பதவி ஏற்க அழைக்கும்படி ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் எழுதுகிறார் எடப்பாடியார். இந்திய வரலாற்றிலேயே பதவி ஏற்பதற்காக ரிமைண்டர் அனுப்பிய ஒரே கட்சி அ.தி.மு.க-வாகத்தான் இருக்கும். இன்றைய தினத்தில் பதவி ஏற்பதற்குப் போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சசிகலா அணியிடம்தான் இருக்கிறது. ஆனால், ஆளுநர் அவர்களைப் பதவி ஏற்க அழைக்காமலேயே வெகுநாட்கள் தாமதப்படுத்துகிறார்... பிறகு ஒருவழியாக அழைக்கிறார். அதுவும்கூட அ.தி.மு.க என்ற மாபெரும் கட்சியின் எதிர்வினைக்குப் பயந்து எல்லாம் அல்ல... சட்டப்படி அது சாத்தியம் இல்லை என்பதாலேயே அழைக்கிறார். இது அ.தி.மு.க-வுக்குச் சரிவு இல்லையா? மாபெரும் மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு கட்சியை ஒரு நியமன ஆளுநர் எப்படிப் பொருட்படுத்தாமல் இருக்க முடிகிறது. அப்படிப் பொருட்படுத்தாமல் இருந்தாலும், இவ்வளவு மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள் ஏன் அமைதியாக மனு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்? அ.தி.மு.க-வினரின் இந்த நிலைக்கு யார் காரணம்? இந்தச் சரிவுக்கு என்ன காரணம்? இது ஓர் அரசியல் சூழல் என்பது இருக்கட்டும். இந்த அரசியல் சூழல் ஏன் உருவானது? இப்படியான அரசியல் சூழல் உருவாகும்போது, அதை எதிர்கொள்வதற்கான திராணி அ.தி.மு.க போன்ற மக்கள் செல்வாக்கு உள்ள கட்சிக்கு ஏன் இல்லாமல் போனது? குழுச் செயல்பாடு ஒரு அமைப்புக்கு ஏன் தேவை?
தனி மனிதனும் குழு உளவியலும்
பூமியில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றும் வாழ்வதற்கு ஒவ்வொரு வாழ்க்கைமுறையைத் தேர்வுசெய்கின்றன. மான்கள், யானைகள், குரங்குகள் கூட்டமாக வாழ்பவை. சிங்கம், புலி போன்றவை தனியாக வாழ்பவை. மனிதன் குரங்கிலிருந்து தோன்றியவன் என்பதால், ஆதியில் கூட்டமாக வாழ்ந்துகொண்டிருந்தவன். அவன் குரங்கிலிருந்து பிரிந்ததாலேயே தனியாகவும் வாழத் தொடங்கியவன். மனித மனம், கூட்டமாகவும் தனித்தும் இயங்கும் திறன் உடையது. கூட்டமாக இயங்கும்போது செயல்படும் உளவியலை, `குழு மனப்பான்மை’ என்பார்கள். ஒவ்வொரு குழுவும் தனி மனிதர்களால் ஆனதுதான் என்றாலும், ஒரு குழு என்பது அதன் அளவில் ஒரு பெரிய உடல். மனித உடலில் ஒவ்வோர் உறுப்பும் தனித்தனியாகவும் இயங்கும், கூட்டாகவும் இயங்கும் என்பதைப் போன்றது இது. மனிதன் கூட்டமாக இயங்கும்போது ஏற்படும் அனுகூலங்கள். அந்தக் குழுவில் உள்ள ஒவ்வொரு தனியர்களுக்கும் போய்ச் சேரும். உண்மையில் அப்படிப் போய்ச் சேர்ந்தால்தான் அந்தக் குழு ஆரோக்கியமாக, நெடுங்காலம் இருக்கும். அப்படி அல்லாமல் கூட்டமான செயல்பாட்டின் பலன்கள் யாரேனும் ஒருவருக்கே போய்ச் சேர்ந்துகொண்டு இருந்தால், ஒரு கட்டத்தில் அந்தக் கூட்டத்தில் பிளவுகள் ஏற்படும். இது ஓர் அடிப்படைக் குழு உளவியல்.
குழு என்பது தனி மனிதர்களால் ஆனது என்று சொன்னோம். அங்கு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் போதுமான செயல்பாட்டுச் சுதந்திரமும் வரையறுக்கப்பட்ட பொறுப்புகளும் இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொரு தனிமனிதனும் குழுவில் செயல்படும்போது தன் வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுக்கான உரிமையை (Ownership) எடுத்துக்கொண்டால் மட்டுமே குழு ஆரோக்கியமாகச் செயல்படும். மேலும், அப்படிப் பொறுப்பு எடுத்துக்கொள்ளும்போது ஒரு தனி மனிதனுக்கு தன்னளவில் ஆளுமைத்திறன் மேம்படும். குழுவாகச் செயல்படும்போது ஏற்படும் அனுகூலங்களில் மிக முக்கியமானது, இந்த ஆளுமைத்திறன் மேம்பாடு. இயற்கையை, சூழ்நிலையைச் சமாளிக்கும் திறன். இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அடிப்படையாக இருக்கவேண்டிய பண்பு. குழுவின் மீதான அதிகாரங்கள் முழுதும் ஒரே இடத்தில், ஒரே மனிதனிடம் குவிக்கப்படும்போது அங்கு குழுத்தன்மைக்குப் பதிலாக ஒருவித விலங்குத்தன்மை ஏற்படுகிறது. இதை, `மந்தை மனநிலை’ (Cattle behaviour) என்பார்கள். சுதந்திரமும் தார்மீகமுமற்ற தனிமனிதர்களின் குழு வெறும் மந்தையாகத் தேய்ந்து காணாமல் போய்விடும். பண்டைய பாரோவான் சாம்ராஜ்யங்கள் முதல் இன்றைய அ.தி.மு.க வரை இதுதான் நிலைமை.
