நமது உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. மனிதன் சாப்பிடாமல் சில வாரங்கள்கூட உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ்வது கடினம். நாம் தினமும் சாப்பிடும் உணவில் இருந்தே ஒரு நாளில் நம் உடலுக்குத் தேவையான 25 சதவிகிதத் தண்ணீர் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் எழும். இவ்வளவு தண்ணீர்தான் குடிக்க வேண்டும் எனப் பொதுவாகக் கூறமுடியாது. காலநிலை, வயது, உடற்கூறு, நோய்களின் பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் தண்ணீர் குடிக்கும் அளவு மாறுபடும். எந்தெந்த வயதினர் தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம், சர்க்கரை, இதய நோய்கள் உள்ளவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம், ஆர்ஓ வாட்டர், ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானகள் நல்லதா, தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்.
யார் யார் எவ்வளவு லிட்டர் நீர் குடிக்கலாம் ?
- கைக்குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மூலமாகவே உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும். ஆறு மாதத்திற்கு பிறகு, குழந்தைக்கு போதுமான குடிநீரை தரவேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படாது. தாய்மார்கள் அவ்வப்போது தண்ணீர் கொடுத்துப் பழக்க வேண்டும்.
- 3-6 வயதுள்ள குழந்தைகளுக்கு, அவர்களது தேவைக்கு ஏற்ப அவ்வபோது குடிநீரை குடிக்க சொல்லி பழக்க படுத்தலாம்.
- வளரும் குழந்தைகளின் உடலுக்குத் தண்ணீரை உறிஞ்சும் சக்தி அதிகம். 6 - 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறுவர் / சிறுமியர் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபடும் சிறுவர்கள் தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரியும் 20 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது.
- நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள், டிரெயினரின் வழிகாட்டுதலின் படி ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.
- வயதாக ஆக, பசி, தாகம் ஏற்படும் உணர்வு குறையும். வெயில் காலங்களில் வயதானவர்கள் கண்டிப்பாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 70 வயதுக்கு மேல் தாகம் எடுக்கும் உணர்வு அவ்வளவாக இருக்காது. அவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- சிறுநீரக செயல்இழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்துகொள்பவர்கள் தண்ணீர் அதிகம் அருந்தக்கூடாது. சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதால், தண்ணீர் வெளியேறாமல், நுரையீரல், கால் என உடலில் தங்கி பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, மருத்துவர் பரிந்துரையின் பேரில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களுக்குச் சிறுநீர் அதிகமாகப் பிரியும். சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 800 - 900 மி.லி அளவே இருக்கும். அதனால், இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது.
- சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக குறைந்தது ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாலை ஆறு மணிக்கு மேல் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. இரவில் அதிகமாகத் தண்ணீர் குடித்தால், தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். இதனால், தூக்கம் தடைப்படும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும் என்று இல்லை... சர்க்கரை சேர்க்காமல் எலுமிச்சைச் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ், இளநீர் ஆகியவற்றைக் குடிக்கலாம். கார்பனேட்டட் பானங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். திராட்சை ஜூஸ், மாம்பழ ஜூஸ் போன்றவற்றை அளவுடன் சேர்க்கலாம். ஜூஸைவிட பழங்களாக சேர்த்து கொள்வது பெஸ்ட்.
- சிறுநீரகம், சிறுநீர்ப்பைக் கற்கள் பாதிப்பு உள்ளவர்கள், கட்டாயம் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- வெயிலில் அலைந்து திரியும் பணியில் உள்ளவர்கள், தண்ணீர் குடிக்காமல் இருந்தால் தலைசுற்றல், மயக்கம், கல்லீரல் வீக்கம், கால் வீக்கம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்கள் தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தாகம் போக்க குளிர்பானங்கள் குடிக்கலாமா ?
சோடா, கோலா பானங்களைத் தவிர்த்து இளநீர், நுங்கு, தர்பூசணி, பூசணிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சைப் பழ ஜூஸ் உள்ளிட்டவற்றை வெயில் காலங்களில் தண்ணீரோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டைக் கட்டுப்படுத்தலாம்.
சைனஸ், பற்கள் பிரச்னை உடையவர்கள், எலுமிச்சைச் சாற்றைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல சிட்ரஸ் பழங்களையும் தவிர்க்கலாம்.
ஃபிரிட்ஜில் வைத்த தண்ணீரைக் குடிக்கலாமா ?
வெயில் காலங்களில் நாம் குளிர்ந்த நீரை அதிகம் விரும்புவோம். குளிர்த்த நீரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து அப்படியே குடிக்கக் கூடாது. நமது உடல் தசைகள் அதீதக் குளிர்ச்சியை உடனே ஏற்றுக்கொள்ளாது. இதனால், பற்கூச்சம் ஏற்படலாம். மிதமான குளிர்ச்சி உள்ள தண்ணீரையே பருகவேண்டும். முடிந்தவரை குளிர்ச்சியான நீரை தவிர்த்துவிட்டு மண் பானை குடிநீருக்கு பழகலாம்.
ஆர்ஓ வாட்டர் குடிக்கலாமா ?
பெருநகரங்களில் இன்று ஆர்.ஓ பிளான்ட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இது, தண்ணீரில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிப்பதோடு, உடலுக்குத் தேவையான தாதுக்களையும் சேர்த்து அழித்துவிடுகிறது. ஆர்ஓ சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரைவிட, கொதிக்கவைத்து ஆறவைத்தத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, நல்ல தண்ணீர் குழாய்கள் வழியாக பிளாஸ்டிக் குடங்களில் பிடித்துச் சேகரித்த தண்ணீரைக் கட்டாயம் கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல சத்துக்கள் இழக்க நேரலாம். இதற்கு மாற்றாக, தாதுஉப்புக்ள் நிறைந்த கீரை மற்றும் நீர்க்காய்கறிகள், பழவகைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
- ரத்த ஓட்டம் சீராகும்.
- சிறுநீரகச் செயல்பாடு மேம்படும்.
- மலச்சிக்கல் தவிர்க்கப்படும்.
- செரிமானம் எளிதாகும்.
- உடல் வெப்பம் கட்டுக்குள் இருக்கும்.
- தசை இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்.
- உடலில் அமிலத்தன்மை கட்டுக்குள் வரும்.
- தலைசுற்றல், படபடப்பு நீங்கும்.
எப்போது தண்ணீர் குடிக்கக் கூடாது ?
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் அதிகமாக தண்ணீரை குடிக்கக் கூடாது. வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலத்தைத் தண்ணீர் நீர்த்துப் போகச்செய்யும். இதனால், செரிமானம் தாமதப்படும். டயட் இருக்கும் சிலர் குறைவாகச் சாப்பிடுவதற்காக இவ்வாறு செய்வார்கள். இது தவறு. தாகம் ஏற்படும்போதெல்லாம் கட்டாயம் நீர் அருந்த வேண்டும்
- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்