மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-22

இஞ்சி இடுப்பழகு!

##~##

'இஞ்சி டீ குடிச்சதும், உச்சந்தலை வரை உறைப்பு ஏறுது... நெஞ்சுல அடைப்பெல்லாம் போன மாதிரி இருக்கு அம்மணி!''

'சாப்பிட்டது சீக்கிரமே செரிக்க, இஞ்சிக்கு மிஞ்சினது எதுவும் இல்லை வாசம்பா. எஞ்சி இருக்கிற காலத்தை நோயில்லாமக் கழிக்கணும்னா, தினமும் இஞ்சிச் சாறு குடிக்கணும். இஞ்சிச் சாறுல, தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயித்துல ஒரு கரண்டி சாப்பிட்டு, கூடவே வெந்நீரையும் குடிச்சிட்டு வந்தா, தொப்பை கரைஞ்சிடும். உடல்ல நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எப்பவும் என்னை மாதிரி சுறுசுறுப்பா இருக்கலாம்...' என்ற அம்மணியைப் பார்த்து,  

'நீ இளமையாதான் இருக்க... ஆனா, சில சமயம், இஞ்சி தின்ன குரங்கு மாதிரியும் தெரியறியே...' என்று வாசம்பா கிண்டலடித்தாள்.

'மண்ணு விளையற பூமியில மஞ்சளும் இஞ்சியும் இணைஞ்சு கொஞ்சி விளையாடுற அழகே தனி. அதுபோல, ஒட்டிப்பிறந்த ரெட்டைப்பிறப்பா  நம்மள மிஞ்சிட யாரால முடியும் வாசம்பா. நீ மஞ்சள்னா... நான் இஞ்சி. என்ன... மஞ்சள் உன்ன மாதிரி அழகா இருக்கு. இஞ்சி என்னை மாதிரி பார்க்க சுமாரா இருக்கு'' என்று அன்பைப் பொழிந்தாள் அம்மணி.

வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-22

''போதும்டி, உன் பாசத்துக்கு விலை ஏது? நம்ம பக்கத்து வீட்டு ராசாத்தி இருக்காளே... அவ பொண்ணு வசந்தி சின்னக் குழந்தையா இருக்கிறப்ப, 'அடிவண்டி ஆனை போல’னு சொல்லியே சாப்பாட்டை மகளுக்கு ஊட்டிவிடுவா. அது நெசமாயிடுச்சு அம்மணி. வசந்திக்கு 22 வயசு.இப்பவே 70 கிலோ இருக்காளாம். வரன் வேற பார்க்கிறாங்க. இஞ்சி, உடல் எடையைக் குறைக்குமா அம்மணி?'

''உடம்பு இளைக்க, இஞ்சிச் சாறை பால்ல கலந்து தினமும் காலையில சாப்பிட்டுவந்தா, ஊளைச் சதை குறையும். ஒரு துண்டு இஞ்சியை அரைச்சு ஒரு டம்ளர் மோர்ல கரைச்சுக் குடிச்சிட்டு வந்தா, இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராம இருக்கும். சேர்ந்த கொழுப்பும் கரைஞ்சிடும். வரனும் தேடிவரும்.'  

'சரி... வேற என்ன பலனெல்லாம் இருக்கு இஞ்சியில?'

வைத்திய அம்மணியும் சொல்வடை வாசம்பாவும்-22

'இஞ்சிச் சாறுகூட வெங்காயச் சாறு கலந்து ஒரு வாரம், காலையில ஒரு கரண்டி குடிச்சிட்டு வந்தா, ரத்தத்துல சர்க்கரை அளவு குறையும். ஜலதோஷம், தலைவலி போகும். ரத்த ஓட்டம் சீராகும். மலச்சிக்கலைப் போக்கும். இஞ்சிச் சாறுல வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தா, வாதம் நீங்கும். காலையில் இஞ்சிச் சாறுல உப்பு சேர்த்து மூணு நாள் சாப்பிட்டு வந்தா, பித்தம் தலைசுத்தல்கூட சரியாயிடும்.'  

' 'சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை’ங்கிறாங்களே... சுக்குக்கும் இஞ்சிக்கும் என்ன வித்தியாசம் அம்மணி?'

'இஞ்சி காய்ஞ்சா சுக்கு. இஞ்சியைத் தோலோட சாப்பிடக் கூடாது. வயித்துக் கடுப்பு வந்திடும். இஞ்சியோட தோலை நீக்கி, சின்னத் துண்டுகளா நறுக்கி, சம அளவு சுத்தமான தேனைச் சேர்த்து, நாலு நாள் கழிச்சு தினமும் ரெண்டு துண்டுகளை 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, வயிறு பிரச்னை எதுவுமே கிட்ட நெருங்காது. உடம்பு ஆரோக்கியமா இருக்கும். பெண்களுக்கு வர்ற கர்ப்பப்பை வலி, மாதவிலக்கின்போது வர்ற அடிவயித்து வலிக்குக்கூட நல்ல மருந்து. ஆயுசும் அதிகரிக்கும். இதுவும் ஒரு காயகல்பம் மாதிரிதான்.''  

''இஞ்சிமுரப்பானு விக்குதே... அதுல என்ன பயன் அம்மணி?

''இஞ்சியில் சர்க்கரைப் பாகு சேர்த்துப் பதப்படுத்தி நாட்டு மருந்துக் கடைகள்ல விக்கிறாங்க. வயிறு உப்புசம், புளிச்ச ஏப்பம், வாந்தி, குடல் கோளாறு, கபம், மார்புச் சளி சேர்ந்து இரைப்புத் தொல்லை வரும்போதெல்லாம் இஞ்சிமுரப்பாவை வாயில அடக்கிக்கலாம். சட்டுனு சரியாயிடும்.''

''இஞ்சியைப் பத்தி  இவ்ளோ சொல்லிப்புட்ட... 'கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்’னு நாம வாழ்நாளைக் கடத்திட்டு இருக்கோம். அடுத்த மாசம் பதினாலாம் தேதி, நம்ம சின்னாத்தாவோட பேரனுக்கு 'எண் கண்’ கோயில்ல காதுகுத்து. உனக்கும் பத்திரிகை வெச்சிருக்காங்க அம்மணி. மறந்திடாத...''

''மறதியா? ஒருக்காலும் அதுக்கு வாய்ப்பில்லை வாசம்பா'' என்று  சிரிக்க...

அடுத்து.... அம்மணி புட்டுப் புட்டு வைக்கப்போவது வல்லாரை!

- பாட்டிகள் பேசுவார்கள்...