Published:Updated:

மீம்ஸ் மினிஸ்டர் டூ மாஸ் ஹீரோ... பன்னீர்செல்வம் கொந்தளித்த உளவியல் என்ன? #MustRead

மீம்ஸ் மினிஸ்டர் டூ மாஸ் ஹீரோ... பன்னீர்செல்வம் கொந்தளித்த உளவியல் என்ன? #MustRead
News
மீம்ஸ் மினிஸ்டர் டூ மாஸ் ஹீரோ... பன்னீர்செல்வம் கொந்தளித்த உளவியல் என்ன? #MustRead

மீம்ஸ் மினிஸ்டர் டூ மாஸ் ஹீரோ... பன்னீர்செல்வம் கொந்தளித்த உளவியல் என்ன? #MustRead

Published:Updated:

மீம்ஸ் மினிஸ்டர் டூ மாஸ் ஹீரோ... பன்னீர்செல்வம் கொந்தளித்த உளவியல் என்ன? #MustRead

மீம்ஸ் மினிஸ்டர் டூ மாஸ் ஹீரோ... பன்னீர்செல்வம் கொந்தளித்த உளவியல் என்ன? #MustRead

மீம்ஸ் மினிஸ்டர் டூ மாஸ் ஹீரோ... பன்னீர்செல்வம் கொந்தளித்த உளவியல் என்ன? #MustRead
News
மீம்ஸ் மினிஸ்டர் டூ மாஸ் ஹீரோ... பன்னீர்செல்வம் கொந்தளித்த உளவியல் என்ன? #MustRead

டீக்கடைக்காரராக வாழ்க்கையைத் தொடங்கியவர், முதல்வர் பன்னீர் செல்வம். இன்று யாரை எதிர்த்து நிற்கிறாரோ அந்த சசிகலாவால் ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டப்பட்டு, அதிமுகவின் தலைமைக்கு நெருக்கமாகி, சிறந்த விசுவாசி எனப் பெயரெடுத்து, தமிழகத்தின் மிக உயர்ந்த பதவி ஒன்றில் அமர்த்தப்பட்டவர். பதவி வகித்த காலம் முழுதும் தன் மீது வைக்கப்பட்ட எந்த விமர்சனங்களுக்கும், தாக்குதல்களுக்கும் எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்தவர்.

சில மாதங்களுக்கு முன்புகூட வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதைப் போல முடக்கிவைக்கப்பட்டவர். அப்போதுகூட அவரிடம் துளி சலனம் இல்லை. கிட்டதட்ட அவரின் அரசியல் வாழ்வே அவ்வளவுதான் என அவரின் விசுவாசிகளே நம்பத் தொடங்கிய சமயத்தில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருந்ததால், முதலமைச்சரின் பணிகளைக் கூடுதலாகக் கவனித்துக்கொண்டார் பன்னீர்செல்வம். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. அதிமுகவில் அசாதாரணமான சூழல், முதல்வர் பதவி பன்னீரைத் தேடி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளாராக சசிகலா அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சசிகலா முதல்வராவார் என்ற ஆருடங்கள் உலவிக்கொண்டிருந்தன.

அப்போதும் வாயைத் திறக்கவில்லை பன்னீர்செல்வம். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோதுகூட ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். நேற்று இரவு ஜெயலலிதா சமாதிக்குச் சென்றவர் அங்கு 40 நிமிடங்கள் தியானத்தில் இருந்துவிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். தான் மிரட்டப்பட்டு ராஜினாமா செய்யவைக்கப்பட்டதாகக் கூறுகிறார். இத்தனை நாட்கள் ஏதும் வாய்திறக்காத பன்னீர் செல்வம் இப்போது ஏன் வாய் திறக்கிறார். இதற்குப் பின்னால் திமுக இருக்கிறது என்கிறார்கள். பாஜக இருக்கிறது என்கிறார்கள். அவை இரண்டுமே இருக்கின்றன என்பவர்களும் உள்ளனர். இது ஒரு புறம் இருக்கட்டும். பன்னீர்செல்வம் என்ற மனிதரின் ஆளுமை என்ன? தன்னை மிக்ஸர் என்று சமூக ஊடகங்கள் கிண்டலடித்த போதுகூட அமைதியாகவே இருந்தவர். இப்போது பொங்கியிருக்கிறார். இதற்குப் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள் என்னென்ன?

பொதுவாக, ஒவ்வொரு மனிதனுக்கும் வளைந்துகொடுக்கும் தன்மை என்பது மாறுபடும். சிலர் எதற்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தான் நினைத்ததைத்தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் எனக் கருதுவார்கள். சிலர் எதற்கும் வளைந்துகொடுப்பவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டும் இருவேறு துருவங்கள் என்று வைத்துக்கொண்டால் முன்னதை ஜெயலலிதாவுக்கும் பின்னதைப் பன்னீர்செல்வத்துக்கும் பொருத்தலாம். பொதுவாக,  பார்ப்பதற்கு முன்னதுதான் கம்பீரம் போலத் தோன்றும். இந்த இருவேறு பண்புகளுமே ஆளுமைத்திறன் உடையவைதாம். ஜெயலலிதா போன்ற ஆளுமைக்கு பன்னீர்செல்வம் போன்ற ஒரு ஆளுமை கிடைத்தது இருவருக்குமே சாதகமாக இருந்தது. பரஸ்பர நலனும் வளர்ச்சியும் இருந்தன.

