ஸ்பெஷல்
Published:Updated:

மனமே நலமா? - 20

மனதுக்குள் புதைத்த ‘பேசா’மடந்தை!

ல்லோரிடமும் சகஜமாகப் பழகும் பாரதிக்குத் திடீரென்று ஒருநாள் பேச்சு வராமல் போனது. எவ்வளவோ முயற்சித்தும் பேச முடியாமல் திணறும் மகளைப் பார்த்து மனம் நொந்த பெற்றோர், உடனே காது-மூக்கு-தொண்டை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.  அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து பார்த்து எல்லாமே நார்மலாக இருக்க, 'இது ஏதோ நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை’ என்று நரம்பியல் நிபுணரிடம் அனுப்பினார். அவரும் எல்லாப் பரிசோதனைகளையும் செய்துவிட்டு, 'பாரதிக்கு ஏதேனும் மன நலப் பிரச்னை இருக்கலாம். நீங்கள் ஒரு மன நல மருத்துவரைப் போய் பாருங்கள்’ என்று என்னிடம் அனுப்பிவைத்தார்.

மனமே நலமா? - 20

பாரதியை அழைத்து வந்த அந்தப் பெற்றோர் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டனர்.  அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு முதலில் பாரதியிடம் பேசினேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு பாரதி பதில் சொல்ல முயற்சித்தும், வார்த்தை மட்டும் வெளியே வரமறுத்தது. பாரதியின் பெற்றோர் அனுமதியுடன் 'ஹிப்னோ தெரப்பி’ மூலம் பேசினேன். அதாவது அவளை ஆழ்நிலை மயக்கத்துக்குக் கொண்டு சென்று பேசுவது. அப்போது பாரதியால் நன்கு பேசமுடிந்தது. அவளது பிரச்னை¬யக் கேட்டேன்.

21 வயதான பாரதி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அம்மா குடும்பத் தலைவி. அப்பா கணேசன் மிகவும் கண்டிப்பானவர். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். ஒரே ஒரு அண்ணன். வீடு தாம்பரத்தில் இருந்ததால், நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் அலுவலகத்துக்கு, தினமும் மின்சார ரெயிலில் சென்று வந்தாள் பாரதி. சில மாதங்களுக்கு முன்பு பாரதியின் அண்ணன், 'தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளையே திருமணம் செய்ய விரும்புவதாகவும்’ கூற, அப்பா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், வீட்டை விட்டே வெளியேறிவிட்டான். அண்ணனை, 'வெட்டுவேன், குத்துவேன்’ என்று திட்டிக்கொண்டேயிருப்பார் அப்பா.

மனமே நலமா? - 20

பாரதி வேலை பார்க்கும் அலுவலக மேலாளர், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் பலவீனமானவர். பாரதி நடந்து செல்லும்போது இடிப்பது, ஆபாசமாகப் பேசுவது என்று  மேலாளரின் தொல்லை மிகவும் அதிகமாக இருந்தது. வெளியே சொன்னால் வேலையை போய்விடுமோ? அப்பாவுக்குத் தெரிந்தால் உடனே வேலைவிடச் சொல்லி, வீட்டில் அடைத்துவைத்துவிடுவாரோ என்ற பயத்தினால் வெளியில் சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்திருந்தாள் பாரதி.

இந்த நிலையில், பாரதியுடன் தினமும் ரயிலில் பயணிக்கும் தோழி வசந்தி, குமார் என்ற வாலிபனைக் காதலித்து வந்தார்.  வசந்தி காதலனுடன் வரும்போது மட்டும் பெண்கள் பெட்டியை விட்டு, பொதுப் பெட்டியில் போவாள். கூடவே பாரதியும் இணைந்துகொள்வாள். வசந்தியின் காதலன் குமாருடன் எப்போதாவது வரும் நண்பன் ரவிக்கு பாரதியை ரொம்பவே பிடித்துபோனது. அறிமுகப்படலம் தொடங்கி சில நாட்களிலேயே, தன் காதலை பாரதியிடம் வெளிப்படுத்தினான் ரவி. உடனே,  அவசரமாக மறுத்த பாரதி, 'இப்பத்தான் என் அண்ணன் காதல், கல்யாணம்னு வீட்டைவிட்டுப் போனான்... நானும் காதலிக்கிறேன்னு தெரிஞ்சா, வேற வினையே வேண்டாம்.. என் அப்பா கொன்னே போட்டுடுவார்.. இப்ப இருக்கிற சூழ்நிலையில், நான் லவ் பண்ணும் மனநிலையில் இல்லை'' என்று காதலைப் புறக்கணித்துவிட்டாள் பாரதி.

மனமே நலமா? - 20

ஆனால் ரவி விடுவதாக இல்லை. தினமும் பாரதியைப் பார்த்து, ''நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். உன்னோடு வாழ விரும்புறேன். அப்சரஸ் மாதிரி ரொம்ப அழகா இருக்கே..!'' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பான். திடீரென்று ஒருநாள் ரவி, தாடி வளர்த்து சோகமே உருவாக நிற்க, காரணம் கேட்டபோது ''காதல் தோல்வி. தாடி வளர்க்கிறேன். நீ என்னைக் காதலிக்கணும்னு அவசியமில்லை. ஆனா, நான் உன்னைக் காதலிப்பதை, நீ தடுக்க முடியாது' என்றெல்லாம் வசனம் பேசியிருக்கிறான்.

