Published:Updated:

இளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41

ஆண்மைக்கு வேட்டு வைக்கும் ஆல்கஹால்

##~##

பொதுவாக மதுவை, 'திரவத் தீ’ என்பார்கள். மது உடலை மட்டுமல்ல, உடல் சம்பந்தப்பட்ட நியாயமான ஆசைகளையும் பொசுக்கிவிடும். இது உடலுக்குள் கலந்துவிட்டால் உடலும் மனமும் தொய்வடைந்து, தாம்பத்தியமும் தள்ளாடத் தொடங்கிவிடும். 'ஆல்கஹால் சாப்பிட்டால் பாலுறவு ஆசை அதிகரிக்கும். ஆனால், செயல்திறன் (பெர்ஃபார்மன்ஸ்) குறையும்’ என்பது ஷேக்ஸ்பியரின் பிரபலமான வாக்கியம். ஆனால், செயல்திறனோடு, பாலுறவு ஆசையும் குறையும் என்பதுதான் உண்மை.

ஆண்களுக்குப் பாலுறவு தூண்டல் என்பது காட்சிகளின் மூலம் உண்டாகும். அதனால்தான் அழகான பெண்கள் கடந்துபோகும்போது பெரும்பாலான ஆண்கள் கவனிக்கிறார்கள். ஆனால், பெண்களைப் பொருத்தவரை அன்பான வார்த்தை, கனிவான தொடுதல், ஆதரவாக இருத்தல் இவற்றின் மூலமாகவே பாலுணர்வின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும்.

ஆரோக்கியமான, ஆனந்தமான தாம்பத்திய உறவுக்கு உடல்தான் முக்கியம் என்றாலும், அதற்கான தூண்டல் மூளையில் நடக்கிறது. ஆல்கஹாலின் முக்கியமான வேலையே, அதை அருந்தியவுடன் உடனடியாக மூளையையும் நரம்பு மண்டலங்களையும் தாக்குவதுதான். அதனால்தான் மது அருந்தியதும் உடம்பு தள்ளாட ஆரம்பித்துவிடுகிறது.

இளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41

'நியூரோ டிரான்ஸ்மிட்டர் எஃபெக்ட்’ என்ற மூளையின் தூண்டல்தான், 'பாலுறவுக்குத் தயாராகுங்கள்’ என்று கட்டளை போடுகிறது. தொடர்ச்சியான மதுப் பழக்கத்தால் மூளை தள்ளாடும்போது, இந்தத் தூண்டலில் துண்டு விழுந்து தாம்பத்தியமும் துண்டிக்கப்பட ஆரம்பிக்கிறது'மது அருந்திவிட்டுபாலுறவு வைத்துக்கொள்ளும்போது, அதிக நேரம் உறவு வைத்துக்கொள்வதுபோல் இருக்கிறதே’ என்று சிலர் கருதலாம். ஆனால், அது உண்மை அல்ல. மது அருந்திவிட்டால் நேரம், காலம் கணக்கெல்லாம் தெரியாது. அதனால்தான் அப்படித் தோன்றுகிறது.

மது நேரடியாக ஈரலையும் பாதிக்கிறது. ஈரலுக்கும், வீரியமான விந்து உற்பத்திக்கும் தொடர்பு இருக்கிறது. ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டோஸ்டீரான் ஆண்களுக்கு விதைப் பையில் உள்ள டெஸ்டிஸில் உற்பத்தியாகிறது. இந்த ஹார்மோன், ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயணிக்கிறது. இது ஈரலை அடையும்போது, இந்த டெஸ்டோஸ்டீரானைத் தனியாகப் பிரித்து, வீரியப்படுத்தி அனுப்பி வைக்கிறது. வீரியமான டெஸ்டோஸ்டீரான் வீரியமான விந்து அணுக்கள் உற்பத்திக்குக் காரணமாக இருக்கிறது. மது அருந்தும்போது இந்த வீரியப்படுத்தும் பணியைச் செய்யும் ஈரலின் செயலை, ஆல்கஹால் மட்டுப்படுத்துகிறது.

ஆல்கஹால் மூளையைத் தாக்குவதால் பாலுறவுத் தூண்டலும், ஈரல் பாதிக்கப்படுவதால் வீரியமான விந்து அணுக்கள் பாதிப்பும் ஏற்படும். ஒவ்வொரு முறை பாலுறவின்போதும் மதுவை அருந்தும் கட்டாயத்துக்கு உடம்பு பழகிவிடும். நாளடைவில் பாலுறவு என்பது இரண்டாம்பட்சமாகி, மது முதல் இடத்தை ஆக்கிரமித்துவிடும்.

இளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மது அருந்திவிட்டுத்தான் அந்தச் செயலைச் செய்வார்கள். செக்ஸ் என்பது குற்றம் அல்ல; இயற்கை கொடுத் திருக்கும் உடலின் நியாயமான தேவை.

பொதுவாகவே மது அருந்தும் ஆண்களை, புகைபிடிக்கும் ஆண்களை, பெண்கள் விரும்புவது இல்லை. மது அருந்துவது கௌரவமான செயலும் அல்ல. உடல், மனம் மற்றும் சமூக நலத்துக்குக் கேடான மது அருந்தும் பழக்கத்தை விட்டொழிப்பது தாம்பத்தியத்துக்கும் நல்லது; குடும்பம் தள்ளாடாமல் இருக்கவும் நல்லது.

- இடைவேளை...

தீர்வுகள்:

• மதுவை முற்றிலும் தவிர்ப்பது.

• மிதமான உடற்பயிற்சி செய்வது.

• ஆல்கஹால் மறுவாழ்வு சிகிச்சை எடுத்துக்கொள்வது. (இந்தச் சிகிச்சை, சென்னை டி.டி.கே. மருத்துவமனையில் எடுத்துக்கொள்ளலாம்)

• 'ஆல்கஹால் அனானிமஸ்’ அமைப்புகளில் சேர்ந்து, அவர்களின் ஆலோசனையின்படி நடப்பது.

இளம் ஜோடிகளுக்கு குட்நைட் - 41

ஆணுக்கு நிகர்!

பெண்களும் தற்போது மது அருந்த ஆரம்பித்துவிட்டார்கள். உடற்கூறின்படி ஆல்கஹால், ஆண்களைவிட, பெண்களை மிகச் சீக்கிரத்தில் பலம் இழக்கச் செய்துவிடுகிறது. மது அருந்துதல் தவறுதான் என்றாலும், ஆண்களுக்குப் பாதுகாப்பான மது அளவு 60 மி.லி. என்றால் பெண்களுக்கு 30 மி.லி. அளவுதான். இதனைத் தாண்டும்போதுதான் பாதிப்புகளுக்கு ஆளாக நேருகிறது.