ஜியோவான் பாடிஸ்டா மார்காக்னி
##~## |
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற குறளின்படி, 'நோய் நாடும்’ முறையினை, 'நோய் சார்ந்த உடற்கூற்றியல்’ (PATHOLOGICAL ANATOMY) என்று உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், 'மார்காக்னி’ என்று அழைக்கப்படும் ஜியோவான் பாடிஸ்டா மார்காக்னி (GIOVANNI BATTISDA MORGAGNI).
1682-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி இத்தாலியில் பிறந்தார் மார்காக்னி. மருத்துவம் மற்றும் தத்துவப் படிப்புகளில் சேர்ந்த மார்காக்னி, தனது 19-வது வயதிலேயே இரு துறைகளிலும் டாக்டர் பட்டம் பெற்றார். காது சார்ந்த ஆராய்ச்சிகளில் புகழ்பெற்ற வால்சால்வா (VALSALVA) என்ற மருத்துவரிடம் உதவி மருத்துவராகச் சேர்ந்த மார்காக்னி, தமது ஆசிரியர் வெளியிட்ட 'காதுகளின் அமைப்பும், நோயின் குறைபாடுகளும்’ என்ற புத்தகத்துக்குப் பெரிதும் உதவினார்.
24-வது வயதிலேயே கல்விப்புலத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் மார்காக்னி. தமது காலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தரத்தை மிகவும் மேம்படுத்தினார்.
குரல்வளை, கண்ணீர் சுரப்பி மற்றும் பெண்களின் இடுப்புப் பகுதி உறுப்புகளின் அமைப்புகள் பற்றி 1706-ம் ஆண்டு மார்காக்னி வெளியிட்ட நூலின் மூலம், ஐரோப்பா முழுவதும் 'துல்லியமான உடற்கூறு நிபுணர்’ என்ற புகழைப் பெற்றார்.
பல்கலைக்கழகத்தின் உடற்கூற்றியல் தலைவராக நியமிக்கப்பட்ட மார்காக்னிக்கு ஊதியமாக 1,200 தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. இவருக்கு அடிக்கடி ஊதிய உயர்வு வழங்கலாம் என்று பல்கலைக்கழக செனட் தீர்மானம் நிறைவேற்றியது, இவருக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம்.
அனைத்துத் தரப்பு மக்களிடமும் இனிமையாகப் பழகிய மார்காக்னி, கிறித்துவ மத குருமார்களான கார்டினல் மற்றும் போப் ஆகியோரின் மரியாதையையும் பெற்றார்.

1717-ல் இருந்து 1719-ம் ஆண்டுகளுக்குள், உடற்கூறு பற்றி ஐந்து பாகங்களாக நூல்கள் வெளியிட்டார். பித்தப்பைக் கற்கள், சிரைகளின் வெடிப்பு (VARICES OF VEINS) போன்ற இவரது ஆராய்ச்சிகள் உலகப் புகழ் பெற்றவை.

80-வது வயதில் (1761) நோய் சார்ந்த உடற்கூற்றியலை ஒரு தனித்துவம் பெற்ற துறையாக அங்கீகரிக்கும் வண்ணம் - தமது ஆராய்ச்சி முடிவுகளை (De SEDIBUS ET CAVSIS MORBORUM PER ANATOMEM INDAGATIS) வெளியிட்டார். இந்த நூலில் 646 நபர்களின் இறந்த உடலை உடற்கூறு செய்து எழுதியதாக மார்காக்னி குறிப்பிட்டுள்ளார். மிகத் தடிமனான நூலாக இருந்தாலும் நான்கு வருடங்களுக்குள் லத்தீன் மொழியிலேயே மூன்று முறை மறுபதிப்பு செய்யப்பட்டது.
குழந்தைகள் அறுவைசிகிச்சையிலும் பல ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்ட மார்காக்னி, அந்தத் துறை வளர்வதற்குப் பெரிதும் உதவியுள்ளார்.
ஜெர்மனி நாட்டின் அறிவியல் நிபுணர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு ஜெர்மன் நூலகம் அமையக் காரணமாக இருந்த மார்காக்னி, லெபோல்டினா கல்விப் புலம், ராயல் சொசைட்டி, ஃபாரின் அகாடமி, பீட்டர்ஸ்பர்க் அகாடமி, பெர்லின் அகாடமி அனைத்திலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உடற்கூற்றியலில் ஆர்வம்கொண்டு பல ஆராய்ச்சி முடிவுகள் வெளியிட்டதால், 'நோய் சார்ந்த உடற்கூற்றியலின் தந்தை’ எனப் போற்றப்படுகிற மார்காக்னி, 89வது வயதில், 1771-ம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி மறைந்தார்.
பெருமை சேர்த்த பெயர்
நம் மார்பையும், வயிற்றையும் பிரிக்கும் மூச்சுத் தசையான உதரவிதானத்தில், முன் பக்கத்தில் ஒரு துவாரம் உள்ளது என்றும் அது வழியாக ரத்தக் குழாய்கள் செல்கின்றன என்றும் நிரூபித்தார். அது மார்காக்னி துவாரம் என்றே அழைக்கப்படுகிறது. இதன் வழியாக வரும் ஹெர்னியா, (மார்காக்னி ஹெர்னியா), ஆண்களிடம் சில சமயங்களில் காணப்படும் கூடுதல் விதையுறுப்பு, பெண்களிடம் காணப்படும் சினைக்குழாயைச் சுற்றியுள்ள கட்டி (HYDATID OF MORGAGNI), மலக்குடலின் அடிப்பகுதியில் காணப்படும் சவ்வு மடிப்புகள் (COLUMNS OF MORGAGNI) போன்றவையும் மார்காக்னி பெயரால் அழைக்கப்படுகின்றன. சுருங்கச் சொன்னால் மார்காக்னி கண்டுபிடித்த அனைத்துக்கும் அவர் பெயரைச் சூட்டினால் மனித உடலின் உறுப்புக் கோளாறு களில் மூன்றில் ஒரு பகுதி மார்காக்னி பெயர்தான் இருக்கும்.
- திரும்பிப் பார்ப்போம்...