மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-21

வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-21

வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-21
##~##

''தீபாவளி முடிஞ்சு ரெண்டு   வாரம் ஆயிடுச்சு. இன்னும் வீடே நெய்ல மணக்குதே...' என உள்ளே நுழைந்தாள் வாசம்பா.

 ''இருக்காதா பின்னே... நீ வர்றப்ப குடுக்கலாம்னு வெச்சிருந்தேன். இந்தா சாப்பிட்டுப் பாரு...' பலகாரத் தட்டை வாசம்பாவிடம் நீட்டினாள் அம்மணி.

'முறுக்கு, காரச்சேவு, மணப்பாகு, மனோகரம்னு... தூள் கிளப்பிட்ட போ. ஓமப்பொடில ஓமத்தோட வாசனை மூக்கைத் துளைக்குது. மிக்சர் லேசாக் கசந்தாலும், அருமையா இருக்கே... அப்படி என்ன சேர்த்த?''

''மிக்சர்ல பூந்தி, ஓமப்பொடி, பொரி, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை... கூடவே சுண்டைக்காயை நெய்ல வறுத்துப் பொடிச்சு சேர்த்திருக்கேன். வயித்துக்கு ரொம்ப நல்லது. இன்னிக்கு எந்தப் பண்டிகைன்னாலும், உடனே கடையில பலகாரங்களை வாங்கிடறாங்க. எண்ணெய், பருப்புனு எல்லாமே கலப்படமா இருக்கிறதால, அது வயித்துக்குச் சேராமப் போயிருது. அதான், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, துளசி, பிரண்டை, ஓமம், சுண்டைக்காய்னு முடிஞ்சவரைக்கும் மருத்துவப் பொருட்களை எல்லாம் சேர்த்து, பக்குவமாப் பலகாரம் செஞ்சேன்.''

'' 'வைத்தியன் கொடுத்தா மருந்து,  இல்லேன்னா அது வெறும் மண்ணு’. ஸ்வீட்டை சத்தானதா மாத்தற வித்தை  தெரிஞ்ச நீ சரியான மருத்துவச்சி. சரி சுண்டைக்காயைப் பத்திக் கொஞ்சம் சொல்லேன்.''

வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-21

''மலைக்காடுகள்ல தானா வளர்றது, 'மலைச்சுண்டைக்காய்’. இதுலதான் வத்தல் செய்வோம். வீட்டுக் கொல்லைப்புறத்துல வளர்றது, நாட்டுச் சுண்டைக்காய். தெனமும் சமையல்ல இதைச் சேர்த்துக்கலாம். உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுத்து, எப்பவும் ஆரோக்கியமா வைக்கிற குணம் சுண்டைக்காய்க்கு உண்டு.

எண்ணெயில் உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்து,  பச்சைச் சுண்டைக்காயைப் போட்டு புளி, உப்பு சேர்த்து தொக்கு செய்யலாம். பயத்தம்பருப்புக் கூட்டும் செஞ்சு சாப்பிடலாம். சோர்வைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தமாக்கும்.''

''வயித்துக்கு ரொம்பவே நல்லதோ...?''

''ஆமாம் வாசம்பா. வயித்துல கிருமி  இருந்தா, வாரம் மூணு நாள் சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தா கிருமி, மூலக் கிருமி எல்லாமே சரியாயிரும். மலச்சிக்கல், அஜீரணம், குடல்புண்கூட சரியாயிரும். வயித்தோட உட்புறச் சுவர் பலமாகிறதுக்கு சுண்டைக்காய்தான் நல்ல மருந்து.

முத்தின சுண்டைக்காயை நசுக்கி மோர்ல ஊறவெச்சு, வெயில்ல காயவெச்சு, திரும்பவும் அதே மோர்ல போட்டு, காயவைக்கணும். சுண்டைக்காய் காய்ஞ்சதும் எடுத்துப் பத்திரப்படுத்திக்கணும். தெனமும் எண்ணெயில் சுண்டைக்காயை வறுத்து, சூடான சாதத்துல கொஞ்சம் நெய் சேர்த்துச் சாப்பிடும்போது தொட்டுக்கலாம். குழம்பும் செய்யலாம். மார்புல சளி கட்டாது. குடல் கசடுகளை எல்லாம் நீக்கிடும். சர்க்கரை நோயாளிங்களுக்கு வர்ற கை கால் நடுக்கம், சோர்வு, மயக்கம், வயித்துப் பொருமல் எல்லாமே சரியா போயிரும்.''

வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-21

''சுண்டை வத்தல் செய்ய ஆசைதான். மழைக்காலத்துல எங்க காயவைக்கிறது?''

''நாட்டு மருந்துக்கடையில உப்பு சேர்த்து, சேர்க்காம சுண்டை வத்தல் விக்குது. அதை வாங்கிக்கவேண்டியதுதான் வாசம்பா. மூச்சுவிட முடியாமக் கஷ்டப்படுறவங்களுக்கு அடிக்கடி சுண்டைக்காயை உணவுல சேர்த்துக்கலாம். சுண்டைக்காயை சூரணம் மாதிரி செஞ்சும் வெச்சுக்கலாம். எப்பல்லாம் வயிறு பிரச்னை பண்ணுதோ, அப்பல்லாம் இந்தச் சூரணத்தை, சுண்டைக்காய் அளவு எடுத்து நீர்ல கரைச்சுக் குடிக்கலாம். சுண்டைக்காயோட மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செஞ்சு சின்னப் பிள்ளைங்களுக்குக் கொடுத்திட்டு வந்தா, அடிக்கடி வர்ற ஆசனவாய் எரிச்சல், அரிப்பைக்கூட சரியாக்கிரும். ஆனா, சிலருக்கு சுண்டைக்காயும் ஒத்துக்காமப் போகலாம். அவங்க உடல்வாகுக்கு ஏத்த மாதிரி அளவோடதான் சாப்பிடணும்.''

' 'மிகினும் குறையினும் நோய் செய்யும்’னு திருக்குறளே சொல்லி இருக்கு. எதையுமே அளவோடு சாப்பிட்டா ஆபத்தே இல்லை.''

''கபக்கட்டு, இருமல், தொண்டைக்கட்டு, தலைசுத்தல், வாந்தி, மயக்கம் இருந்தா, பச்சைச் சுண்டைக்காயை ரெண்டா நறுக்கி, அதோட சின்னவெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து நல்லா கொதிக்கவெச்சு இறக்கி, சூப் செஞ்சு குடிக்கலாம். சிறுநீரைப் பெருக்கும். வாய் கசப்புக்குக்கூட நல்லது!''

''கசக்குற சுண்டைக்காய் வாய் கசப்பையே போக்குதே... ஆச்சர்யம்தான் அம்மணி.'

'மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சு... சூடா இஞ்சி டீ போட்டுத் தாரேன்...'' அடுக்களைக்குள் அம்மணி நுழைய, அட... ஆமாங்க... அடுத்து இஞ்சிதான்!

- பாட்டிகள் பேசுவார்கள்...