Published:Updated:

தியோடர் ஸ்வான்

முன்னோடிகள்-22

##~##

 ந்த மண்ணில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுமே செல்களால் ஆனவை. இந்தக் கொள்கையை நூறாண்டுகளுக்கு முன்னரே தெளிவாக வகுத்துக் கொடுத்தவர், ஜெர்மனியைச் சேர்ந்த 'தியோடர் ஸ்வான்’ (THEODOR SCHWANN).

1810-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி, ஜெர்மனியில் ஒரு பொற்கொல்லரின் மகனாகப் பிறந்தவர் ஸ்வான். ஜெர்மனியின் பான் நகரில் மருத்துவம் பயின்றபோது, பீட்டர் முல்லர் என்ற பிரபல உடல் இயங்கியல் நிபுணரால் ஈர்க்கப்பட்டு அந்தத் துறையிலேயே தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். தாவரங்கள் அனைத்தும் செல்களால் ஆனவை என்ற கருத்து நிலவிய அந்த வேளையில், விலங்குகளின் நரம்பு மற்றும் தசைப்பகுதி திசுக்களை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

1837-ம் ஆண்டு ஸ்லைடன் (SCHLEIDEN) என்பவர், தாவரங்கள் அனைத்தும் செல்களால் ஆனவை என்ற கருத்தை ஸ்வானிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அதே போன்ற அமைப்பை விலங்குகளின் 'நோடோகார்ட்’ (NOTOCHORD) எனும் நரம்பு மண்டலத்தில் தான் கண்டதை நினைவுகூர்ந்த ஸ்வான், அதில் கூடுதல் கவனம் செலுத்தினார். தனது ஆராய்ச்சிகளை 'நுண்ணோக்கியால் காணும்போது தாவரம் மற்றும் விலங்குகளின் அமைப்பு’ (MICROSCOPIC INVESTIGATIONS IN THE STRUCTURE AND GROWTH OF PLANTS AND ANIMALS) எனும் கட்டுரையாக வடித்து, 'அனைத்து உயிரினங்களும் செல் மற்றும் அதனுடைய காரணிகளால் ஆனவை. உயிரின் அடிப்படை அலகு செல்’ என்று குறிப்பிட்டதுதான் இன்றளவும் நிலைத்து நிற்கும் செல் கொள்கை. ((CELL THEORY OF SCHLEIDEN AND SCHWANN).

தியோடர் ஸ்வான்

தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஸ்வான் நகம், இறகுகள், ஈறு முதலியவையும் 'செல்’களால் ஆனவை என்று நிரூபித்தார்.

'நரம்புகளின் மீது மயலின் (MYELIN) என்ற உறை காணப்படுகிறது. அது உணர்வுகளை மிகவும் வேகமாகக் கொண்டுசெல்லப் பயன்படுகிறது’ என்று ஸ்வான் உலகுக்குக் காட்டிய செல்கள் - 'ஸ்வான் செல்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. அதில் வருகின்ற நோய்க் கட்டி 'ஸ்வான்னோமா’ (SCHWANNOMA) என்று அழைக்கப்படுகிறது.

உடல் இயங்குவது, செல்களில் நடக்கும் வேதியியல் மாற்றங்களைப் பொறுத்தது (PHYSICO - CHEMICAL EXPLANATION) என்று நிரூபித்தவர் ஸ்வான்.

நொதித்தல் என்ற வேதியியல் வினையினை முதலில் ஆராய்ந்தவர் ஸ்வான். ஈஸ்ட் என்ற நுண்ணுயிரிதான் நொதித்தலில் முக்கியமானது என்றும், அது உயிருள்ள பொருள் என்றும், நொதித்தலின்போது ஈஸ்ட் பன்மடங்காகப் பெருகுகிறது என்பதையும் நிரூபித்த ஸ்வானின் வாதங்கள் அன்றைய அறிவியல் நிபுணர்களால் ஏற்கப்படவில்லை. பிற்காலத்தில் ஸ்வான் சொன்னது அனைத்தும் உண்மை என்பது லூயி பாஸ்டியரால் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தியோடர் ஸ்வான்

செல்களில் நடக்கும் வேதியியல் மாற்றங்களுக்கு, 'மெட்டபாலிசம்’ (METABOLISM) என்று ஸ்வான் சூட்டிய பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது.

கருவில் ஏற்படும் மாற்றங்களுக்கான அடிப்படைக் கொள்கைகளை வகுத்தவரும் ஸ்வான்தான். கருமுட்டை என்பது ஒரு செல். அது பல செல்களாக உருவெடுத்து முழு மனிதனாக - விலங்காக உருமாறுகிறது என்பதைத் தெளிவாக விளக்கினார்.

ஸ்வானின் கண்டுபிடிப்புகளுக்குப் பல்வேறு நாடுகளும் உரிய அங்கீகாரத்தை வழங்கின. 1879-ம் ஆண்டு இங்கிலாந்தின் மிக கௌரவமிக்க 'ராயல் சொசைட்டி’ மற்றும் பிரான்சின் 'அகாடமி ஆஃப் சயின்ஸ்’ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடைசிக் காலங்களில் இறையியலில் அதிக ஈடுபாடு செலுத்திய ஸ்வான், 1882-ம் ஆண்டு 71-வது வயதில் உயிரிழந்தார்.

ஸ்வானின் 'செரிமான’ ஆராய்ச்சி!

தியோடர் ஸ்வான்

1837-ம் ஆண்டு, உணவு செரிப்பதற்குத் துணைபுரியும் 'பெப்சின்’ என்ற என்சைம் சுரப்பதைக் கண்டறிந்தார் ஸ்வான்.

விலங்கினத்தின் உடலில் இருந்து செரிமானத்துக்காக சுரக்கப்படும் என்சைம் கண்டறியப்பட்டது இதுவே முதன்முறை.

வாய்க்கும் இரைப்பைக்கும் இடைப்பட்ட பகுதியான உணவுக்குழாயின் மேற்பகுதி, வரிவடிவம் கொண்ட தசைகளால் (STRIATED MUSCLES) ஆனது என்றும், அது மெதுவாகச் சுருங்கி விரிவதால், வாயில் இட்ட உணவு இரைப்பைக்குத் தள்ளப்படுகிறது என்பதையும் நிரூபித்தார்.  

இனி, ஒவ்வொரு கவளம் சோறு உள்ளே இறங்கும்போது ஸ்வானை நினைவுகொள்வோம்.

- திரும்பிப் பார்ப்போம்..