நெகிழ்ந்து உருகிய வாசக நெஞ்சங்கள்
15 நாட்களில் இரண்டு மருத்துவ முகாம்கள். டாக்டர் விகடனும் சைபாலும் இணைந்து திருப்பூரில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி சிறப்பு மருத்துவ முகாமை நடத்தினோம். இந்த முகாமில் திருப்பூர் ரேவதி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள், 450-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர். பிப்ரவரி 23-ம் தேதி புதுச்சேரியில் டாக்டர் விகடனும் புதுச்சேரி ஆல்பா மெடிக்கல் சென்டர் மற்றும் சக்தி சேனலும் இணைந்து எலும்பு மூட்டு, பல் மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தினோம். இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
திருப்பூர் முகாம்
தமிழ்நாட்டின் டாலர் சிட்டி திருப்பூரில் கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், அந்த இளங்காலை நேரத்திலேயே, வாசகர்களும் பொதுமக்களும் வந்து குவிந்துவிட்டனர். ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இருந்தும்கூட வாசகர்கள் வந்திருந்தனர். வந்த அனைவருக்கும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. தேவைப்படுபவர்களுக்கு ஈ.சி.ஜி., எக்கோ, விழித்திரைப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதயம், பொது மருத்துவம், சர்க்கரை நோய், எலும்பு மூட்டு, காது மூக்கு தொண்டை, மகளிர் மற்றும் மகப்பேறு, பல், கண் உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த மூத்த மருத்துவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கினர்.

இதய பாதிப்பு என்று வந்தவர்கள், 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஈ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் இதயத் துடிப்பில் பிரச்னை உள்ள 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு எக்கோ எடுக்கப்பட்டது. மூன்று பேருக்கு இதயப் பிரச்னை ஆரம்பநிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. மூன்று பேருக்கு இதயத்தின் செயல்பாடு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவருக்கு நிலைமை எப்போது வேண்டுமானாலும் மிக மோசமாகலாம் என்ற நிலை. உடனடியாக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப் பட்டார். இதேபோன்று 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பார்வைத் திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.
சுப்புலட்சுமி என்பவர் கூறுகையில், 'நான் இங்கு துணி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். தினமும் நின்னுக்கிட்டே வேலை பார்க்கணும். என் பொண்ணு 10-ம் கிளாஸ் படிக்கிறா. அடிக்கடி கால் வலினு சொல்வா. ஞாயிற்றுக்கிழமை கடைக்குப் போகும்போது ஆஸ்பத்திரிக்குப் போக முடியலையேனு என்கூட வந்தவங்ககிட்ட சொல்லி வருத்தப்பட்டேன். அவங்கதான் இப்படி விகடன் முகாம் நடக்குதுனு சொன்னாங்க. உடனே, என் பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்தேன். அவளைப் பரிசோதிச்ச டாக்டர் ரொம்ப வீக்கா இருக்கானு சொன்னாங்க. அவளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கணும்னு சொல்லிட்டு, மாத்திரை மருந்து எழுதிக்கொடுத்தாங்க. அப்போ, எனக்கும் கால் வலியா இருக்குன்னு காண்பிச்சேன். கால்ல நரம்பு சுத்திக்கிட்டு இருந்துச்சு. என்னை செக் செஞ்சுட்டு வெரிகோசிஸ் பிரச்னைனு சொல்லிட்டாங்க. ஸ்கேன் செய்றதுக்கும் சொல்லியிருக்காங்க. எங்களைப் போல ஏழைகளுக்கு இதுபோன்ற முகாம் ரொம்பவும் உபயோகமா இருக்குதுங்க' என்றார்.
புதுச்சேரி முகாம்
புதுச்சேரி பஸ் நிலையம் அருகில் உள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. காலை 9 மணிக்கே நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியின் முன்பு கூடிவிட்டனர். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பொது மருத்துவரின் ஆலோசனை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன் பிறகு தேவைப்படுபவர்களுக்கு எலும்பு அடர்த்தியைக் கண்டறியும் பி.எம்.டி. பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் பல் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு ஓரல் கேமரா மூலம் அவர்களது வாய் மற்றும் பல்லின் பாதிப்பு நேரடியாகத் திரையில் காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது.
முகாமில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எனக்கு 80 வயதாகிறது. தொழில் துறையில் உதவி இயக்குனராக இருந்தவன். எத்தனையோ முகாம்கள் நடக்குது. ஆனால், விகடன் முகாம்னா நம்பலாம்னு வந்தேன். நம்பிக்கைவெச்சமாதிரியே சிறப்பா இருந்தது. வெறும் கன்சல்டேஷன்னு இல்லாமல், பிரஷர், சுகர் டெஸ்ட்ல இருந்து ஓரல் கேமரா, எலும்பு அடர்த்தி பரிசோதனைனு பிரம்மாண்டமா இருந்தது. காலையிலேயே வந்தேன். கூட்டம் அதிகமா இருந்ததால், கொஞ்சம் நேரமாகிடுச்சு. ஆனா, டாக்டர்கள் ரொம்பப் பொறுமையா என் பிரச்னை என்னன்னு கேட்டு, அதுக்கு ஆலோசனை கொடுத்தாங்க. எலும்பு அடர்த்திப் பரிசோதனையில் 'மீடியம் ரிஸ்க்’னு வந்திருக்கு. ரிப்போர்ட்டைப் பார்த்துட்டு ரிஸ்க் குறைக்க என்ன செய்யணும்னு டாக்டர் விளக்கினார். மருந்து மாத்திரையும் எழுதிக் கொடுத்தாங்க' என்றார்.

பண்ருட்டியில் இருந்து வந்திருந்த சண்முகசிகாமணி, 'நான் விவசாயிங்க. தினமும் வயல்ல கால்கடுக்க நின்னுட்டு வேலை பார்க்கணும். அதனால் கால் மூட்டு வலி அதிகமா இருந்தது. டாக்டர் ரொம்ப நேரம் என்னுடைய பிரச்னை எல்லாத்தையும் கேட்டுட்டு அதுக்குத் தீர்வு சொன்னது ரொம்ப நிறைவா இருந்துச்சு. இது இலவச முகாம் போல இல்லை. காசு கட்டிப் பார்த்தா, எந்த அளவுக்குக் கவனமாப் பார்ப்பாங்களோ, அதுபோலவே இருந்தது. இதுபோன்ற நல்ல தரமான முகாம்களை நடத்தி எங்களோட நீண்ட நாள் கவலையைப் போக்கிட்ட டாக்டர் விகடனுக்கும், ஆல்பா மெடிக்கல் சென்டருக்கும் ரொம்ப நன்றி' என்றார் தழுதழுத்த குரலில்!
- டாக்டர் விகடன் டீம்
திருப்பூர் முகாம் நடந்த கிட்ஸ் கிளப் பள்ளியின் தாளாளர் மோகன் கார்த்திக் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் இதுபோன்ற முகாம்களை டாக்டர் விகடன் நடத்த வேண்டும். அப்படி நடத்த முன்வந்தால், 12 முகாம்கள் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர நாங்கள் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் ஏராளமான மக்கள் உண்மையில் பயன் அடைவார்கள்' என்று அழைப்பு விடுத்தார்.