குட் நைட்

##~## |
இன்று இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை நிறைய நடந்து கொண்டே தான் இருக்கின்றன. குழந்தைகளைக் கொஞ்சுவது, அவர்களுடன் விளையாடுவது என்பதெல்லாம் இயல்பான விஷயம்தான். ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஓன்று உண்டு. அது... சம்பந்தப்பட்ட அந்த குழந்தைகளுக்குப் பிடித்து இருக்க வேண்டும். குழந்தையின் விருப்பமின்றி தொடுதல், அணைத்தல், குழந்தைகளின் பாலுறுப்பைத் தொடுதல் போன்றவை எல்லாம் பாலியல் வன்கொடுமை (Child sexual abusement) ஆகும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்ற இந்த விஷயத்தை பொது மேடையில் பேசவேண்டுமா..? இப்படி ஒரு கேள்வி பலருக்கு எழலாம். இந்தப் பாலியல் வன்கொடுமை பரவலாக வெளி உலகுக்குத் தெரிவது இல்லை என்பதுதான் நிஜம். பேச வேண்டிய, எல்லோருக்கும் தெரிந்து... உஷாராக வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

குழந்தைகளிடம் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும், அந்தக் குழந்தைக்குத் தெரிந்தவர்களாகதான் இருப்பார்கள். இந்தத் தீய செயலில் ஈடுபடுபவர்கள் மூன்றில் ஒரு பங்கினர் 13 வயதில் இருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் என்கிறது ஒரு புள்ளி விவரம்.
பெண் குழந்தைகளிடம் மட்டுமல்லாமல், ஆண் குழந்தைகளையும் இந்த கெடுமதியர்கள் விட்டு விடுவதில்லை. இப்படி பாலியல் கொடுமைக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படலாம்...?
1. மனரீதியான பாதிப்புகள்:
மன அழுத்தம் ஏற்பட்டு குழந்தைகளுக்கு மனம் ஆழமாகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். இதனால், அவர்கள் எல்லாவற்றுக்கும் பயம் கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். தன்னைப் பற்றிய தாழ்வான மதிப்பீடு ஏற்படும். தூங்குவதில் நிறைய தடைகள் ஏற்படலாம்.
2. நடைமுறை பழக்கவழக்கங்களில் மாற்றம்:
ஆபத்து என்பது தெரிந்திருந்தும், பாலியல் வன்கொடுமைக்குத் துண்டப்பட்ட குழந்தைகள் அதில் தைரியமாக ஈடுபடலாம். பெற்றோரின் கண்டிப்புக்குப் பயந்து வீட்டை விட்டு ஒடி போகும் மன நிலைக்குத் தள்ளபடலாம். சில பெண் குழந்தைகள் தன் உடம்பை விற்றுப் பிழைக்கவும் முன் வரலாம்.

3. செக்ஸுவல் ரீலேஷன்ஷிப் பாதிப்பு:
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள், வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் செக்ஸ் மீதே ஒரு விதமான வெறுப்பு ஏற்படலாம். யாரிடமும் எதுவும் பேசாமல், சுமுகமான உறவு கொள்ளாமல் தனிமை விரும்பிகளாக மாறிவிடலாம். அல்லது எல்லோரிடமும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் மனநிலையைப் பெறலாம்.
4. கற்றல் குறைபாடுகள்:
படிப்பில் கவனம் சிதைவுற்று படிப்பில் மந்தம் ஏற்படலாம். உண்பதில் பிரச்னை (Eating disorder) என்கின்ற பாதிப்பு உண்டாகி நிறைய சாப்பிட ஆரம்பிக்கலாம் அல்லது எதுவுமே சாப்பிடாமல் உணவையே வெறுத்து ஒதுக்கலாம். ஆளுமை குறைபாடு(Personality disorder ) என்னும் 'மனச் சிதைவு’ பாதிப்புக்கு ஆளாகலாம்.
வன்கொடுமை நேராமல் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
தனிப்பட்ட மனிதனால் இதைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக அக்கறையுள்ள தொண்டர்கள், மனநல மருத்துவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.
'இப்படி எல்லாம் நடப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன’ என்று குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் பெற்றோர்கள் எச்சரிக்க வேண்டும். தொடுதலின் அர்த்தத்தை குழந்தைகள் உணரும் வகையில் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
குழந்தைகளின் விருப்பத்துக்கு மாறாக யாராவது அவர்களிடம் நடந்துக் கொள்ளும்போது துணிவுடன் அதை மறுக்கவும், பெற்றோர்களிடம் தெரியப்படுத்தவும் சொல்லி தரவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று உளவியல் சிகிச்சை தரவேண்டும்.
ஒருவேளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தை அந்தச் சம்பவத்தைத் தெரிவிக்காமல் இருந்தால், அதை எப்படி அறிவது?
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தை, இந்தக் கசப்பான சம்பவத்துக்குப் பின்னர் வயதுக்கு மீறிய செக்ஸ் அறிவுடன் இருக்கலாம்; பேசலாம். அவர்களின் பழக்க வழக்கங்களில் செக்ஸ் செல்வாக்குப் பெற்றிருப்பதை உற்றுல் கவனிக்கும்போது தெரியும். சிறு வயதிலே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இருப்பதையும் அறியலாம்.
- இடைவேளை...
பலம் தரும் 'பால’ பாடம்
பெற்றோர்கள், ஆசிரியர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதற்கு பர்சனல் சேஃப்டி எஜூகேஷன் (personal safety education) என்று பெயர்.
குழந்தைகளிடம் பெற்றோர் எச்சரிக்கை உணர்வைக் கற்பிப்பதற்கு ப்ரைமரி ப்ரிவென்ஷன் (primary prevention) என்று பெயர்.
பாதிக்கப்பட்ட குழந்தையை, அந்த உணர்வில் இருந்து; பாதிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்கு செகன்டரி ப்ரிவென்ஷன் (secontary prevention) என்று பெயர்.