உலகமே உச்சரிக்கும்... எச்சரிக்கும்... ஒரு பெயராகிவிட்டது கொரோனா. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என எந்த வித்தியாசமும் பார்க்காமல், சம அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் கொரோனா தடுப்புப் பணி, மறுபுறம் கொரோனா ஏற்படுத்திய அமெரிக்க-சீன மோதல் என உலகமே கலங்கிப்போய் நிற்கிறது.

கொரோனா வைரஸுக்கென்று இன்னும் மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால் அதன் பரவலைத் தடுக்க ஒரே வழியாக முன்வைக்கப்படுவது தனிமனித இடைவெளிதான். எனவேதான் கொரோனா பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் லாக்டெளன் என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்கள். மக்களும் அதை மதித்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான யுத்ததில் வெல்ல முடியும்.
அறிகுறி இருந்தால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தற்போது, சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலே தொற்று ஏற்படுகிறது. அப்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.தமிழக முதல்வர் பழனிசாமி
உலக சுகாதார நிறுவனம் சொல்வதும் அதைத்தான். ``கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காததால், முடிந்தவரை பரிசோதனைகளை விரிவுப்படுத்தி, பாதிப்பு இருப்பவர்களைத் தனிமைப்படுத்துவதே தீர்வு” என்று தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுக்கான அறிகுறியாக, காய்ச்சல், சளி, இருமல் முதலியவை சொல்லப்பட்டன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிக்குறிகள் இருப்பவர்கள், கட்டாயம் தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாமலே கொரோனா வைரஸ் பரவுது தெரியவந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, ``அறிகுறி இருந்தால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தற்போது சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலே தொற்று ஏற்படுகிறது. அப்போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என எச்சரித்திருந்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், முதல்வரின் கருத்து முழுக்க முழுக்க உண்மை என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மூத்த விஞ்ஞானியான மருத்துவர் ராமன் ஆர் கங்காகேதர், என்.டி.டி.வி-க்கு அளித்த விளக்கத்தில், ``இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இது, மிகவும் கவலை அளிக்கும் விஷயம். கான்டக்ட் ட்ரேஸிங் தவிர தற்போது வேறு வழி இல்லை” என்றார்.
முன்னதாக, டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``சனிக்கிழமை, டெல்லியில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 186 பேருக்கும் கொரோனா அறிகுகள் எதுவும் இல்லை” என்றார். இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர் -ஐ சேர்ந்த விஞ்ஞானி ஒருவரும் இதை உறுதிப் படுத்தியுள்ளது மேலும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. கொரோனா பாதிக்காத பகுதிகளில் லாக் டெளன் உத்தரவுகள் தளர்த்துவது தொடர்பான தகவல்கள் வந்துகொண்டிருக்கும்போது, அறிகுறியே இல்லாமல் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்படும் தகவல், நிச்சயம் கவலை அளிக்கும் விஷயம்தான்.

காரணம், தங்களுக்கு அறிகுறி ஏதும் இல்லாததால் அவர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாத சூழல் ஏற்படும். இதனால் பரவல் மிகப்பெரிய அளவில் இருக்க வாய்ப்பு உருவாகும். எனவே, மக்கள் தங்களைக் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டாயம் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். அதுவும் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன்!
இது, அரசின் கடமையைத் தாண்டி, ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட.