
கண் புரை என்றால் என்ன, ஏன் ஏற்படுகிறது, இதைத் தவிர்க்க முடியுமா...?
50 வயதாகிவிட்டாலே, பலருக்கும் பார்வைக் குறைபாடு ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது. முதலில் தூரப்பார்வைத் திறன் குறையும். வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் ஏற்படும். கண் உறுத்தல் ஏற்படும். கண் விழி லென்ஸ் நிறம் மாறும். பொதுவாக இதை, 'கண்ணில் பூ விழுந்திடுச்சு’ என்பார்கள். கண் மருத்துவர்கள், 'கண் புரை’ என்று சொல்வார்கள். கண் புரை ஏற்பட்டால், உடனடியாக அறுவைசிகிச்சையால் சரிசெய்துவிடலாம் என்ற விழிப்பு உணர்வு பலருக்கும் இருக்கிறது. ஆனால், கண் புரை என்றால் என்ன, ஏன் ஏற்படுகிறது, இதைத் தவிர்க்க முடியுமா... என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை.

' 'கேடராக்ட்’ என்ற வார்த்தைக்கு, அருவி அல்லது நீர்வீழ்ச்சி என்று அர்த்தம். ஓர் அருவிக்குப் பின்புறம் நின்றால், நம்மால் எதையும் பார்க்க முடியாது. அருவி நீர் அனைத்தையும் மறைத்துவிடும். அதுபோலத்தான், கண் புரை ஏற்படும்போதும் நம் முன் உள்ளவை மறைக்கப்படுகின்றன' என்கிறார் கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனரும், தலைமை அறங்காவலருமான டாக்டர் ஆர்.வி.ரமணி.
கண் புரை ஏற்படக் காரணம்
'நம் கண்ணில் உள்ள லென்ஸ் வழியாகத்தான் ஒளி உள்ளே ஊடுருவி விழித்திரையில் வந்து விழுகிறது. இந்த ஒளி, விழித்திரையில் சரியாக விழுந்தால்தான், நம்மால் பார்க்க முடியும். அதற்கு இந்த லென்ஸானது, 'ஒளிவு மறைவற்றதாக’ இருக்க வேண்டும். ஆனால், வயதாகும்போது தலைமுடி நரைப்பது போல, கண்ணிலும் புரதம் படிந்து, லென்ஸின் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பும் திறன் குறைகிறது. நாளடைவில் தெளிவாகத் தெரிந்த பொருள், வெள்ளையடித்துப் போய்விடுகிறது. இதைத்தான் 'கண் புரை’ என்கிறோம். கண் புரை ஏற்பட்டவுடன் பார்வைத் திறன் முற்றிலும் மங்கிவிடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை மங்கத் தொடங்கி, சில வருடங்களில் முற்றிலும் பார்வைத் திறன் குறைந்துவிடுகிறது. பிறவியிலேயே கண் புரையுடன் பிறக்கும் குழந்தைகளும் உள்ளனர்.
பாதிப்புகள்
முதலில் லென்ஸின் ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, இரவு நேரத்தில் பார்ப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுவதுடன், நடுவே கருப்பு வளையங்கள் தெரியலாம். கண்ணாடி 'பவர்’ அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். கருப்பு நிறத்திலேயே இருக்கும் விழி லென்ஸ், கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறத் தொடங்கும்போதுதான் அது, 'கண் புரை’ என்று நமக்குத் தெரியும்.

தடுக்கும் வழி
வயோதிகத்தில் ஏற்படும் கண் புரையைத் தடுக்க முடியாது. அதேபோல் கண் புரை ஏற்படுவதைத் தாமதப்படுத்தவும் முடியாது. சர்க்கரை நோயாளிகளுக்கு, கண் புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது, ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம், கண் புரை ஏற்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம்.
கருவிலேயே கண் புரை ஏற்படுவதைத் தவிர்க்க, பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்வீச்சு, கண் புரையை ஏற்படுத்தலாம். எனவே, வெளியில் செல்லும்போது புறஊதாக் கதிர்களைத் தடுக்கும் யு.வி.பி. திறன் கொண்ட கண்ணாடியை அணிந்துகொள்ள வேண்டும்.
சிகிச்சை முறை
கண் புரையை எளிய அறுவைசிகிச்சை மூலம் சரிப்படுத்தலாம். கண்ணில் ஒருசில மி.மீ. அளவுக்கு மட்டுமே துளையிடப்பட்டு, லென்ஸைப் பொருத்துகிறோம். இந்தத் துளைக்குள் செல்லும் அளவுக்கு, லென்ஸை மடிக்க முடியும். இதனால், ஒருசில நிமிடங்களில் அறுவைசிகிச்சை முடிந்துவிடுகிறது. கண்ணில் தையல் போடவேண்டிய அவசியம் இல்லை. அன்றே வேலையில் ஈடுபட முடியும்'' என்றார் டாக்டர் ஆர்.வி.ரமணி.
பா.பிரவீன் குமார்
படம்: மு.சரவணக்குமார்
பார்வையைப் பலப்படுத்தும் வண்ண உணவுகள்
உணவில் வண்ணமயமான பச்சைக் காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்வது கண் நலத்துக்கு நல்லது. இதில் போதுமான அளவு வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சோடியம் சேர்த்துக்கொள்வது, கண் புரைக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.