ஸ்பெஷல்
Published:Updated:

புத்தக விமர்சனம்!

புத்தக விமர்சனம்!

புத்தக விமர்சனம்!

'என்னை என்ன கிள்ளுக்கீரைன்னு நினைச்சியா?' என்று நம்மில் பலர் பேசுவது வழக்கம். கீரை என்றாலே... ஏழைகளின் உணவாக இருந்த காலம் மலையேறிவிட்டது. இன்றோ, கீரையின் சத்துக்களை அறிந்து, என்ன விலை கொடுத்தும் வாங்கப் பலரும் தயாராக இருக்கின்றனர். அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை போன்ற சில வகைக் கீரைகளை மட்டுமே நாம் அதிகம் பயன்படுத்திவரும் நிலையில், ஆரோக்கிய வாழ்விற்குப் பயன்தரும் 27 கீரை வகைகளின் குண இயல்புகளை ஆராய்ந்து அதன் சத்துக்களையும், பலன்களையும் படையலிட்டிருக்கிறார் 'கீரை வகைகள்’ என்ற இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்.

 புளிச்சக்கீரை, பொன்னாங்கன்னி, வல்லாரை, மணத்தக்காளி, கொடிப்பசலை என அரிய வகை மூலிகைக் கீரைகளின் பலன்களைச் சொல்லி, என்னென்ன கீரை எந்த நோயை விரட்டும்; அதை எப்படிச் செய்து சாப்பிடவேண்டும் என்பதையும் செயல்முறை விளக்கத்துடன் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஆரோக்கியத்தின் மீதான அக்கறை உள்ளவர்களுக்கும், உணவுப் பிரியர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்.  

நூலின் பெயர்: கீரை வகைகள்

ஆசிரியர் - டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம், தி.நகர், சென்னை - 17

தொலைபேசி - 044-24314347,

புத்தக விமர்சனம்!

60/-

புத்தக விமர்சனம்!

ன்றைய இளைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்தி எடுக்கும் முக்கிய விஷயங்கள் கண் பாதிப்பு, தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், வயிறு மந்தம், வாயுத் தொல்லை. இவை தவிர, கண் தானம், கணினியிலிருந்து கண்களைக் காக்க வழிகள், பார்வைக் குறைபாடு என கண் நலன் குறித்த பாதுகாப்பு விஷயங்கள், தூக்கமின்மைக்கான காரணங்கள் மற்றும் செரிக்காத உணவுகள் போன்ற உடலுக்கு ஏற்படும் பிரச்னைகளை அலசி, அவற்றை எப்படிச் சரி செய்வது என்பதையும் 'தலை முதல் கால் வரை’ என்ற புத்தகம் தெளிவாகத் தந்திருக்கிறது.

''ஆள் உயர டி.வி.யை அருகில் அமர்ந்து பார்ப்பது கண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். நம் வீட்டில் டி.வி. ஸ்க்ரீன் அளவைக் கணக்கிட்டு, அதிலிருந்து 7 மடங்கு தூரம் தள்ளி அமரவேண்டும். அதாவது 14 அங்குல டி.வி. ஸ்க்ரீன் எனில் 98 அங்குலம் (சுமார் 8 அடி) தூரம் அமர்ந்துதான் டிவியைப் பார்க்கவேண்டும்'' என்கிற நூல் ஆசிரியர் டாக்டர் எஸ்.அமுதகுமார், உணவு தொடர்பான விஷயங்களை அக்கறையோடு அலசியிருக்கிறார். ''வேக வைக்காத உணவுகளில் பாக்டீரியாக்கள் உயிரோடு இருக்க அதிக வாய்ப்பு. எனவே, வேக வைத்ததுதான் பாதுகாப்பான உணவு'' என்கிறார் இவர். நோய்களிலிருந்து உடலைக் காத்துக் கொள்ளும் வழிகள் எளிய நடையில் எழுதப்பட்டு உள்ளன.

நூலின் பெயர்: தலை முதல் கால் வரை

ஆசிரியர் - டாக்டர் எஸ்.அமுதகுமார்

பதிப்பகம்: ஏகம் பதிப்பகம், சென்னை - 5

தொலைபேசி - 044- 28529194,

புத்தக விமர்சனம்!

80/-