்டறிந்தவரும் காக் தான்.. 1901ம் ஆண்டு காசநோய்க்காக லண்டனில் நடந்த உலகளாவிய மாநாட்டில் காசநோய் குறித்த இந்தக் கருத்தை  காக் தெரிவித்தபோது, ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறியதுதான் உண்மை என்று பின்னாளில் உலகம் ஏற்றுக்கொண்டது.

- திரும்பிப் பார்ப்போம்...