அக்கம் பக்கம்

சென்னையில் தாய்ப்பால் வங்கி!
உலகில் எந்த உணவுப் பொருளாலும் ஈடு கொடுக்க முடியாத ஊட்டச் சத்து... தாய்ப்பால். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இந்த நேரத்தில் தாயைக்கூட அனுமதிக்கமாட்டார்கள். இதுபோன்று சில காரணங்களால் ஏராளமான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காமல் போய்விடுகிறது. இவர்களுக்கும் தாய்ப்பால் கிடைக்கும் வகையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் 200 லிட்டர் அளவுக்கு தானமாகப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. தானமாகப் பெறப்படும் தாய்ப்பாலில் பாக்டீரியா அல்லது நோய்க்கிருமிகள் எதுவும் தாக்கப்பட்டுள்ளதா எனப் பல சோதனைகள் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும். இப்படி பாதுகாக்கப்படும் தாய்ப்பாலை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்த முடியும் என்று மருத்துவமனையின் டாக்டர் கே.குமுதா தெரிவித்துள்ளார்.

புற்றுநோயாளிக்கும் புது வாழ்க்கை!
இந்தியாவில் முதன்முறையாக, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களுக்காகவே பிரத்யேக திருமணத் தகவல் இணையதளம் ஒன்றை கேரளாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் யூத் மூவ்மென்ட் தொடங்க உள்ளது. இளம் வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டவர்களைத் திருமணம் செய்துகொள்ள பலரும் தயங்குவர். என்னதான் புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தினாலும், புற்றுநோய் பற்றிய பயம் மட்டும் அப்படியே உள்ளது. திருமணம் என்று வரும்போது, புற்றுநோயாளிகளுக்கு மகனையோ, மகளையோ அளிக்க பலர் முன்வருவது இல்லை. இவர்களின் பிரச்னையைத் தீர்க்கவே இந்தப் புதிய இணைய தளம். 20 முதல் 35 வயதுக்குட்பட்ட, புற்றுநோயில் இருந்து மீண்ட நபர்கள் இதில் தங்கள் பெயர்களை இலவசமாகப் பதிவுசெய்துகொள்ளலாம். புற்றுநோயால் மீண்டவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்களும் இதில் பதிவு செய்யலாம். மார்ச் 9-ம் தேதி முதல் இது செயல்படத் துவங்கும்.

தேவை இல்லை கதிர்வீச்சு!
பெட்-சி.டி. ஸ்கேன் மூலம் புற்றுநோய் கண்டறியப்படுவது வழக்கம். இதன், கதிர்வீச்சு நம் உடலுக்குள் செலுத்தப்படும். இது மிக அதிகப்படியான கதிர்வீச்சாகும். குழந்தைகள், இளம் வயதினருக்கு இந்தக் கதிர்வீச்சை செலுத்தும்போது, எதிர்காலத்தில் அவர்களுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பெட் சி.டி. ஸ்கேனுக்கு மாற்றாக, ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எம்.ஆர்.ஐ. கருவி மூலம், காந்தப் புலத்தை வைத்து புற்றுநோய் செல்களைக் கண்டறியும் முறையை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம், கதிர்வீச்சு இன்றி புற்றுநோய்க் கட்டிகளைக் கண்டறியலாம், இதனால் எதிர்காலத்தில் மீண்டும் புற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும்என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
22 புற்றுநோயாளிகள் இந்த இரண்டு கருவியிலும் வைத்து பரிசோதிக்கப்பட்டனர். இதில், மொத்தம் உள்ள 174 புற்றுநோய் கட்டிகளில் பெட் சி.டி. ஸ்கேன் கருவியானது 163 கட்டிகளை கண்டறிந்தது. இதுவே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியானது 158 புற்றுநோய் கட்டிகளை கண்டறிந்தது. அதாவது பெட்டின் துல்லியம் 98.3 சதவிகிதம் என்றால், எம்.ஆர்.ஐ.-யின் துல்லியம் (97.2 சதவிகிதம்). இந்தக் கருவியை மேம்படுத்துவதன்மூலம் பெட் சி.டி. ஸ்கேன் கருவியை விட மிகத் துல்லியமாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் புற்றுநோய் திசுக்களை கண்டறிய முடியும். இது எதிர்காலப் புற்றுநோய் கண்டறிதல் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.