Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்

'தொழுநோய் என்பது ஒருவர் செய்த பாவத்துக்குக் கடவுள் கொடுத்த தண்டனை’ என்ற கருத்து ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் நிலவியது. 'இது பரம்பரை நோய் அல்ல; மற்ற நோய்களைப் போல, இதுவும் கிருமியால் உண்டாகிறது’ என்று கண்டுபிடித்துச் சொன்னவர் நார்வே நாட்டைச் சேர்ந்த, ஜெர்ஹார்ட் ஹென்றி ஆர்மர் ஹான்சென் (Gerhard Henrik Armauer Hansen).  1841-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி பிறந்தவர் இவர்.  

 ஏழ்மையான குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஹான்சன். வசதியின்மையால், ஹான்செனைப் படிக்கவைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. இதனால் உடற்பயிற்சிக் கூடத்தில் வேலைசெய்தும், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு, 'சிறப்பு வகுப்புகள்’ நடத்தியும் தம் பணத் தேவையைப் பூர்த்திசெய்து மருத்துவம் படித்தார் ஹான்சென்.

அப்போது, நார்வேயில் மட்டும் ஏறத்தாழ 3,000 தொழுநோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தனர். நார்வேயின் பெர்ஜன் நகரில் தொழுநோய் ஆராய்ச்சி மையம் இயங்கிவந்தது. அங்கிருந்த புகழ்பெற்ற மருத்துவர்

முன்னோடிகள்

டேனியல்சனிடம் உதவி மருத்துவராக, 1868-ம் ஆண்டு சேர்ந்தார் ஹான்சென். நார்வேயின் குறிப்பிட்ட பகுதியில் தொற்றுநோய் அதிக அளவில் பரவுவதற்கான காரணத்தைத் தேடி ஆராய்ச்சியில் இறங்கினார்.

ரத்தத்தில் தொழுநோய்க் கிருமிகளைத் தேடிய ஹான்செனுக்கு ஏமாற்றமே கிட்டியது. மனம் தளராமல், நோயால் தாக்குண்ட ஒருவரின் தோல் பகுதியை நுண்ணோக்கியில் ஆராய்ச்சி செய்தபோது, 'குச்சி’ வடிவத்தில் கிருமிகளைக் கண்டுபிடித்தார் ஹான்சென். ஆனால், அதை பாக்டீரியா என்று முதலில் கணிக்கத் தவறினார்.

'தொழுநோய்க் கிருமி, ஒரு நோயாளியிடம் இருந்து மற்றொருவருக்கு நோயை எடுத்துச் செல்கிறது' என்று அறிவித்தார் ஹான்சென். இவரது இந்தக் கண்டுபிடிப்பை, அன்றைய மருத்துவர்கள் எள்ளி நகையாடினர். கடைசியில் தம்முடைய குருவான டேனியல்சனின் பாராட்டைப் பெற்றார்.

அந்தக் காலத்தில் இருந்த நுண்ணோக்கியைக்கொண்டு நிணநீர் சுரப்பிகளில் (Lymph node) தொழுநோயின் தாக்கம் குறித்து ஹான்சென் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள், உலக அதிசயம். கிருமிகளின் தாக்கத்தால் நிணநீர் சுரப்பிகள் வீங்குவதும், அதை 'நெரிகட்டிகள்’ என்று மக்கள் அழைப்பதும் இன்றும் தொடர்கிறது. 1871-ம் ஆண்டு தாம் கண்டறிந்த உண்மைகளை, 1873-ம் ஆண்டு 88 பக்க ஆராய்ச்சிக் கட்டுரையாகச் சமர்ப்பித்தார். 'மைக்கோபாக்டீரியம் லெப்ரே’(Mycobacterium leprae) என்றழைக்கப்பட்ட பாக்டீரியா இன்றளவும் ஹான்சென் பாசில்லஸ் (Hansen’s bacillus) என்றும், தொழுநோய் இன்று வரை ஹான்சென் வியாதி என்றும் அழைக்கப்படுவது, ஹான்சென் பெற்ற கௌரவம்.

இவ்வளவு முடிவுகளை வெளியிட்ட பின்னரும், 'கிருமிகள் இருக்கலாம். ஆனால், அந்தக் கிருமியால் நோய் உண்டாகிறது என்று கூற முடியாது.’ இப்படி மற்ற ஆராய்ச்சியாளர்கள் மறுத்தது மிகப் பெரிய ஆச்சர்யம்!

1879-ம் ஆண்டு ஹான்சென், பாசில்லஸ் பற்றிப் பலவித ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு, நவீன மருத்துவத்துக்கு அடிக்கல் நாட்டினார். நுண்ணுயிரிகளால் மனிதனுக்கு நோய் ஏற்படுகிறது என்று உலகில் முதலில் நிரூபித்தவர் ஹான்சென்தான். 1979-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த நுண்ணுயிர் நிபுணர் ஆல்பர்ட் நெய்சரைச் சந்தித்தார் ஹான்சென். தமது ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் ஆவணங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டார்.

சக மருத்துவர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக, தம்முடைய ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலம், நார்வே, ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிட்டார். நீண்ட போராட்டத்துக்குப் பின் பெர்லினில் நடந்த தொழுநோய்க் கருத்தரங்கில், கிருமியின் கண்டுபிடிப்பாளராக ஹான்சென் அறிவிக்கப்பட்டார்.

பல அறிவியல் கழகங்களில் உறுப்பினராகவும், நார்வே அறிவியல் இதழின் ஆசிரியராகவும் விளங்கினார். கோபன்ஹேகனில் நடந்த உலகளாவிய மருத்துவக் கருத்தரங்கில் தோல் பகுதி ஆராய்ச்சிக்குத் தலைவராக வீற்றிருந்தார். உலகத் தொழுநோய்க் குழுவின் தலைவராகவும், உலகத் தொழுநோய் ஆராய்ச்சிக் கருத்தரங்குக்கு இருமுறை தலைவராகவும் இருந்த ஹான்சென்,  உயிரிருடன் இருந்தபோதே, பெர்ஜன் அருங்காட்சியகத் தோட்டத்தில் அவரது உருவச் சிலை நிறுவப்பட்டது. 1912-ம் ஆண்டு மறைந்த ஹான்சென் நினைவாக நார்வே அரசு, அஞ்சல் தலை வெளியிட்டுக் கௌரவித்தது.

- திரும்பிப் பார்ப்போம்...

 நோ(ய்) தடுப்பூசி!

'மைக்கோபாக்டீரியம் லெப்ரே’ கிருமியைத் தனியே பிரித்தெடுத்து வளர்ப்பதற்கு ஹான்சென் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. மற்ற மருத்துவர்கள், இவரது முடிவுகளை ஏற்க மறுத்ததற்கு அதுவும் ஒரு காரணம். நூற்றாண்டு கழிந்தும் இன்னும் அதைப் பிரித்து எடுத்து வளர்க்க முடியவில்லை. அதனால்தான் தொழுநோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை என்பது வேதனையான செய்தி.