'ஆபீஸில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அடையத் துடிக்கும் அதிகாரி ஒருபுறம் என்றால், வேண்டாம் என்று துரத்தி அடித்தாலும், தன் மீதான காதலுக்காக கௌரவத்தை விட்டு, பின்தொடரும் ரவி இன்னொரு புறம்’.  பாரதியின் மனதில் ரவி மீது ஒரு சாஃப்ட் கார்னர் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீது ஈர்ப்பு ஏற்பட இருவருக்கும் இடையேயான அன்பு இறுகியது. பாரதிக்கு செல்போன் ஒன்றை வாங்கிக்கொடுத்த ரவி, மிகவும் டீசன்ட்டாக நடந்துகொண்டான். தெரியாமல் அவள் மேல் கை பட்டால்கூட, ''ஸாரி.. ஸாரி..'' என்று பதறிப் போய், மன்னிப்புக் கேட்டான். நல்லவன் என்ற இமேஜை பாரதியின் மனதில் பதித்தான்.  இதுவே பாரதிக்கு, ரவியின் மீது மதிப்பும், மரியாதையும், காதலும் கூடியது.

திடீரென்று ஒரு நாள் பாரதியை வெளியே அழைத்துச் சென்ற ரவி, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவள் மயங்கிய நிலையில் நடக்கக்கூடாததை நடத்திவிட்டான். அதன்பிறகு ரவியைக் காணவில்லை. ரவி, வெளியூரில் இருந்து வந்து சென்னையில் தங்கி வேலை பார்ப்பது மட்டும்தான் பாரதிக்குத் தெரியும். அவன் அட்ரஸ்கூடத் தெரியாத நிலையில், நடந்ததை வெளியே சொல்லமுடியாமல், மன அழுத்தத்தின் உச்சத்துக்கு ஆளானாள் பாரதி. மாதவிலக்கு தள்ளிப் போக, எதிர்கால வாழ்வின் மீதான பயம் அவளை ஆட்டிப்படைத்தது. 'கருவைக் கலைக்க, தனியார் மருத்துவமனையில் அதிகம் பணம் கேட்பார்கள். அரசு மருத்துவமனை என்றால், ஏன், எதற்கு என்பார்கள். வீட்டுக்குத் தெரிஞ்சா?’ - இப்படி மனக்குழப்பத்தில் மிரண்டு, என்ன செய்வது என்று புரியாத நிலையில், 'சொல்ல முடியாத விஷயம், சொல்ல முடியாமலே போகட்டும்’ என்று நினைத்தவள் ரகசியங்களை மனதுக்குள் புதைத்தாள். இதனால், பேசும் திறன் குறைந்து வார்த்தைகளும் வெளிவரமுடியாத நிலை ஏற்பட்டது.  

மனமே நலமா? - 20

பாரதிக்கு ஏற்பட்டது 'ஹிஸ்டரிக்கல் டிஸ்போனியா’ (hysterical dysphonia) என்று சொல்லுவோம். நரம்பு மண்டலம், காது - மூக்கு - தொண்டை, மற்றும் மனநலப் பிரச்னைகளால் இது ஏற்படும். மன அழுத்தம், அதிர்ச்சி, கோர விபத்து போன்றவற்றால்கூட இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

இந்த மனநலப் பிரச்னைக்குத் தீர்வு நம்மிடம் இல்லை. பிரச்னையை வெளிப்படையாகச் சொன்னால், ஒன்று கொலை விழும், இல்லை தற்கொலை நடக்கும். மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்பதால் பாரதியின் அப்பாவை அழைத்துப் பேசினேன். 'உங்கள் மகள் உயிரோடு வேண்டுமா, வேண்டாமா?’ என்று பேசி அவரைத் திடப்படுத்தினேன். அவரிடம் சில உறுதிமொழிகளை வாங்கிக்கொண்டு விஷயத்தைச் சொன்னதும், 'ஆச்சா பூச்சா’ என்று கத்தியவுடன், 'பாரதியைத் திட்டுவதோ, அடிப்பதோ அவளைத் தற்கொலைக்குத்தான் தூண்டும்’ என்று புரியவைத்தேன். ஒரு வழியாகச் சமாதானம் ஆனார்.  

பிறகு, பாரதிக்கு சிகிச்சையைத் தொடங்கினேன். முதலில் அவளுக்குத் தன்னம்பிக்கை வரவழைத்து, அனைவரது ஆதரவும் அவளுக்கு இருக்கிறது என்பதைப் புரிய வைக்க வேண்டும். பாரதியின் பெற்றோர் ஆதரவாக இருந்ததால் அது சாத்தியமானது. பாரதியின் மனதில் உள்ள பயத்தைப் போக்கும் சிகிச்சை மற்றும் இரண்டு முறை சைக்கோ தெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. பயம், பதற்றத்தைப் போக்க சில மாத்திரைகள் பரிந்துரைத்தேன்.  தொடர் சிகிச்சைக்குப் பிறகு பாரதி தற்போது பூரண நலம் பெற்றுவிட்டாள்.  வேறு ஒருவரை மணந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள்.

மாத்திரை, மருந்து கவுன்சிலிங்குடன் பாதுகாப்பான உணர்வை பெற்றோர் கொடுத்ததால் மட்டுமே இது சாத்தியமானது.