Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்
##~##

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு சிசேரியன் செய்யும்போது முதுகில் ஊசி போடப்பட்டு, உடலின் கீழ்ப்பகுதியை மட்டும் உணர்வு இழக்கச் செய்யப்படும். 'முதுகில் ஊசி போடுவதால், வாழ்நாள் முழுவதும் முதுகுவலி இருக்கும்’ என்று சொல்பவர்கள் பலர். 'முதுகில் ஊசியா? வேண்டாம்’ என்று பயப்படுபவர்களும் உண்டு. இப்படிப் பலருக்கும் பரிச்சயப்பட்ட 'ஸ்பைனல் அனஸ்தீஸியா’ (SPINAL ANESTHESIA)என்ற புகழ்பெற்ற மயக்க மருத்துவ சிகிச்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், 'ஆகஸ்ட் பையர்’ என்று அழைக்கப்படும், 'ஆகஸ்ட் கார்ல் கஸ்டாவ் பையர்’ (AUGUST KARL GUSTAV BIER).

1861-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார் பையர். பெர்லின் மற்றும் கீல் நகரங்களில் மருத்துவம் பயின்றார். 1888-ம் ஆண்டு மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்ற பையர், அறுவைசிகிச்சை நிபுணராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கினார். 1846-ல் மார்ட்டனால் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஈதர்’ திரவத்தைக்கொண்டு முழு மயக்கம் அளிக்கும் முறைதான் அக்காலத்தில் பின்பற்றப்பட்டது. முழு மயக்கத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு அதிகமாகப் பக்கவிளைவுகளும், உயிர் இழக்கும் அபாயமும் இருப்பதைக் கண்ட பையர், மயக்கம் இல்லாமல் 'வலி’ நீக்குவதற்கு 'வழி’ முறைகள் இருக்கிறதா? என்று ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

முன்னோடிகள்

1884-ம் ஆண்டு கார்ல் கோலர் (CARL KOLLER)  என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட 'கோகைன்’ கண்ணில் செய்யப்படும் அறுவைசிகிச்சைகளுக்கு வலி நீக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. உடலின் கீழ்ப்பகுதியில்இருந்து உணர்வுகள் தண்டுவடம் மூலமாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுவதால், 'கோகைன்’ மருந்தை, தண்டுவடத்துக்கு அருகில் செலுத்திப் பார்க்கலாம் என்று முடிவு செய்தார்.

34 வயதுடைய ஒரு நோயாளிக்கு, கணுக்காலில் காசநோய் தாக்கியதால் அவருக்கு, காலை அகற்றும் நிலை ஏற்பட்டது. இதற்கு முன்னர் பல அறுவைசிகிச்சைக்கு ஆட்படுத்தப்பட்ட அந்த நோயாளி, முழு மயக்க நிலையின் பக்கவிளைவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, முழு மயக்க நிலைக்கு உட்பட மறுத்தார். அவரிடம் தமது தண்டுவட 'டெக்னிக்’கைக் கூறி, சம்மதிக்கவைத்தார் பையர்.

1898-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி 15 மி.கி. கோகைன் மருந்தை, பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஊசியைப் பயன்படுத்தி, 'செரிப்ரோ ஸ்பைனல் ஃப்ளூயிட்’ (CEREBRO SPINAL FLUID) என்றுஅழைக்கப்படும் மூளைத் தண்டுவடத் திரவத்தில் செலுத்தினார் பையர். அறுவைசிகிச்சையும் வெற்றிகரமாக நடந்தது. நோயாளிக்கு, காலில் சிறிதும் வலி இல்லை. ஆனால், நோயாளிக்கு, தலைவலியும் வாந்தியும் ஏற்பட்டது என்றாலும், பையரின் புதிய நுட்பம் மிகப் பெரிய வெற்றிபெற்றது.

எந்த ஓர் ஆராய்ச்சியையும் விலங்குக்குச் செலுத்திப் பரிசோதிக்காமல், நேரடியாக மனிதனுக்குச் செலுத்தி வெற்றி கண்டார் பையர். தொடர்ந்து ஆறு நோயாளிகளுக்கு, தண்டுவட ஊசியைச் செலுத்தியவர், அதுபற்றிய குறிப்புகளையும் எழுதிவைத்துள்ளார். மயக்க மருத்துவத்தின் சிறந்த ஆவணமாக இன்றளவும் போற்றப்படும் அந்தக் குறிப்பில், இந்த முறையினால் ஏற்படும் விளைவுகளைத் துல்லியமாகக் கணித்துள்ளார்.

தொடுதல், அழுத்தம், தசையின் செயல்பாடுகள் போன்ற உணர்வுகளும் செயல்களும் எந்த வரிசையில் பாதிக்கப்படுகின்றன என்று விவரமாக எடுத்துரைத்த பையர், 1908-ம் ஆண்டு கையில் மட்டும் உணர்வு இழக்கச் செய்யும் முறையினையும் அறிமுகப்படுத்தினார். கையின் மேற்பகுதியில் அழுத்தமான 'பேண்டேஜ்’ வைத்துக் கட்டி, ரத்த ஓட்டத்தை நிறுத்தினார். அந்தக் கையில் உள்ள ரத்தநாளத்தில் வலி நீக்கும் மருந்துகளைச் செலுத்தினால், அம்மருந்து அந்த இடத்தில் பரவி, கையை மட்டும் 'மரத்துப்’ போகச் செய்யும் என்று பையர் கண்டறிந்தது இன்றளவும் மயக்க மருத்துவர்களால் பின்பற்றப்படுவது மட்டுமல்ல - அது BIER BLOCK’என்றே அழைக்கப்படுகிறது.

ஜெர்மனியின் முதல் குடியரசுத் தலைவர் தொடங்கி அனைத்து முக்கியப் புள்ளிகளுக்கும் அறுவைசிகிச்சை செய்துள்ள பையர், 1949-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி, தமது 87-வது வயதில் மறைந்தார்.

- திரும்பிப் பார்ப்போம்...

 பையரின் 'மயக்க’க் குறிப்புகள்:

முன்னோடிகள்

தண்டுவட ஊசியின் வெற்றி, மூளைத் தண்டுவடத் திரவத்தில் மருந்தைச் செலுத்தினால்தான் கிடைக்கும்.

முன்னோடிகள்

 திரவம் அதிகமாக வெளியேறினால், தலைவலி மிகவும் அதிகமாக இருக்கும்.

முன்னோடிகள்

 வலிநீக்கும் மருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டால்தான், இந்த முறை சிகிச்சை பிரபலமாகும்.

முன்னோடிகள்

 படுத்திருந்தால், தலைவலி குறையும். எழுந்தால், அதிகமாகும்.

- இந்தக் குறிப்புகள், இன்றளவும் நிலைத்து நிற்கும் அறிவியல் உண்மைகள்.