எதற்குமே வளைந்துகொடுக்காதவர்கள் வளைய வேண்டிய சூழல் வரும்போது ஒதுங்குகிறார்கள். எதற்கும் வளைந்து கொடுப்பவர்கள் உடைய வேண்டிய நிலை வரும்போது, வளைய மறுக்கிறார்கள். இதுவும் ஒரு உளவியல் நிலைதான். அந்தப் புள்ளிதான் அவர்களின் 'சாச்சுரேஷன் பாயின்ட்'. அப்படியான நெருக்கடி வரும்போது, அவர்களின் அடிப்படை இயல்புக்கே விடப்பட்ட சவாலாக அது மாறுகிறது. எனவே, யாருமே எதிர்பாரா வண்ணம் முடிவுகளை எடுக்கிறார்கள். வளைந்துகொடுப்பவர்கள் வளைய மறுக்கும் தருணங்களில் அவர்கள் மனம் மிகுந்த ஆவேசத்தோடு இருக்கும். ஏனெனில் அது அந்தக் குணத்தின் உள்ளார்ந்த இயல்பு வெளிப்படும் தருணம். வெளியில் அலைகளற்ற கடலில் உள்ளுக்குள் எரிமலை கொதித்துக்கொண்டிருப்பதைப் போன்ற நிலை இது. உள்ளுக்குள் கொதித்துக்கொண்டிருக்கும் எரிமலைகள் ஒவ்வொன்றாய் வெளிப்படும் நேரமாகவும் இது இருக்கும். 

பன்னீர்செல்வம் சசிகலாவால்தான் ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டப்பட்டார். ஆனால், முதல்வராக அமர்த்தப்பட்டதால் மக்களிடையேயும் மீடியாக்களிடையேயும் அவருக்கு ஏற்பட்ட பிரபல்யம் சசிகலா விரும்பாதது. இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதாவும் விரும்பாதது. இதைத் தெரிந்துதான் பன்னீர்செல்வம் தன் பெயர்ப்பலகையில்கூட அமைச்சர் என்றே பொறித்துவைத்திருந்தார். முதல்வராக இருந்தாலும் அலுவலகக் காரணங்களுக்காக அல்லாமல் வாய் திறக்காதவராகவே இருந்தார். கட்சித் தலைமையிடம் அவருக்கு ஒரு உணர்வுபூர்வமான பற்று இருந்திருக்க முடியுமா என்ற கேள்வி முக்கியமானது. ஆனால், அது குறித்து எல்லாம் நமக்கு அவராக வாய்திறந்தால் அன்றி முடிவாகச் சொல்ல முடியாது. ஆனால், ஜெயலலிதா மேல் அவருக்கு மரியாதை இருந்ததாலேயே அவர் இருந்த வரை அமைதியாக இருந்தார்.

ஜெயலலிதா இருந்த காலத்தில்தான் அவர் முடக்கிவைக்கப்பட்டார். ஆனால் அப்போது அமைதியாக இருக்கக் காரணம் ஜெயலலிதா மீதான மரியாதையாகவும் இருக்கக்கூடும். தன்னால் வளர்த்துவிடப்பட்டவர் என்பதாலேயே சசிகலாவால் பன்னீர்செல்வத்துக்கு இயல்பாக மரியாதை தர இயலவில்லை. உண்மையில், சசிகலா மரியாதை தரவில்லை என்பதுகூட பன்னீருக்குப் பிரச்னையை ஏற்படுத்தி இருக்காது. ஆனால், சசி அண்ட் கோ கோஷ்டியில் உள்ள நண்டுசிண்டுகள் வரை அவருக்கு மரியாதை தரவில்லை என்பதும், மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் வரை யாருமே அவரைப் பொருட்படுத்தவில்லை என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது. இவை எல்லாம்தான் அவரின் கொதிகலன்கள். அமைதியாக இருக்கும் கடலின் ஆழத்தில் உறங்கும் எரிமலைகளைப் பற்றவைத்தவை இந்த உதாசீனங்களும் அவமதிப்புகளுமே... பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு இணையானவர் இல்லை என்று சொன்னால் ஒருவேளை பன்னீர்செல்வம்கூட அதை ஏற்றுக்கொள்வார். ஆனால், அதற்காக அவரை சிறியவர்கள்கூட அவமதிப்பதை எப்படி அவரால் ஏற்றுக்கொள்ள இயலும்?

பொதுவாக, பன்னீர்செல்வம் நிதானமானவர். அதனாலேயே தன் செயல்கள் மீது முழுக்கட்டுப்பாடு கொண்டவர். நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் வந்து அமர்ந்து 40 நிமிடங்கள் தியானத்தில் இருந்திருக்கிறார். தியானத்தை விடுங்கள். அது என்னவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். 40 நிமிடங்கள் ஒரு மனிதனால் ஒரு இடத்தில் அசைவற்று அமர்ந்திருக்க இயலும் என்பது மனப்பயிற்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். மனமும் உடலும் ஒத்துழைத்து ஒருவர் ஓரிடத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் அமர்ந்திருப்பது என்பது நிச்சயமாக ஒரு பயிற்சிதான். பன்னீர் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டும் ஒரு சித்திரம் இது. அவருக்கு தன் செயல்கள் மேல் எவ்வளவு ஆளுமை இருந்தது, எவ்வளவு திட்டமிடல் இருந்தது என்பதன் வெளிப்பாடு இது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இப்போது பன்னீர் செல்வத்துக்கு நேர்ந்திருப்பது அதுதான். உண்மையில் பன்னீர் மிரளவெல்லாம் இல்லை. அவர் என்ன செய்கிறோம் எனத் தெரிந்தே செய்கிறார். ஒவ்வொரு அடியையும் அளந்தே வைக்கிறார். அப்படி வைத்து நடந்து வந்ததால்தான் அவரால் டீக்கடையில் இருந்து கோட்டைக்குச் செல்ல முடிந்திருக்கிறது.

- இளங்கோ கிருஷ்ணன்  
படங்கள்: சக்தி அருணகிரி