ஸ்பெஷல்
Published:Updated:

மெடிக்ளைம்

கவரேஜில் கவனம்

ங்கியில் கேஷியராகப் பணியாற்றுபவர் சரவணன். சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துக்கே சேர்த்து மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தார். வருடம் தவறாமல் குறித்த நேரத்தில் பாலிசியைப் புதுப்பித்துவிடுவார். திடீரென்று அவரது மனைவிக்குத் தீராத வயிற்றுவலி ஏற்பட, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பரிசோதனை செய்து பார்த்ததில் குடல் வால் பிரச்னை இருப்பது தெரிந்தது. உடனடியாக மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை செய்தாக வேண்டிய நிலை. 'நாம்தான் மெடிக்ளைம் எடுத்திருக்கிறோமே. அதனால் கவலையில்லை’ என்று அலட்சியமாக இருந்துவிட்டார் சரவணன். ஆனால், அவரது டி.பி.ஏ. (Third Party Administrator) யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டு, அவருக்குக் காப்பீட்டுத் தொகையை வழங்க இன்ஷூரன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. மெடிக்ளைம் எடுத்தும் கைக் காசைப் போட்டு அறுவைசிகிச்சைக்குச் செலவு செய்தார் சரவணன். நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக சரவணன் எச்சரிக்கவே, ஒரு வருடத்துக்குப் பிறகு அவர் செலவு செய்த தொகையைத் தந்தது இன்ஷூரன்ஸ் நிறுவனம்.

மெடிக்ளைம்

'இன்றைய சூழலில், வேகமான வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம் எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறோம். எந்த நோய், எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. நோயின் பாதிப்பு ஒருபுறம் என்றால், அதற்கான மருத்துவச் செலவு என்பது இன்னொரு புறம். இதுபோன்ற ஆபத்தான சமயங்களில் நிதி நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காகத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியே எடுக்கிறோம். இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை, வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசியாக எடுத்துக் கொடுக்கின்றனர். இந்த பாலிசி எடுத்துவிட்டால் மட்டும் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடாது. அதன் பிறகு சில அடிப்படை விஷயங்களைச் சரிபார்த்து வைத்துக் கொள்வது நம்முடைய கடமை. இப்படிச் சில விஷயங்களை முன்பே தெரிந்து வைத்திருந்தால், சரவணன் இவ்வளவு சிரமத்துக்கு ஆளாகியிருக்க மாட்டார்' என்கிற கே.மாரியப்பன், 'மெட்சேவ்’ ஹெல்த் கேர் நிறுவனத்தின் சென்னை கிளை மேலாளர்.  அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய ஆலோசனைகளை வழங்கினார்.

மெடிக்ளைம்

''மெடிக்ளைம் பாலிசி எடுத்த பிறகு உங்களுக்கு ஒரு சான்றிதழ் அனுப்புவார்கள். அதில், உங்களுடைய டி.பி.ஏ. யார், அவர்களுடைய முகவரி, நிறுவனத்தின் இலவசத் தொலைபேசி எண் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு, அந்த நிறுவனத்தின் கிளைகள் எங்கெங்கு உள்ளன என்ற விவரத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம்.

ஒருவர் குடும்பம் முழுமைக்கும் மெடிக்ளைம் பாலிசி எடுக்கும்போது, பாலிசியில் குறிப்பிட்டுள்ள அத்தனை நபர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையை வைத்திருந்தால்தான் சிகிச்சையே பெற முடியும். உங்களுக்கு அடையாள அட்டை வரவில்லை என்றால், இதை உங்களின் டி.பி.ஏ.வில் கேட்டு வாங்கி வைத்துக் கொள்வது அவசியம்.

டி.பி.ஏ.வின் இலவசத் தொலைபேசியில் அல்லது உங்களுக்கு அருகில் உள்ள கிளைக்கு போன் செய்து உங்களுடைய கவரேஜ் தொகை எவ்வளவு என்பதையும், பாலிசியில் யார் யார் எல்லாம் கவர் செய்யப்படுகிறார்கள் என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம். சில நேரங்களில், ஐந்து லட்சம் ரூபாய் கவரேஜுக்கு மெடிக்ளைம் பாலிசி உள்ளது என நினைத்து நீங்கள் பிரீமியம் செலுத்தலாம். ஆனால் தவறுதலாக வெறும் மூன்று லட்சம் ரூபாய்க்கு மட்டுமே கவரேஜ் இருக்கக்கூடும்.

