Published:Updated:

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose
News
அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

Published:Updated:

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose
News
அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

சைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, அசைவம் சாப்பிட்டால் உடல் வளர்ச்சிபெறும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது, அசைவம் சாப்பிடுபவர்களுக்கு காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை, இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த `மைக்ரோசாஃப்ட்’, `ஆப்பிள்’ நிறுவனங்களை உருவாக்கியவர்களும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண்சத்துக்களும் காய், கனிகளில் குறைவு. உதாரணமாக, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில், இரும்புச்சத்து 300 மைக்ரோகிராம்தான் இருக்கிறது. எனவே, அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்கவேண்டியது இல்லை. ஆனால், நம் உடலுக்கு அசைவம் மட்டும் போதுமா, அதை எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்துவைத்திருப்பது நல்லது. 

அசைவ உணவுகளை எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்? 

* போருக்குச் செல்லும் வீரன்போல, காரில் போகும் சுகவாசி சாப்பிடுவது சரிப்படாது. கட்டுமரத்தில் நிமிர்ந்து நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக இருப்பவர் கேண்டில் லைட் டின்னரில் `ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்வது சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் நாம் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும். 

* ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக்கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்துச் சாப்பிடுவது இன்னும் சிறப்பானது. 

* மற்ற நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். 

* வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். 

* கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றையச் சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டிறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் அவர்கள். 

* `மாமிசம் சாப்பிடும்போது, கண்டிப்பாக இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவை இருக்க வேண்டும்’ என்கிறது தமிழ் மருத்துவம். எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கறையிலும், இந்தக் கறி மசாலா இல்லாமல், கிடாக்கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், இன்றைக்கு மூலைக்கு மூலை விரிந்திருக்கும் பன்னாட்டு கறிக்கடைகளில், அவித்தும் பொரித்தும் தரப்படும் கறி வகைகளில் கறி மசாலாவைப் பார்க்கவே முடியாது. அதேபோல், நம்முடைய சமையல் அறைகளை ஆக்கிரமித்துள்ள மசாலாப் பொடி பாக்கெட்களும் எந்த அளவுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட கறி மசாலாவில், அந்த மணத்தோடு செய்த கறி வகைகளைச் சாப்பிடுவதே நல்லது. 

* ரெஸ்டாரன்ட்டுகளில், ஹோட்டல்களில் கிடைக்கும் கறிவகைகளைத் தவிர்ப்பது சிறந்தது. காரணம், அவற்றில் நூற்றுக்கணக்கான ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன; ரசாயன உப்புகளும் கலக்கப்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோயை வரவேற்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் குளூட்டமேட் ஆகியவை உண்டு. 

* கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரைதேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்த்த கோழியாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான முறையில் வளர்ந்த கோழியாக இருப்பின், `உடல் சூட்டைத் தந்து, சாதாரண சளி, இருமல், மந்தம் ஆகியவற்றைப் போக்கும். உடல் தாதுவை வலுப்படுத்தி, ஆண்மையைப் பெருக்கக்கூடியது’ என்கிறது சித்த மருத்துவம். இதில், வைட்டமின் பி 12 சத்து அதிகம். அதனால் உடல் எடை அதிகரிக்காது. நம் ஊரில் `கருங்கோழி’ எனப்படும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. தசை சூம்பி, வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயாளிகளுக்கும், பிற தசை நோயாளிகளுக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாகச் சொல்லி வருகிறது தமிழ் மருத்துவம். பிராய்லர் கோழி இறைச்சி நல்லதல்ல. பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே பூப்படையும் பிரச்னை வரவும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

* மீன்கள் வெறும் உணவு அல்ல; ஊட்ட உணவு. அதிலும், கொழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த உணவு. ஆனால், அந்தப் புரதத்தையும் இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துக்களையும் முழுமையாகப் பெற வேண்டுமானால், மீனை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது. வேக வைத்த மீனே சிறந்தது. `இ.பி.ஏ.’, (Eicosapentaenoic Acid), `டி.ஹெச்.ஏ.’ (Dacosahexaenoc Acid) எனும் இரண்டு `ஒமேகா 3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டையும் நம் உடம்பு உற்பத்தி செய்யாது. சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர்த்து, தாவரங்களிலும் இது பெரிதாகக் கிடையாது. மூளைத் திறனைத் தூண்ட, புற்றுநோயைத் தடுக்க, மாரடைப்பைத் தடுக்க உதவும். இந்த இரண்டு `ஒமேகா 3’ அமிலங்களும் கடல் மீன்களிடம் கிடைக்கும். 

* ஆடோ, மீனோ, கோழியோ... அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சிக்காக ஒரு விலங்கைக் கொல்லும்போது அதன் தோலும் குடலும் முழுமையாக நீக்கப்பட்டவுடன், விரைவாக அடுப்படிக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதில் ஏற்படும் தாமதம், இறைச்சியில் நுண்ணுயிரிகளைப் பெருக்கம் செய்யக் காரணமாகிவிடும். ஆனால், இன்றைக்கு பன்னாட்டு கோழி, ஆட்டுக்கறி உணவகங்களில் இந்தக் கறித்துண்டுகள் கடந்துவரும் பாதை ரொம்ப தூரம் என்பதை மனதில்கொள்ளவும். 

எனவே, இறைச்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த பிறகு சமைத்துச் சாப்பிடுங்கள்... அதையும் அளவாகச் சாப்பிடுங்கள்! 

தொகுப்பு: பாலு சத்யா