அ.தி.மு.கவின் மந்தை மனநிலைக்கு யார் காரணம்?
இந்தக் கேள்விக்கான பதில் ஜெயலலிதாவோ, சசிகலாவோ அல்ல. அந்தக் கட்சி தோன்றிய காலம் முதலே சற்றும் ஜனநாயகம் இல்லாததாகவே இருந்திருக்கிறது. பின்னர், ஜெ வந்த பிறகு தனிமனிதச் சுதந்திரம் என்பது முன்னைவிடவும் மோசமானது என்பதுதான்
வரலாறு. யானை மாலை போடுவதைப்போல அதிகாரத்தில் இருப்பவர் யாரைக் கண்காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர், அவர்தான் அமைச்சர்... குழுவாகச் செயல்படுவது, குழுவாக உரையாடுவது, குழுவாக முடிவு எடுப்பது, தனிமனிதர்களின் ஆளுமைப் பண்பை மேம்படுத்துவது, அதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியையும் உத்தரவாதப்படுத்துவது என்கிற செயல்பாடுகளே அ.தி.மு.க-வில் இல்லாமல் போனது. தலைமைதான் சர்வ அதிகாரம் கொண்டது என்று ஆன பின் தலைமைக்கு ஜால்ரா போடுகிற, அவர்கள் சொல்வதைச் செய்கிற, அவர்கள் செய்கிற தவறுகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிற ஒரு தனிமனிதனுக்குத்தான் பதவி, அந்தஸ்து என்று ஆனது.
ஒரு குழுவில் ஒற்றை மனிதன் மட்டும் அதிகாரத்தைக் குவித்துக்கொண்டே இருப்பது என்பது ஓர் உடலில் ஒரு பாகம் மட்டும் வீங்கிக்கொண்டே செல்வது போல... அது உண்மையில் வளர்ச்சி அல்ல நோய்மை... அ.தி.மு.க அந்த நோய்மையில் விழுந்து பல வருடங்களாகிவிட்டது. இப்போது அந்த நோய்மை முற்றி இருப்பதன் விளைவுகள்தான் நாம் காணும் அபத்த நாடகக் காட்சிகள். ஆட்சி அமைக்கப் போதுமான பலம் இருந்தும், ஆளுநர் அழைக்கவில்லை. ஆனால், இது குறித்து எதிர்த்து ஒரு குரல் இல்லை. மாறாக நினைவூட்டல் கடிதங்களும், மனுக்களும் கொடுத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் கோர்ட்டுக்குச் சென்று தங்கள் உரிமையை நிலைநாட்டக்கூட அச்சம். என்ன காரணம்? ஊழல் வழக்குகள் பாயும் என்ற பயம்? சரி ஊழல் வழக்குகள் ஏன் பாயும்? ஏனெனில், உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒன்றையே காலிசெய்துவிட்டு, போலியான தனிமனிதத் துதியையும், வழிபாட்டையும் உருவாக்கி, ஊழல் செய்து பணம் முழுவதையும் ஒற்றை இடத்தில் குவித்துக்கொண்டார்கள். இன்று, ஊழல் வழக்கு பாயும் என்று அஞ்சுகிறார்கள். ஊழலை ஒற்றை மையமாக (Centralized) செய்ததில் அ.தி.மு.க செய்த சாதனை முன் உவமை இல்லாதது.
அ.தி.மு.க மட்டும் அல்ல, அது எந்தக் கட்சியாக இருந்தாலும் உழைப்பும், பகிர்வும், முன்னேற்றமும் சமமாக இல்லாவிடில், குழு மனப்பான்மையும் ஜனநாயகமும் இல்லாவிடில், தனிமனிதச் சுதந்திரத்துக்கான இடம் இல்லாவிடில் இப்படியான சீரழிவில்தான் வந்துநிற்கும். இன்று அ.தி.மு.க-வில் சரியான தலைமை இல்லை என்பதற்கு என்ன காரணம்? அவர்களுக்கு குழுவாகச் செயல்படுவது என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஜனநாயகம் என்ற கருத்தாக்கத்தை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை. தனிமனித வழிபாட்டிலேயே காலத்தை ஓட்டிவிட முடியும் என்று நம்பினார்கள். அதிகாரமும் ஆளுமையும் மிக்க தனிமனிதர்கள் காணாமல் போகும்போது தனிமனித வழிபாடு மிகுந்த குழுவும் காணாமல் போகும் என்பதுதான் யதார்த்தம்.
- இளங்கோ கிருஷ்ணன்