Published:Updated:

முன்னோடிகள் 24

கார்ல் லாண்ட்ஸ்டெயினர்

##~##

த்தம் வெளியேறியவர்களின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் செலுத்துவது மருத்துவ வழக்கம். மிகச் சிக்கலான அறுவைசிகிச்சைக்கு முதலில் தேவைப்படுவதும் ரத்தம்தான். ரத்தம் செலுத்தும் முறையை, ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்து நெறிப்படுத்தியதன் மூலம், 'ரத்த மாற்று மருத்துவத்தின் தந்தை’ என்று போற்றப்படுபவர் டாக்டர் கார்ல் லாண்ட்ஸ்டெயினர் (Karl Landsteiner).

ஆஸ்திரியா நாட்டில் உள்ள வியன்னாவில் 1868-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி, புகழ்பெற்ற பத்திரிகையாளரின் மகனாகப் பிறந்தார் லாண்ட்ஸ்டெயினர். தம் ஆறு வயதில் தந்தையை இழந்தார், தாயின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்து, 1891-ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார்.

உடற்கூறு சார்ந்த நோய்க்குறியியல் துறையில் வெய்சல்பாம் (WEICHELBALM) என்ற பேராசிரியரின் கீழ் 10 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது, உடற்கூறு அறிவியலைவிட, உடலின் செயல்பாடுகளிலேயே அதிக அளவு ஆராய்ச்சி செய்தார். பல அறிவியல் நிபுணர்கள் இதை எதிர்த்த போதிலும், அவரது பேராசிரியர் ஊக்கம் கொடுத்ததால், தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார்.

முன்னோடிகள் 24
முன்னோடிகள் 24

1875-ம் ஆண்டு லாண்டாய்ஸ் (Landois) என்பவர், விலங்குகளின் ரத்தத்தை மனிதனுக்குச் செலுத்தும்போது, அந்த ரத்தம் முழுதும் சேதம் அடைந்து, ரத்த அணுவான ஹீமோகுளோபினை வெளிப்படுத்துகிறது எனக் கண்டறிந்தார். அதைப் பின்பற்றிய லாண்ட்ஸ்டெயினர், ஒரு மனிதனின் ரத்தத்தை மற்றொரு மனித ரத்தத்துடன் கலந்து சோதனை செய்தார். அதில் ஒன்று உறைந்தது, மற்றொன்று உறையவில்லை. இப்படித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து ரத்தத்தில் மூன்று பிரிவு உள்ளதைக் கண்டறிந்தார். அதற்கு ஏ, பி, சி எனப் பெயரிட்டார். (இந்த 'சி’ வகை பின்னாளில் 'ஓ’ ஆனது). ''ஒரே வகை ரத்தத்தைச் செலுத்தினால் பிரச்னை இல்லை; மாறுபட்ட வகை ரத்தத்தைச் செலுத்தும்போது, நாடித் துடிப்பின்மை, மஞ்சள் காமாலை, ரத்த அணுக்கள் சிறுநீரில் வெளியாதல் (HEMOGLOBINURIA) போன்றவை ஏற்படலாம்' என்று 1901-ல் முடிவுகளை வெளியிட்டார். இந்த மிகப் பெரிய கண்டுபிடிப்புக்காக 1930-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

நோய் மற்றும் ஒவ்வாமை ஆராய்ச்சியில், நோய்க்கிருமி அல்லது ஒவ்வாமையைத் தூண்டும் பொருளான ஆன்டிஜன் (ANTIGEN) தாக்கும்போது எதிர்ப்பு சக்தியாக ஒரு பொருள் சுரக்கிறது என்று குறிப்பிட்ட லாண்ட்ஸ்டெயினர் அதை 'ஹேப்டன்’ (HAPTEN) என்று அழைத்தார். இன்றளவும் அது 'ஹேப்டஸ்’ என்றே அழைக்கப்படுகிறது. ரத்த அணுவான ஹீமோகுளோபின் திடீரென சிறுநீரில் வெளியாதல் (PAROXYSMAL HEMOGLOBINURIA) பற்றிய அடிப்படைத் தத்துவங்களையும் வெளிப்படுத்தினார்.

ஆராய்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் செலவிட்ட லாண்ட்ஸ்டெயினர், 1943-ம் ஆண்டு, ஜூன் 26-ம் தேதி, தனது ஆய்வகத்தில் கையில் சோதனைக் குழாயைப் பிடித்தபடியே மாரடைப்பால் உயிரிழந்தார். மிகச் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படும் 'லாஸ்கர் விருது’ (LASKER AWARD) மரணத்துக்குப் பிறகு இவருக்கு அளிக்கப்பட்டது.  

நிறைவுற்றது.

தொகுப்பு : உமா ஷக்தி, உ.அருண்குமார்.

 போலியோ கிருமிக்கு முடிவு!

இர்வின் பாப்பருடன் இணைந்து போலியோ நோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட லாண்ட்ஸ்டெயினர், 1909-ம் ஆண்டு போலியோ வைரஸ் கிருமியைக் கண்டறிந்தார். போலியோ கிருமியால் உடலில் உண்டாகக் கூடிய நோய்த் தடுப்பு சக்திகளையும், அதனால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிப் பலரும் ஆராயத் தொடங்கினார்கள். இந்த ஆராய்ச்சிகள் தொடங்க முன்னோடியாக இருந்தவர் லாண்ட்ஸ்டெயினர்தான்.

 வாழ்நாள் ஆராய்ச்சியாளர்

மாணவப்பருவத்திலேயே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, 'உணவுப் பழக்கங்களால் ரத்தத்தின் உட்பொருள்களில் ஏற்படும் மாற்றங்கள்’ எனும் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார்.

நோய் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மருத்துவப் பட்டம் பெற்ற பின் வியன்னா மருத்துவமனையில் சேர்ந்து, நோய் எதிர்ப்பு சக்தி, அலர்ஜி சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

1919 முதல் 1922 வரை ஹேப்டன்கள் பற்றி 12 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட இவர், ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா (PLASMA) பற்றிய ஆய்வில் தனது வேதியியல் அறிவினைப் புகுத்தி வேதியியல் மாற்றங்களைக் கண்டறிந்து மிகவும் பாராட்டு பெற்றார். ராக்பெல்லர் நிறுவனத்தின் வாழ்நாள் பேராசிரியராக நியமிக்கப்பட்ட லாண்ட்ஸ்டெயினர் 75 ஆராய்ச்சிக் கட்டுரைகளும், 3,600 பிண ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.