மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

'''வசதி படைச்சவங்களுக்கு குங்குமப்பூ, வசதியில்லாதவங்களுக்கு முருங்கைப் பூ’ - இப்படி ஒரு வசனமே உண்டு அம்மணி. ஆனா, முருங்கையைப் பத்தி கிராமத்துல இருக்கிறவங்களுக்கே அதிகம் தெரியலையே...' 

''அடியேய்... வாசம்பா, முருங்கைக்கு இன்னொரு பெயர் கிழவி. 'பிரம்ம விருட்சம், கற்பகத் தரு’னு சொல்வாங்க. உச்சந்தலையிருந்து உள்ளங்கால் வரைக்கும் எங்க பிரச்னை இருந்தாலும் முருங்கை, அதை சரிசெஞ்சிடும். உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைபாடுன்னு அத்தனைக்கும் முருங்கைப் பூ நல்ல மருந்து. மூணு முருங்கைப் பூவைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைச்சிக்கணும். ஒரு டம்ளர் பால்ல, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு சுண்டக் காய்ச்சி, கருப்பட்டி சேர்த்து ராத்திரியில் குடிச்சிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவே இருக்காது.''  

''ஓஹோ... அதான் 'முந்தானை முடிச்சு’ படத்துல... முருங்கையைப் பத்தி மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்வாங்களோ...'' -  வாசம்பாவின் முகத்தில் வெட்கம் தாண்டவமாடியது.  

''ஆமா... இன்னிக்கு புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்கிற தாம்பத்தியப் பிரச்னையைக்கூட

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

முருங்கை தவிடுபொடியாக்கிடும். அந்த அளவுக்கு அற்புத விருட்சம். முருங்கைக் கீரைச் சாறை கர்ப்பிணிப் பொண்ணுங்க குடிச்சிட்டு வந்தால், கருப்பையின் மந்தத்தன்மை போய், பிரசவம் எளிமையாகிரும். தாய்ப்பால் சுரப்பைக்கூட இது அதிகப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும்.

கால் வலி இருந்தா, முருங்கைக் கீரைப் பொரியல் செஞ்சு சாப்பிடலாம். சட்டுன்னு குணமாயிரும். நல்ல ஜீரணசக்தியும் கொடுக்கும். கீரையோட பருப்பைக் கடைஞ்சு மூணு நாளைக்குச் சாப்பிட்டா, கீழ் மூட்டுல வலி இருந்த இடம் தெரியாம ஓடிரும். ஆனா என்ன, வயித்துப் பிரச்னை வந்தாலும் வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.

'அந்தக் காலத்துல ராஜாக்கள், போர் வீரர்களுக்கு முருங்கைக் கீரையைத்தான் உணவாத் தருவாங்களாம். அவங்க உடல் பலம் அதிகரிச்சு, எதிரிகளோட போரிடுவாங்கன்னு சொன்னாங்க...''  

''சரியாச் சொன்ன... முருங்கைக் கீரையை வேகவைச்சு அதோட சாறைக் குடிச்சிட்டு வந்தா... உடல் சூடு குறையும். உஷ்ணத்துனால ஏற்படுற மந்தம், உட்சூடு, கண் கோளாறு, நாள்பட்ட மலச்சிக்கல், காக்கா வலிப்பு, சர்க்கரை நோய் எல்லாமே சரியாயிரும். அதிக சதை, மூட்டு வலி, சளி, இருமல்கூட குறைஞ்சிடும். நோயே நெருங்கவிடாமச் செய்ற சக்தி முருங்கைக்கு இருக்கு வாசம்பா.  

கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டா, ரத்த சோகை போயி, உடம்புல நல்ல ரத்தம் ஊறும். பல்லு நல்லா வலுவாகிடும். தோல் வியாதி வராது.''

'' 'மாடு... வீட்டுக்குச் செல்வம். முருங்கை... தோட்டத்துக்குச் செல்வம்.’ ஆனா பாரு, நம்ம செம்பகலட்சுமி வீட்டு முருங்கை மரத்தை வெட்டிட்டாங்க. மரம் முழுக்க நெறைய கம்பளிப்பூச்சிக, அதான்டீ... மொசுக்கொட்டை.''

''ஆமா, ஒண்ணு வந்தா, நிறைய வர ஆரம்பிச்சிரும். கை, கால்ல பட்டுச்சு... அவ்வளவுதான் அரிப்பு எடுக்கும். கண் எரிச்சல் வந்திரும். இதுக்கு, வேப்பெண்ணெயைக் கலந்து தெளிச்சா, எல்லாம் போயிருமே... இப்படியா மரத்தையே வெட்டறது?''

'' 'மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துற கதைதேன் அம்மணி. சரி, ரெண்டு நாளா நெஞ்சுல சளி கட்டிருக்கு. அதுக்கு முருங்கையில மருந்து இருக்கா?!''

''முருங்கைக் கீரையை நல்லா நறுக்கி உப்புப் போட்டு வேகவெச்சு, அதுல ஒரு ஸ்பூன் மிளகு, உப்பு, ஒரு வெங்காயம், தக்காளி சேர்த்து சூப் மாதிரி செஞ்சு சாப்பிடலாம். ஆஸ்துமா, நெஞ்சு சளினு சுவாசக் கோளாறுப் பிரச்னை சரியாயிரும்.

பித்த வாயு, கடுமையான ரத்த சீதபேதி, வயித்துப் புண், தலைவலி, மலச்சிக்கல், வாய்ப்புண் எல்லா நோய்க்கும் முருங்கை நல்ல மருந்து. வாரத்துல ரெண்டு நாள் முருங்கைக்காயை வேகவெச்சு கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.''

''சோர்ந்து சோர்ந்து விழுந்திட்டிருந்த பக்கத்து வீட்டு ராசாயி பேத்தியை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க. ஏதோ ரத்தத்துல பிளேட்லெட்ஸாமே... அது குறைஞ்சிருக்காம். டெங்கு காய்ச்சல்னு சொல்லிட்டாங்க அம்மணி.''

''கீரையைச் சாப்பிட்டாதானே... அவங்க வீட்லயே, முருங்கை மரம் வேற இருக்கு. முருங்கைப் பிஞ்சை, சின்னச் சின்னதா நறுக்கி நெய்ல வதக்கிச் சாப்பிட்டு வந்தா, ரத்தத்துல சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாயிரும் வாசம்பா. ராசாயியைப் பார்த்தா, நான் சொன்னேன்னு சொல்லு.'' பேசியபடியே, இருவரும் வீட்டுக் கொல்லைப்புறத்துக்கு வந்தனர்.  

''அம்மணி, நிஜமாவே, நீ சொல்ற மாதிரி, முருங்கை ஒரு அற்புத விருட்சம்தான். இதோ மாடத்துல இருக்கே துளசிச் செடி, இது, குடும்பத்தின் சுபிட்சமா?'' என்றதும் இருவரின் முகத்திலும் புன்னகை.

அடுத்து.... துளசிதான்!

- பாட்டிகள் பேசுவார்கள்...