மற்ற எபிசோடுகள்
Published:Updated:

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!
##~##

வழியில் தெரு ஓரமாகக்கிடந்த கற்றாழையைப் பறித்த அம்மணி, அதை வாசம்பாவிடம் நீட்ட, 'ஒரு மாதிரி கெட்ட வாசம் வருதே, இதுல அப்படி என்னதான் இருக்கு?' என்றாள் வாசம்பா. 

'கெட்டதுனு நாம ஒதுக்கற பெரும்பாலான தாவரமும் நல்லதுதான் வாசம்பா. கசக்குதுன்னு பாகற்காயைச் சாப்பிடாம இருக்கோமா? வாசத்தைப் பார்த்தா, ஆரோக்கியம் இல்லை வாசம்பா. வேம்பைவிட அதிக மருத்துவக் குணம் கத்தாழைக்குத்தான் உண்டு.  கத்தாழையைப் பறிச்சதுமே, தோலை நீக்கித் தண்ணியில நல்லாக் கழுவிட்டாலே, கெட்ட வாசனை போயிரும். அங்கங்க முள் இருக்கும்... கொஞ்சம் பார்த்து எடு.'

'' அது சரிதான் அம்மணி. மருத்துவக் கத்தாழையை முள்ளு குத்தும்னு பறிக்காம விட்டுட்டா, அதன் பலன் அத்தனையும் பாழாப்போயிரும்ல அம்மணி.''

'ஆமா, கத்தாழைகூட, பனங்கற்கண்டு சேர்த்து தெனமும் ரெண்டுவேளை சாப்பிட்டுவந்தா, உடல் உஷ்ணம், நீர்க்கடுப்பு, காந்தல்னு எல்லாமே சரியாகிரும். கத்தாழை நுங்கை,  திராட்சைச் சாறு இல்லேன்னா தேன்ல ஊறவெச்சு சாப்பிட்டா, ஆரம்பப் புற்றுநோய்கூட குணமாயிரும். தினமும் காலைல வெறும் வயித்துல சாப்பிட்டாலே, உடம்புல பலம் கூடிரும்'' என்று பேசியபடியே இருவரும் ஆத்தங்கரையை அடைய...

'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்!

'என்னடி இது... ஆத்தங்கரை ஓரமா இருந்த கத்தாழைச் செடிகளைக் காணோம்?'

'போன மாசம் வெளியூர்க்காரங்க வந்து, இங்க இருந்த அத்தனை கத்தாழையையும் பறிச்சிட்டாங்க அம்மணி.'

'நம்ம ஊர்க்காரங்களுக்கு கத்தாழையோட அருமை தெரியலை.  நான் இருந்திருந்தா, ஒரு செடியைப் பறிக்க விட்ருப்பேனா? அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருளே இந்தக் கத்தாழைதான். அதான் வெளியூர்லேர்ந்து எல்லாம் இங்க வந்து எடுத்திட்டுப் போறாங்க.'  

''கத்தாழை அழகுக்கு எப்படி பயன்படுது அம்மணி?''

''தண்ணீரைவிட, கத்தாழைச் சாறு நம்ம தோல்ல நாலு மடங்கு ஊடுருவுமாம். தோல்ல இருக்கும் கொழுப்பைக் குறைச்சு, சுருக்கமில்லாம வைக்கிறதால, எப்பவும் இளமையா இருக்கலாம். முகத்துல தழும்பு, கரும்புள்ளிகள், உலர்ந்த சருமம்னு தோல் பிரச்னை எல்லாத்தையும் சரியாக்கிரும். தீக்காயம், கீறல்னு எல்லாத்துக்குமே கத்தாழைச் சாறுதான் மருந்து.

கத்தாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலைக்குத் தேய்ச்சிட்டுவந்தா... முடி செழிப்பா வளரும். கண்ணுக்கும் குளிர்ச்சி. நல்ல தூக்கம் இருக்கும்டி.

மஞ்சள் காமாலையில பாதிக்கப்பட்டவங்க, கத்தாழை ஜெல்லை மோர்ல கலந்து குடிச்சிட்டு வந்தா சீக்கிரமே குணமாகிரும். ரத்த அழுத்தம், பித்தம், உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறதால, இதுவும் ஒரு 'காயகல்பம்’தான்.''

''சரி... தெனமும் வந்து பறிச்சிட்டா இருக்கமுடியும். அவசரத்துக்கு 'கைகொடுப்பாள் கத்தாழை’னு ஏதாச்சும் செஞ்சுவைச்சுக்கிற மாதிரி டிப்ஸ் சொல்லு அம்மணி...''

''கத்தாழை நுங்கை சின்னத் துண்டுகளா வெட்டி, ஒரு பாத்திரத்துல போட்டு அரை கிலோ பனங்கல்கண்டு, கால் கிலோ வெள்ளை வெங்காயத்தை இடிச்சு, சாறு எடுத்து, கொஞ்சம் விளக்கெண்ணெயைக் கலந்து அடுப்புல தீயைச் சின்னதாவெச்சு சூடாக்கணும்.  சாறு சுண்டி 'சடசட’னு ஓசை வந்ததும் இறக்கி, கண்ணாடி ஜாடியில போட்டு வெச்சிக்கலாம். எப்பல்லாம் வயிறு தொடர்பான பிரச்னை வருதோ, அப்பல்லாம் ஒரு தேக்கரண்டி எடுத்து தெனமும் ரெண்டு வேளைக் குடிச்சிட்டுவந்தா, உடனடியா சரியாகிரும். பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் எல்லாப் பிரச்னைகளுக்கும் இது மருந்து.''

''ஓஹோ... அதான் கத்தாழையைக் 'கன்னி’னு சொல்றாங்களா?''

''சரியாப் புரிஞ்சிட்டியே...  முல்தானி மட்டிகூட கத்தாழை நுங்கைக் கலந்து மிக்ஸியில அரைச்சு முகத்துல பூசினா, என்றும் இளமையா இருக்கலாம்.  

சரி சரி... கிளம்பு. மாரிமுத்து பேத்திக்கு கண்ணெல்லாம் மஞ்சளாயிடுச்சாம் வாசம்பா. கீழாநெல்லி கொண்டுபோணும்'' என்றபடியே இருவரும் நடையைக் கட்டினர்.

அடுத்து, காமாலைக் கண்ணுக்கு...!

- பாட்டிகள் பேசுவார்கள்...