Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

1880-ம் ஆண்டுகளிலேயே, பல்வேறுபட்ட ரத்த அணுக்களை சாயங்கள் மூலம் வர்ணம் தீட்டி 'கலர்ஃபுல்’லாகப் பார்க்கலாம் என்று காட்டியவர் 'பால் எர்லிச்’ என்ற ஜெர்மானிய மருத்துவர்.

 மதுபானத் தயாரிப்பாளர் ஒருவரின் இரண்டாவது மகனாக 1854-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி எர்லிச் பிறந்தார். தன் 28-வது வயதிலேயே மருத்துவ ஆராய்ச்சியில் பட்டம் பெற்ற எர்லிச், ரத்தவியல், திசுவியல் முதலியவற்றின் அடிப்படையாக விளங்கிய தியோடர் ஃபிரெரிச் என்பவரின் உதவியாளரும்கூட!

வால்டேயர் எனும் புகழ்பெற்ற உடற்கூறு இயல் நிபுணரிடம் படித்த எர்லிச், தனது எட்டாவது செமஸ்டரிலேயே 'திசுக்களின் நிறமூட்டலுக்கான பாடங்களும், செயல் முறைகளும்’ (Theory & Practice of Histological staining)  எனும் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். ஆராய்ச்சியின் போது காரத்தன்மை கொண்ட சாயங்களைப் பயன்படுத்தி திசுக்களுக்கு நிறமூட்டிய போது (Staining) செல்களின் புரோட்டோ பிளாசத்தில் மட்டும் அரிசி போன்ற சிறுதுகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்து அதற்கு 'மாஸ்ட் செல்’ (Mast Cell) என்று பெயரிட்டார். இவைதான் 'ஹிஸ்டமின்’  எனும் அலர்ஜியை உண்டாக்கும் வேதிப் பொருளைச் சுரக்கின்றன. வேதியியல் சார்ந்த இந்த ஆராய்ச்சி அக்கால மருத்துவர்களுக்கு புதுமையானதாக இருந்தது.

முன்னோடிகள்

இரண்டு கண்ணாடித் துண்டுகளுக்கு நடுவில் ஒரு சொட்டு ரத்தத்தை வைத்து 'புன்சன் விளக்கில்’ (Bunsen Burner) காட்டினால் ரத்தம் காய்ந்து விடும். பிறகு எப்போது வேண்டுமானாலும் அதற்கு நிறமூட்டி அணுக்களைப் பகுத்தாய்வு செய்யலாம் என்றும் கண்டறிந்தார்.

அமிலம் மற்றும் காரத்தன்மை கொண்ட நிறமூட்டிகளையும், நடுநிலையான நிறமூட்டிகளையும் கொண்டு, வெள்ளை அணுக்களின் வகைகளான லிம்ஃபோசைட்டுகளைக் கண்டறிந்தார்.

சிவப்பு அணுக்களை ஆராய்ச்சி செய்து அவற்றின் முன்னோடிகளான நார்மோ பிளாஸ்ட், மெகலோபிளாஸ்ட் (Normo Blast, Megalo Blast) போன்ற அணுக்களையும் கண்டறிந்தார். இதன்மூலம் ரத்த சோகை மற்றும் ரத்தப் புற்றுநோய்களை வகைப்படுத்தினார்.

வேதியியல், உயிரியல், மருத்துவம் ஆகியவற்றின் கலவையான எர்லிச்சின் ஆராய்ச்சிகள் அக்கால கட்டத்தில் மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் அவருடைய நிறமூட்டிகள், 'எர்லிச்சின் நிறமூட்டிகள்’(EHRLICH REAGENT)என்றே இன்றும் அழைக்கப்படுகின்றன.

உயிருள்ள செல்கள் நிறமிகளை அதிக அளவில் ஈர்க்கின்றன என்று கண்டறிந்த எர்லிச், மெத்திலின் புளூ என்ற நிறமூட்டியைக் கண்டறிந்தார். நரம்பு நாண்களை (AXON) அழகாக நிறமூட்டி மெத்திலீன் புளூ காட்டும் என்ற அடித்துக் கூறியவர் எர்லிச். அதன் மூலம் நரம்பியலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு எர்லிச் உதவினார்.

மருந்துகள் கொண்டு நோய்க் கிருமி அழிக்கும் முறைகளையும்(Chemotherapy) அறிமுகப்படுத்திய எர்லிச் 1915-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் நாள் மறைந்தார். அச்சமயம் ஜெர்மானியச் சக்கரவர்த்தி இரண்டாம் வில்ஹெம் தனது இரங்கல் செய்தியில் 'எர்லிச்சின் வாழ்நாள் சேவை என்றும் அழியாப் புகழோடு விளங்கும்’ என்று குறிப்பிட்டார்.

- திரும்பிப் பார்ப்போம்...

கண்டுபிடிப்பு

1909-ம் ஆண்டு 'சால்வர்சான்’ (SALVARSAN)எனும் பால்வினை நோய்களுக்கு (SYPHILIS)எதிரான மருந்தைக் கண்டுபிடித்தார் எர்லிச்.

  பெர்ரிங் என்பவருடன் சேர்ந்து டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் நோய்களுக்கான ANTISERUM  என்கிற நோய்த்தடுப்பு மருந்தைக் கண்டறிந்தது சாதனை.

நோயாளிகளின் ரத்தத்தையும், சிறுநீரையும் பரிசோதனை செய்வதிலேயே தனது காலத்தைக் கழித்த எர்லிச் 1881-ம் ஆண்டில் டைபாய்டு நோயைக் கண்டறியும் சிறுநீர்ப் பரிசோதனையை அறிமுகப்படுத்தினார்.

  ஈசினோபிலியா செல்களையும் எர்லிச்தான் கண்டறிந்தார்.

எர்லிச் பெற்ற கௌரவம்

 எர்லிச்சின் பெயரில் ஜெர்மனில் தெரு ஒன்று இருக்கிறது. அவருடைய நூற்றாண்டில் (1954-ல்) ஜெர்மானியில் தபால் தலை வெளியிடப்பட்டது. 200 டச்சு மார்க் மதிப்புள்ள கரன்சி எர்லிச்சின் உருவம் தாங்கி வெளியிடப்பட்டதும், அவர் பெயரில் ஜெர்மனியின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இருப்பதும் அவரின் ஆராய்ச்சிக்கு கிடைத்த கௌரவங்கள்.  

 நோய்த்தடுப்பு இயலில் சிறந்த ஆராய்ச்சி செய்ததற்காகவும், ANTISERUM  பற்றி தெளிவான கருத்துக்கள் தந்தமைக்காகவும் 1908-ம் ஆண்டு உடலியங்கியல் பிரிவிற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 'ஆட்டோ இம்யூனிட்டி’ என்று சொல்லப்படும் சுயமாக நோய் எதிர்ப்பு சக்தியினை உடல் உருவாக்குவதை, அந்நாளிலேயே கண்டறிந்த எர்லிச்சின் பக்கச் சங்கிலி கோட்பாடு (Ehrlich Side Chain Theory)  இன்றளவும் நிலைத்து நிற்கும் அடிப்படைத் தத்துவம்!