முன்னோடிகள்

##~## |
'நோய்க்கூற்றியல்’ (PATHOLOGY)என்ற ஒரு துறை உருவாகக் காரணமானவர் 'விர்சாவ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ருடால்ஃப் கார்ல் விர்சாவ். 'நோய்க்கூற்றியலின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார் விர்சாவ்.
1821-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார் விர்சாவ். அளவியலாளர், நோய்க்கூற்றியல் நிபுணர், வரலாற்று ஆசிரியர், உயிரியல் நிபுணர், அரசியல்வாதி எனப் பல்முக வித்தகரான விர்சாவ், சமூக மருத்துவத்தின் தூணாக விளங்கினார்.
கல்லூரிக் காலத்திலேயே மைக்ராஸ்கோப்பில் ஈடுபாடு காட்டிய விர்சாவ், விஞ்ஞான முறையில் இல்லாத அந்தக் கால ஜெர்மானிய மருத்துவத்தை அடியோடு மாற்றிக்காட்டினார். நோயின் தன்மையை ஆராய்தல், விலங்குகள் மூலம் ஆராய்ச்சிசெய்தல், நோயின் காரணமாக 'செல்’களில் ஏற்படும் மாற்றங்கள் என்று அனைத்திலும் ஆராய்ச்சி செய்தார்.
அளவில்லாக் கண்டுபிடிப்புகளை மருத்துவ உலகுக்கு அளித்த விர்சாவ் மிகவும் புகழ் பெற்றது, அவருடைய 'செல்’ கொள்கையினால்தான். ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 'செல்’களை முதலில் கண்டறிந்த விர்சாவ், ஒவ்வொரு செல்லும் பிறிதொரு 'செல்’லிலிருந்துதான் தோன்றுகின்றன என்பதை அறிவியல் ரீதியாக மெய்ப்பித்தார்.

இரைப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் இடது கழுத்துப் பகுதியின் அருகே நிணநீர்க்கட்டி காணப்படும் என்று வயிற்றுக்கும் கழுத்துக்கும் 'முடிச்சு’ப் போட்டு காண்பித்தவர் விர்சாவ். இன்றளவும் அது 'விர்சாவ் லிம்ப் நோட்’ (Lymph node) என்றுதான் அழைக்கப்படுகிறது.
காலில் உறைகின்ற ரத்தம், (THROMBOSIS)கட்டியாக உருமாறி, அதிலிருந்து பிரிந்த சிறுகட்டிகள் (EMBOLISM) நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக்குழாயை அடைத்து மரணத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி, அனைவரையும் வாய்பிளக்கவைத்தார் விர்சாவ். கடந்த சில ஆண்டுகளாக இந்த வகை மரணத்தைத் தடுப்பதற்காக பல செயல்முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை அந்த காலத்திலேயே சொன்னதோடு இல்லாமல், பல பிரேதப் பரிசோதனைகள் மூலம் நிரூபித்தவர் விர்சாவ். ரத்த நாளங்களில் ஏற்படும் காயம், உறையும் தன்மை அதிகரித்தல், ரத்த ஓட்டம் குறைதல் போன்ற மூன்று காரணிகளால் திராம்போசிஸ் ஏற்படுகிறது என்று நிரூபித்ததால், அவை இன்றளவும் 'விர்சாவின் மூன்று காரணிகள்’ (VIRCHOW’S TRIAD) என்றே அழைக்கப்படுகின்றன.
அனைத்து மருத்துவ மாணவர்களும் மைக்ராஸ்கோப் பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிட்ட விர்சாவ், 'நுண்ணோக்கியாய் இருங்கள்’ என்று மருத்துவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்தார். இதன் மூலம் நோயின் அறிகுறிகளை அறிந்ததோடு நில்லாமல் 'நோய்க்கூறியலின் ஒப்பீடு’ என்ற புதிய கோட்பாட்டின்படி விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வரும் நோயின் மாற்றங்களை ஒப்பீடு செய்து காட்டினார். பிரேதங்களையும் பரிசோதனை செய்வதற்கான வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.
அளவியலுக்காக ஒரு சங்கம் அமைத்ததன் மூலம் ஜெர்மனியின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் முக்கியப் பங்கு ஆற்றினார். 1885-ம் ஆண்டு கிரானியோமெட்ரி (VIRCHOW’S TRIAD) என்று மண்டை ஓடுகளை அளவிடும் முறையையும் அறிவித்தார்.
இதயக் கோளாறினால் 1902-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தனது 81-வது வயதில் உயிரிழந்த விர்சாவ் பெற்ற கௌரவம் கணக்கிலடங்காதது. அளவிட முடியாத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய விர்சாவின் பல கட்டுரைகள் மருத்துவ முறைகளை மாற்றிக் காட்டின. மருத்துவக் குறியீடுகள் பல 'விர்சாவ்’ பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.
இன்றும் ஜெர்மனியின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் வருடா வருடம் 'விர்சாவ் நினைவுப் பிரிவுரை’ நடத்தப்பட்டு வருகிறது.
- திரும்பிப் பார்ப்போம்...
விர்சாவும் அரசியலும்...
'' 'மருத்துவம்' என்பது சமூக அறிவியல்; 'அரசியல்’ என்பது, பரந்தொரு மருத்துவம்'' என்று முழங்கிய விர்சாவ், தைபஸ்(TYPHUS) நோயினால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டபோது, அதை நிவர்த்திசெய்யும் குழுத் தலைவராக அரசால் நியமிக்கப்பட்டார். அப்போது அவர் தந்த அறிக்கை, 'தைபஸ்’ நோயை மருந்தினாலோ சிறுசிறு சுகாதார மேம்பாட்டினாலோ நீக்க முடியாது. அரசியல்ரீதியாக அனைவருக்கும் கல்வி, ஜனநாயக உரிமை, செல்வ வளம் ஆகியவை வழங்கப்பட வேண்டும் என்றது.
1859-ம் ஆண்டு பெர்லின் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விர்சாவ், 1862-ம் ஆண்டு முன்னேற்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெர்லின் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாக்கடைக் கால்வாய்த் திட்டம் அமைத்துக் கொடுத்து 'சமூக மருத்துவம்’ என்ற துறை அமைவதற்குக் காரணமாகவும் அமைந்தார். ஜெர்மனியின் இரும்பு மனிதரான பிஸ்மார்க்கை எதிர்த்து அரசியல் செய்தவர் விர்சாவ் என்பது ஆச்சர்யமான விஷயம்!