தொடர் நடையால் தேயுமா மூட்டு?


சுமதி, அம்பாசமுத்திரம்
'எனக்கு 45 வயது. உடல் எடை 76 கிலோ இருக்கிறேன். நீண்ட நேரம் நடந்தால் மூட்டு வலிக்கிறது. மூட்டு வலிப் பிரச்னை வருவதற்கு உடல் பருமன் ஒரு காரணமாக இருக்குமா?'
டாக்டர் செந்தில்வேலன், எலும்பு மூட்டு மருத்துவர், சென்னை
'மூட்டு வலிக்கு மிக முக்கியக் காரணமே உடல் பருமன்தான். உடலின் எடையை நம் கால் மூட்டுகள் தாங்குகின்றன. உடல் எடையைத் தாங்கும் விதத்தில், மூட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக உடல் பருமனால் மூட்டுக்களில் அழுத்தம் ஏற்பட்டு, குறுத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால், நீண்ட தூரம் நடக்கும்போது, கால் வலி ஏற்படுகிறது.


உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் உடல் எடை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைக்க நடைப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றலாம். நடக்கவே முடியாத அளவுக்கு வலி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மூட்டுகளை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் தேய்மானம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவரும். ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்தலாம். மூட்டுத் தேய்மானம் முற்றிய நிலையில் இருந்தால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.'
பெயர் வெளியிட விரும்பாத வாசகி, திருச்சி
'எனக்கு 45 வயதாகிறது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே சில பிரச்னை காரணமாக நானும் என் கணவரும் பிரிந்துவிட்டோம். எங்களுக்குள் தாம்பத்திய உறவும் இருந்தது இல்லை. என் அம்மாவுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருந்தது. எனக்கும் வர வாய்ப்பு உள்ளதா? தாம்பத்திய உறவு மூலம் இந்தக் கிருமி பரவும் என்று படித்திருக்கிறேன். தாம்பத்திய உறவு கொள்ளாத நான் இதற்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா?'
டாக்டர் கௌரி துரைராஜன், மகப்பேறு மற்றும் மகளிர் நலத்துறைப் பேராசிரியர், ஜிப்மர், புதுச்சேரி

'கர்ப்பப்பை புற்றுநோய் மரபு ரீதியாகத் தொடரக் கூடியதுதான். உங்கள் அம்மாவுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். குழந்தையின்மை, கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகப்படுத்துகிறது. உங்களுக்குச் சீரற்ற ரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக மகளிர் நல மருத்துவரை அணுகி 'டயலேஷன் அண்டு க்யூரட்டேஜ்’ (Dilation and curettage) மற்றும் 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 'ஹூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்ற கிருமிமூலம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படுகிறது. நீங்கள் குறிப்பிடுவது போல், தாம்பத்திய உறவு மூலம் இந்தக் கிருமி பரவுகிறது. நீங்கள் தாம்பத்திய உறவு கொண்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, உங்களுக்கு வைரஸ் கிருமி பரவ வாய்ப்பில்லை என்றாலும், அம்மாவுக்கு இருந்ததால், உங்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. எனவே, அதற்குரிய பரிசோதனையை உடனடியாகச் செய்து கொள்வது நல்லது.'
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:
கன்சல்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002. doctor@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்!