முன்னோடிகள்

##~## |
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, கி.பி. 1628-ல், ரத்தத்தை இதயம்தான் இயக்குகிறது என்பதையும், அதை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதையும் விளக்கமாக எடுத்துக் கூறிய விந்தை மனிதர் வில்லியம் ஹார்வி - இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். மேயர் அலுவலகத்தில் வேலைபார்த்த தாமஸ் ஹார்வியின் மகனாக 1578-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி பிறந்தார். பள்ளிப் பருவத்தில் லத்தீன் மொழியைப் பயின்ற ஹார்வி, 1597-ல் பி.ஏ.பட்டம் பெற்று, 1599-ல் இத்தாலியின் படூவா (PADUA) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1602-ல் மருத்துவராகப் பட்டம் பெற்றார். அதே ஆண்டு இங்கிலாந்திலும் மருத்துவப் பட்டம் பெற்று, 1604-ல் லண்டன் மாநகரின் மருத்துவ நிபுணர்களின் கல்லூரியில் சேர்ந்தார். 1607-ல் பட்டம் பெற்ற இரு ஆண்டுகளிலேயே புகழ்பெற்ற பார்த்தலோமோ மருத்துவமனையின் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
தனது 37-வது வயதிலேயே விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹார்வி, ஜேம்ஸ் அரசரின் சிறப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
அன்றைய காலகட்டத்தில் கேலன் (Galen), ஆல்நஃபி (AL-NAFI) ஆகியோர் ரத்த ஓட்டம் பற்றி

விளக்கிய கருத்துக்களே உண்மை என நம்பப்பட்டது. ரத்தம் இதயத்தின் இரண்டு கீழ்ப்புற அறைகளுக்கு இடையே நுண்ணிய துளைகள் மூலம் செல்கிறது. இதயம் உடலில் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிலிருந்து வெளிச் செல்லும் தமனிகள் ரத்தத்தைக் குளிர்விக்கிறது என்று நம்பப்பட்டது. மேலும், இதய நுரையீரல் தொடர்புகள் பற்றி விளக்கம் எதுவும் இல்லாமல் இருந்தது.
1628-ம் ஆண்டு ரத்த ஓட்டம் பற்றி 72 பக்க நூலை வெளியிட்டார். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை வெளியிட, ஹார்வி மேற்கொண்ட ஆராய்ச்சிகள் ஏராளம். செயல்முறை இல்லாமல் தான் கணித்த கருத்துக்களை நூலில் தனியாகக் குறிப்பிட்டிருந்தது அவர் நேர்மையைக் காட்டுகிறது.
இந்தச் சூழ்நிலையில், மைக்ராஸ்கோப் இல்லாத காலகட்டத்தில் கையில் ஒரு லென்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு இதயத்தின் செயல்பாட்டையும், ரத்த ஓட்டத்தையும் கணித்தார் ஹார்வி. அவர் தெரிவித்த கருத்துக்கள்:
1. இதயம் நான்கு அறைகளைக் கொண்டது. 2. இதயத்தின் கீழ்புறத்தில் உள்ள இரு அறைகளும் (வென்டிரிக்கிள்) ஒரே சமயத்தில் இயங்குகின்றன. 3. இடது வென்டிரிக்கிள் இயங்குவதால் நாடித் துடிப்பு உண்டாகிறது. 4. வலது வென்டிரிக்கிள் இயங்கும்போது, ரத்தம் நுரையீரல் பகுதிக்குத் தள்ளப்படுகிறது.
அந்தக் கால விஞ்ஞானிகள் இந்தக் கருத்தை முதலில் ஏற்கவில்லை. ஆனால், கேலன் மேல் கொண்ட அபிமானத்தால், அவர் கருத்து தவறாக இருந்தாலும் அதையே ஏற்போம் என்று அறிவித்தனர். 'ஹார்வியின் கருத்துதான் உண்மை’ என்பதை பின்னர் உலகம் உணர்ந்து கொண்டதால், அவர் 'உடலியங்கியலின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.
கருவில் வளரும் சிசுவுக்கு இடது பக்க இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் மகா தமனிக்கும் (AORTA), வலது பக்கத்திலிருந்து செல்லும் நுரையீரல் தமனிக்கும் இடையே ஒரு ரத்தக் குழாய் மூலம் தொடர்பு உண்டு என்றும், நுரையீரல் இயங்காதபோது ரத்த ஓட்டம் நடைபெறுவதற்கு அது அவசியம் என்றும் ஹார்வி தெளிவுபடுத்தியது ஆச்சர்யம். அந்தக் குழாய் பிறகு விஞ்ஞானிகளால் மெய்ப்பிக்கப்பட்டு DUCTUS ARTERIOSUS என்று பெயரிடப்பட்டது.
இதயத்துக்கு வெளியே செல்லும் ரத்தத்தின் அளவை அளந்து (அளக்காமல்) சொன்னவர் ஹார்வி. ரத்த ஓட்டம் வட்ட வடிவில் நிகழ்கிறது; அசுத்த ரத்தம் சிரை மூலம் இதயத்திற்குச் செல்கிறது; சுத்த ரத்தம் தமனி மூலம் உடல் உறுப்புகளுக்குச் செல்கிறது என்பதை பாம்பு, மீன் போன்ற உயிரினங்கள் மூலம் நிரூபித்தார்.
''போதுமான கருவிகள் இல்லாததால், ரத்தம் தமனியிலிருந்து சிரைகளுக்குள் எவ்வாறு செல்கிறது என்பதை என்னால் கண்டறிய இயலவில்லை. மெல்லிய குழாய்கள் மூலம் இது நடைபெறலாம்'' என்று கணித்தார். பின்னாளில் CAPILLARIES என்று சொல்லப்படும் மெல்லிய ரத்தக் குழாய்களை 'மால்பீஜியன்’ என்பவர் கண்டறிந்தார்.
நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட ஹார்வி, 1657-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி தனது 79-வது வயதில் மரணம் அடைந்தார். அதன் பின்னர், பல ஆராய்ச்சி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் ஹார்வி பெயர் தாங்கி, அவர் புகழை நிலைநிறுத்தி வருகின்றன.
'கட்டி’ போட்ட ஹார்வி!
மனித உடலில் முழங்கையின் மேல் பகுதியை இறுக்கமாகக் கட்டினால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கீழ்ப்பகுதி வெளிறிப்போவதையும், குளிர்ச்சியாக இருப்பதையும், கட்டினைத் தளர்த்தும்போது ரத்தம் பாய்ந்து கீழ்ப் பகுதி சூடாவதையும், வெளிர் நிறம் மாறுவதையும் கண்ட மக்கள் அதிசயித்தனர்.
சிரைகளைக் கட்டுவதன் மூலம் இதயம் காலியாவதையும், தமனிகளைக் கட்டும்போது இதயம் வீங்குவதையும் செயல்முறையாகக் காண்பித்து தனது அறிவால் ஆச்சர்யப்பட வைத்தார் ஹார்வி.