அதேபோல நீங்கள் எடுத்திருக்கும் பாலிசியில் எந்தெந்த நோய்க்கெல்லாம் கவரேஜ் உள்ளது என்பதையும் டி.பி.ஏ.விடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம். அல்லது மெடிக்ளைம் பாலிசியில் எந்தெந்த நோய்க்கு கவரேஜ் கிடைக்கும் என்பது இருக்கும். ஏனெனில் சில நோய்களுக்கு பாலிசி எடுத்த இரண்டு வருடம் கழித்துத்தான் கவரேஜ் இருக்கும். ஏற்கனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் கிடைப்பதிலும் சிக்கல் இருக்கும். இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான் நிதிச் சிக்கலில் இருந்து தப்பிக்க முடியும். அதாவது கவரேஜ் உள்ளது என நினைத்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு அந்த நோய்க்கு கவரேஜ் இல்லையென்றால், உங்கள் கையைவிட்டுப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இன்ஷூரன்ஸ் எடுத்த பிறகு டி.பி.ஏ. கொடுக்கும் அடையாள அட்டையில் உள்ள முகவரி, இலவசத் தொலைபேசி எண், உங்களுடைய பாலிசி எண் ஆகிய அனைத்தையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது அவசியம். அதேபோல் அதை எப்போதும் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.

- இரா.ரூபாவதி

மெடிக்ளைம்

க்ளைம் வசதிக்கு 'கேஷ்லெஸ்’

மெடிக்ளைமில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நாம் பணத்தைச் செலுத்தியபிறகு 'க்ளைம்’ பெறுவது. மற்றொன்று இன்ஷூரன்ஸ் நிறுவனமே பணத்தைச் செலுத்துவது. இதை 'கேஷ்லெஸ்’ என்போம். இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெரும்பாலும் 'கேஷ்லெஸ்’ மருத்துவமனை வசதியை வைத்திருக்கின்றன. இந்த வசதி உள்ள நிறுவனத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் புத்திசாலித்தனம். 'கேஷ்லெஸ்’ மருத்துவமனையை இன்ஷூரன்ஸ் நிறுவனம், டி.பி.ஏ. என இரண்டும் சேர்ந்துதான் முடிவு செய்யும். இந்த வசதி எந்தெந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதோ, அந்த மருத்துவமனைகளின் விவரத்தை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் வெளியூர்களுக்குச் செல்லும் போது எதிர்பாராதவிதமான விபத்து அல்லது உடல் நலக் குறைவு ஏற்பட்டாலும் சிகிச்சை எடுக்க இது வசதியாக இருக்கும். 'கேஷ்லெஸ்’ வசதி என்பது குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டும்தான் கிடைக்கும்.

மெடிக்ளைம்

பொது அறையே பெஸ்ட் 'பாலிசி’

ன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலமாக ஏதாவது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, முடிந்த வரை பொது அறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில், அறை வாடகைக்கு அதிகபட்ச கவரேஜ் தொகையில் ஒரு சதவிகிதம்தான் இருக்கும். தனி அறையைத் தேர்ந்தெடுக்கும்போது, அறையின் வாடகை அதிகமாக இருக்கும். அதேபோல், மருத்துவரின் கட்டணமும் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு மேல் செல்லும்போது, க்ளைம் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் குறைத்துவிடும். அதாவது நீங்கள் அறை வாடகைக்கு என 2,000 ரூபாய் க்ளைம் செய்கிறீர்கள் எனில், உங்களுக்கு ஆயிரம் ரூபாய்தான் லிமிட் என்றால் மீதமுள்ள தொகை இன்ஷூரன்ஸ் நிறுவனம் க்ளைம் தராது. மீதமுள்ள தொகையிலும் இப்படிக் கழிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே 'இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் போதும்’ என்று அப்படியே விட்டுவிடாமல், இந்த விஷயங்களையும் சரிபார்த்துக் கொள்வது நல்லது.