முன்னோடிகள்

##~## |
19-ம் நூற்றாண்டின் துவக்கம் அது. அறுவைசிகிச்சை அரங்கத்தின் சிறிய அறை. நோயாளியின் அலறல் கேட்கக் கூடாது என்பதற்காக, ஒரு மேஜையின் மேல் கிடத்தப்பட்ட நோயாளியின் வாய் இறுகக் கட்டப்படுகிறது. சாதாரண உடையில் இருந்த மருத்துவர் ஒரு கத்தியால் நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்கிறார். நோயாளியின் ரத்தத்தை உறிஞ்சுவதற்காக அங்கு மணல் குவிக்கப்பட்டிருகிறது. சிகிச்சை முடிந்ததும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் அலமாரியில் அடுக்கப்படுகின்றன. அதே உபகரணங்களைக் கொண்டு அடுத்த நோயாளிக்கு அறுவைசிகிச்சையைத் தொடங்குகிறார்.
அடுத்துவந்த இரண்டு நாட்களில் நோய்த் தொற்றால் நோயாளி மரணம்... இப்படி ஒரு சம்பவத்தை ஜீரணிக்க முடியுமா நம்மால்? ஆனால் இதுதான் உண்மை. இந்த நிலையை மாற்றி நவீன அறுவை சிகிச்சைக்கு அடித்தளமிட்டவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோசப் லிஸ்டர்.
1827, ஏப்ரல் 5, வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஜாக்ஸன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் ஜோசப் லிஸ்டர். அன்றைய காலத்தில் ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மருத்துவ ஆராய்ச்சி மொழிகளை இளமையிலேயே கற்றுத்தேர்ந்த லிஸ்டர், முதலில் இளங்கலைப் பட்டம் பெற்றது தாவரவியலில்தான். பிறகு மருத்துவப் பட்டம் பெற்று தனது 26-வது வயதிலேயே ராயல் காலேஜில் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்காக நுழைந்தார். பின்னர், புகழ்பெற்ற டாக்டர் ஜேம்ஸ் சைம்ஸ் என்ற பிரபல அறுவைசிகிச்சை நிபுணரிடம் உதவியாளராக சேர்ந்தார்.

அறுவைசிகிச்சை செய்யப்படும் நோயாளிகள் அனைவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு அழற்சி ஏற்படுவதைக் கண்ணுற்ற லிஸ்டர் மிகுந்த துயரம் கொண்டார். ரத்தத்தில் பரவுகின்ற நோய்த்தொற்றால் நோயாளிகள் அதிக அளவில் இறக்க நேரிடுகிறது என்பதை அறிந்து நோய்த் தொற்று வராமல் தடுப்பதற்கான ஆராய்ச்சியில் இறங்கினார்.
ருஞ்ச் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கார்பாலிக் ஆசிட் ஃபீனால், மரங்கள் கெட்டுப்போகாமல் இருக்க மேற்பூச்சாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. நல்ல வாசனையுடன் உள்ள அந்தத் திரவம் இங்கிலாந்து நாட்டுச் சாக்கடைகளின் துர்நாற்றம் போக்குவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் நோய்த் தாக்கம் குறைவதைக் கண்ணுற்ற லிஸ்டர், அதே திரவத்தைப் பயன்படுத்த எண்ணினார்.
1865 ஆகஸ்ட் மாதம் ஒரு விபத்தில் சிக்கி எலும்பு முறிவுடன் தோலும் சிதைந்து இருந்த 11 வயதுச் சிறுவனுக்கு, கார்பாலிக் அமிலம் நனைத்த துணியினை வைத்து 'கட்டு’ கட்டினார் லிஸ்டர். நான்காவது நாள் கட்டைப் பிரித்தபோது சிறிதளவுகூட கிருமியின் தாக்கம் இல்லாததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். தோல்புண் ஆறி, அசையாமல் வைத்திருந்த காரணத்தால், அறுவைசிகிச்சை இல்லாமலேயே, ஆறே வாரங்களில் எலும்பும் சேர்ந்துவிட்டது.
தனது ஆராய்ச்சியின் முடிவுகளை, புகழ்பெற்ற 'லான்செட்’ பத்திரிக்கையில் 'காய சிகிச்சைக்கான புதுமுறைகள்’ என்ற பெயரில் கட்டுரைகளாக லிஸ்டர் வெளியிட்டார். அறுவைசிகிச்சையின்போது தொற்றுநீக்கம் செய்தல் எனும் ஆராய்ச்சிக் கட்டுரையை பிரிட்டன் மருத்துவக் கழகத்தில் சமர்ப்பித்து பின்ஸ் பிரிடேன் மருத்துவ இதழிலும் வெளியிட்டார்.
லண்டன் மருத்துவச் சங்கத்தின் தலைவராக 1881-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ்டர் முழங்கால் சில் அறுவைசிகிச்சையிலும், மார்பகப் புற்றுநோய் அறுவைசிகிச்சையிலும் நவீன முறைகளைப் புகுத்தினார். தனது கருத்தரங்க உரைகளால் அனைவரையும் கவர்ந்திழுத்த லிஸ்டர், 'நோய்த் தொற்று தடுப்புமுறைகளின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். ராயல் சொசைட்டியின் தலைவராக ஐந்து ஆண்டுகள் வீற்றிருந்த லிஸ்டர், 1912 பிப்ரவரி 10-ம் நாள் இயற்கை எய்தினார்.
- திரும்பிப் பார்ப்போம்...
ஜோசப் லிஸ்டரின் விருது லிஸ்ட்!
1883ல் உயரிய விருதான 'பரோநெட்’ அதனினும் உயரிய விருதான 'பரோன்’ எனும் விருதை 1897-லும் பெற்றார்.
சிறப்பு விருதுகள் பெற்றவர்களின் தரவரிசையில் முதல் 12 இடங்களுக்குள் இடம் பெற்றவர் என்பது மருத்துவ உலகத்திற்குக் கிடைத்த கௌரவம்.
அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதிற்கு லிஸ்டர் பதக்கம் எனப் பெயரிடப்பட்டது.
இங்கிலாந்தின் நோய்த்தடுப்புக் கல்லூரிக்கு லிஸ்டர் பெயரிடப்பட்டது.
இரண்டு அஞ்சல் தலை லிஸ்டரின் முகம் தாங்கி வெளியிடப்பட்டதும், லண்டனின் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டதும் லிஸ்டர் இறந்த பின் பெற்ற கௌரவம்.
ஒரு நோய்க் கிருமிக்கு லிஸ்டரின் நினைவாக, லிஸ்டீரியா எனப் பெயரிடப்பட்டதுதான் விந்தையான விஷயம்!