மூளையை சுறுசுறுப்பாக்கும் வல்லாரை...
##~## |
'கல்யாண விருந்துன்னா இதுதான். வாய்க்கு ருசியா வடை, பாயாசம் மட்டுமில்லாம, கறிவேப்பிலைத் துவையல், இஞ்சி புளி, பாவக்காய் பிட்லா, அப்பப்போ பழச்சாறுன்னு சத்தையும் சேர்த்துப் பரிமாறிட்டாங்க. நம்ம வீட்டுக் கல்யாணம் மாதிரியே இருந்துச்சு... இப்ப நெனைச்சாக்கூட, பிரமிப்பா இருக்கு வாசம்பா...''
'பின்ன, நம்ம சின்னாத்தா வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா... விருந்தும் மருந்தும் மூணு நாள்தானே. மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டாச்சு. இன்னிக்குச் சமையல் ஆக்கணும்னாலே சலிப்பா இருக்கு. உடம்பும் சோர்வா இருக்கு அம்மணி...'
'கொட்டுற பனியில எந்திருக்கவே கஷ்டம்தான். நீ வருவேனு தெரிஞ்சுதான், வல்லாரைத் துவையலும், மல்லி, மிளகு சீரகக் கொட்டு ரசமும் செஞ்சுவெச்சிருக்கேன். அலைச்சல்னால வர்ற சோர்வு, தொண்டைக்கட்டு, காய்ச்சல், பல் நோய், பசி, தாகம்னு அத்தனையும் சரியாயிடும். ரத்தத்தை சுத்திகரிக்கும். இந்தக் கீரைல பல் துலக்கிட்டு வந்தா, மஞ்சள் பல்லும் வெளுப்பாயிடும்.'

'அட... போன தடவை வந்தப்பதான் வல்லாரையைப் பத்திக் கேட்டேன். மறக்காம செஞ்சிட்டியே... என்ன ஞாபகசக்தி உனக்கு?'
'இருக்காதா பின்னே... எனக்கு நெனவு தெரிஞ்ச நாள் முதலா, வல்லாரை இலையைப் பொடிச்சு, தெனத்துக்கும் ரெண்டு வேளை கால் டீஸ்பூன் தந்திடுவாங்க என் அப்பத்தா. இப்ப வரைக்கும் அதுமாதிரி செஞ்சு சாப்பிட்டுட்டு இருக்கேன். தெரியுமா!
இன்னிக்குச் சின்னப் புள்ளைங்களுக்குக்கூட சர்க்கரை நோய் வருது. இதுக்கு மாத்திரை மருந்தே தேவையில்லை. வல்லாரைக் கீரை, பொடுதலை இலை ரெண்டையும் சமமா எடுத்துக்கிட்டு தனித்தனியா ஆய்ஞ்சு கழுவி, வெயில்ல காயவைச்சுப் பொடிச்சிக்கணும். இந்த ரெண்டு பொடியையும் கலந்து அதுல ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து ஒரு குழிக்கரண்டி தேனை விட்டு, காலை, சாயந்திரம் ரெண்டு வேளைகள் தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தா, சர்க்கரை நோய் நம்ம கட்டுக்குள்ள வந்திடும்.'

'தினமும் வல்லாரைக் கீரைக்கு எங்க போறது அம்மணி?'
'கொஞ்சம் கசப்பா இருக்கிறதால யாருமே பறிக்காம, தாமரைக் குளத்துப் பக்கம் தானா வெளைஞ்சுகெடக்கு.'
'தரையில் தவழும் மூலிகைச் செடிகள் எல்லாமே காலனை விரட்டும் சரவெடிகள்தான். சரி... எனக்கு ஒரு சந்தேகம்! வல்லாரை, தோல் நோயைச் சரிசெய்யுமா அம்மணி? எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகை ஒருத்தங்களுக்கு, தோல் நோய்னு பேப்பர்ல போட்டிருக்கு... அதான் கேட்டேன்'' என்று வாசம்பா சிரிக்க...
'வல்லாரை, உடம்புக்குக் குளிர்ச்சி. கீரையில் பால் சேர்த்து அரைச்சு, விழுதை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தா, தோல் சம்பந்தப்பட்ட நோய் அத்தனையும் சட்டுனு குணமாயிடும். உஷ்ணத்தினால் ஏற்படுற தோல் நோய், கட்டி, படை, தேமல்னு எல்லாத்தையும் குணப்படுத்திடும். மாலைக் கண் நோயும் குணமாகும்.

வல்லாரை இலைகூட மிளகு, துளசி இலை இரண்டையும் சமஅளவு எடுத்து மெழுகு பதத்துல அரைச்சு, மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திவைச்சுக்கணும். காய்ச்சல் வந்தா, வெந்நீர்ல போட்டுச் சாப்பிடணும். நல்லாக் குணம் தெரியும். வல்லாரை இலையைத் தொடர்ந்து கால்ல கட்டிட்டு வந்தா, யானைக்கால் நோய்கூட சரியா போயிடும். குடல் புண், வாய்ப் புண், வாய் துர்நாற்றம் போகும். உடல் சூடு தணியும்.
மனவளர்ச்சி குன்றியவங்களுக்கு வல்லாரைக் கீரையில் பருப்பு சேர்த்து, கூட்டு மாதிரி செஞ்சு வாரம் ஒரு முறை சாப்பிடக் கொடுத்திட்டு வந்தா, மூளை நல்லா சுறுசுறுப்பா வேலை செய்யும் வாசம்பா.''
''வல்லமை நெறைஞ்ச வல்லாரைங்கிறது சரியாத்தான் இருக்கு அம்மணி...''
'நம்ம மாவூர்ல, சீக்காளி அத்தை ராசாத்தி இருக்காளே, அவ பையன், பக்கத்து ஊரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடிட்டானாம்ல... அதுக்காக ஊரே ராசாத்தியை ஒதுக்கி வைச்சிடுச்சு வாசம்பா... கேள்விப்பட்டியா?''
''தாய் முகம் காணாத பிள்ளையும், மழை முகம் காணாத பயிரும் உருப்படாதுன்னு சொல்லுவாங்க. கூடவே பெத்து வளர்த்த அம்மாவையும் கூட்டிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே!''
'எள்ளுன்னா எண்ணெயோட நிக்கிற புள்ளைங்களை இன்னிக்குத் தேடினாலும் கிடைக்காது... சரி வானம் கருத்திடுச்சு... வெள்ளென வீடு போய்ச் சேர்றேன்...'' என்றபடியே வாசம்பா கிளம்ப...
அடுத்து... லொள்ளு... சாரி எள்ளு புராணம்தான்!
- பாட்டிகள் பேசுவார்கள்...