ஸ்பெஷல்
Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

டல் ஆரோக்கியம் கெடுவதில் வயிறுதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. சாஃப்ட் டிரிங்ஸ், கொழுப்பு நிறைந்த உணவு, சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, மது அருந்துதல் போன்றவற்றால் முதலில் பாதிக்கப்படுவது நம் செரிமான மண்டலம்தான்.  செரிமான மண்டலத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் பற்றியும், அவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான செரிமான செயல்பாட்டுக்கு வழிகாட்டுகிறார் சென்னையைச் சேர்ந்த வயிறு மற்றும் செரிமானச் மண்டல மருத்துவர் பி.பாசுமணி.

நலம், நலம் அறிய ஆவல்!

'டாக்டர் நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா செரிக்க மாட்டேங்குது, எதுக்களிக்குது'' என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். நாம் சாப்பிட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையைச் சென்று அடைய வேண்டும். இது ஒரு வழிப் பாதை. ஆனால், தற்போதைய உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் இரைப்பையில் இருக்க வேண்டிய உணவும், அமிலங்களும் உணவுக் குழாய்க்கு வருகின்றன. இதையே 'அசிடிட்டி’ என்கிறோம். இந்தப் பிரச்னையால் சிலருக்கு உணவுக் குழாயில் எரிச்சல், புண் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் நுரையீரலில் இருந்து பல்லின் எனாமல் வரை பாதிக்கப்படுகிறது.

எப்போதாவது விருந்து சாப்பிடும்போதோ, அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளும்போதோ இதுபோன்ற பிரச்னை வந்தால் அதில் பாதிப்பு இருக்காது. ஆனால், வாரக்கணக்கில் இந்தப் பிரச்னை நீடித்தால், வருடத்தில் பல முறை இந்தப் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். சுய மருத்துவத்தைத் தவிர்த்து, மருத்துவரை அணுகி, இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் பாசுமணி.

சுயமாக மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிற டாக்டர், அதற்கான காரணத்தை விளக்கினார்.

'நம் உடல் 10 ஆயிரம் கோடி செல்களால் கட்டப்பட்டது என்றால், குடலில் மட்டும் 100 ஆயிரம் கோடி பாக்டீரியா உள்ளன. குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது. ஏன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நாம் உயிர்வாழ அந்த பாக்டீரியாவும் நம்மோடு சேர்ந்து வாழ்கிறது. நோய்த் தொற்று, ஃபுட் பாய்சன் போன்றவற்றின்போது இந்த பாக்டீரியா பாதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுக்கும்போது இந்த நன்மை செய்யும் பாக்டீரியாவும் சேர்ந்து பாதிக்கப்படும்.

மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டும் இதுபோன்ற மருந்துகளை எடுக்கும்போது இந்த பாக்டீரியாவுக்குப் பாதிப்பு நேராமலும், அப்படியே ஏற்பட்டாலும் அது சிறிய அளவில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளப்படும். இதனால், உணவுச் செரிமானத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். நீங்களாக மருந்து எடுத்தால், பாக்டீரியா அழிக்கப்படும். மீண்டும் அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்' என்று எச்சரிக்கிறார் டாக்டர் பாசுமணி.

- பா.பிரவீன் குமார்,

படம்: ப.சரவணகுமார்

நலம், நலம் அறிய ஆவல்!