ஸ்பெஷல்
Published:Updated:

‘மண்டை காயவைக்கும்’ மைக்ரேன்!

‘மண்டை காயவைக்கும்’ மைக்ரேன்!

''யப்பா... தலை 'விண் விண்’னு தெறிக்குதே..! சூடா, ஒரு கப் காபி சாப்பிட்டால் நல்லாயிருக்கும்'' - வீடுகளிலும், அலுவலகங்களிலும் அவ்வப்போது கேட்கக்கூடிய வார்த்தைகள் இது. வலியின் உணர்வை உணர்ந்ததுமே காபியையோ, டீயையோ, தலை வலித் தைலத்தையோ தேட வைக்கும் கடுமையான பிரச்னைதான் தலை வலி. இதன் தீவிரத்தை உணராதவர்களுக்காகச் சொல்லப்படும் வசனம்தான், ''தலைவலியும் வயித்துவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்!''.

தலைவலியின் வகைகளையும், குறிப்பாக 'மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியின் குணாதிசயங்களையும் பற்றி விரிவாகப் பேசுகிறார், அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை நரம்பியல் துறையின் முன்னாள் தலைவரும், மூத்த நரம்பியல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் வி.நடராஜன்.

‘மண்டை காயவைக்கும்’ மைக்ரேன்!

''தலைவலியில் முதல்நிலைத் தலைவலி (Primary head ache), இரண்டாம் நிலைத் தலைவலி (Secondary headache) என்று இரண்டு வகை உண்டு. இயற்கையாக வரக்கூடியதை முதல்நிலைத் தலைவலி என்கிறோம். 90 சதவிகிதம் வருவது இந்த வகை வலிதான். இதனால் பயப்படத் தேவையில்லை. இரண்டாம் நிலைத் தலைவலிக்கு தலைக்குள் இருக்கும் கட்டி, ஏதேனும் நோய்த்தொற்று, மூளைக்காய்ச்சல் போன்ற தீவிரமான பாதிப்பு, பக்கவாதம் மற்றும் ரத்த ஓட்டம் பாதிப்பு போன்ற காரணங்களாலும் ஏற்படக் கூடும். இரண்டு வகைத் தலைவலிகளுக்குமே முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒற்றைத் தலைவலி என்பது முதல்நிலைத் தலைவலி வகையில் வருவது. 'மைக்ரேன்’ என்று அழைக்கப்படும் இந்த வலிக்கு, பித்தத் தலைவலி, 3 நாள் தலைவலி என்றும் பெயர்கள் உண்டு. இது பரம்பரைக் குறைபாட்டால் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களை இந்த வலி அதிகம் தாக்கும். தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஐந்தில் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது.

'மைக்ரேன்’ தாக்கும்போது, சில சமயங்களில் ஒரு பக்கம் மட்டும் வலிக்கும். சில நேரங்களில் இரு பக்கமும் மாறி மாறி வலிக்கும். இரு பக்கமும் சேர்ந்தே கூட வலிக்கும். ஆனால், 80 சதவிகிததினருக்கு ஒரு பக்கம் மட்டும்தான் வலி ஏற்படும். இந்த வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலும், நான்கு, ஐந்து மணி நேரம் முதல், அதிகபட்சம் இரண்டு மூன்று நாட்கள்வரை கூட வலி தொடரலாம். சிலருக்கு, காலையில் தூக்கத்தில் இருந்து எழும்போது கூட வலி வரலாம். அல்லது, மதியத் தூக்கத்தின்போது, பாதியில் விழித்து எழுந்தால் வரும். மைக்ரேன் வலி கடுமையாகவும் இருக்கும், மிதமாகவும் இருக்கும். அதனால்தான் இதன் குணாதிசயத்தை 'இப்படித்தான் இருக்கும்’ என்று வரையறுக்க முடிவதில்லை.  

அறிகுறிகள்:

ஒற்றைத் தலைவலி வருவதற்கு முன், லேசாக தூக்கம் வருவது போல கண்கள் சொக்கும். கொட்டாவி வரும். உடல்நிலையில் ஒரு மாதிரியான வித்தியாசத்தை உணரமுடியும். இந்தத் தலைவலி இருக்கும்போது, தலை அல்லது கழுத்தைக் குனிந்தாலோ, ஆட்டினாலோ வலி அதிகரிக்கும். வயிற்றுப் பிரட்டல், வாந்தி வருவது போன்ற உணர்வு, சத்தத்தைக் கேட்டால் எரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகள். மைக்ரேன் வந்தவர்களுக்கு, சமயத்தில் இருந்து கழுத்தில் இருந்து வலி ஆரம்பிக்கும். கழுத்தும் வலிக்கும்.

வலி இருக்கும்போது, யாரிடமும் பேசப் பிடிக்காது. வெளிச்சம் இருந்தால் கஷ்டமாக இருக்கும். மேலும், ஒரு சிலருக்கு கண்களில் உறுத்தல், கண்பார்வை மங்குதல் ஆகியவை இருக்கலாம். பல நேரங்களில், ஒற்றைத் தலைவலி, சைனஸால் வரும் தலைவலி என்று தவறாக நினைக்கப்படுகிறது. ஆனால், சைனஸ் தலைவலி, சளி இருக்கும்போது பகல் நேரத்தில்தான் வரும். அந்தக் குறிப்பிட்ட 3, 4 நாட்களில் மட்டும் இருந்துவிட்டு, பிறகு படிப்படியாகக் குறைந்துவிடும். ஆனால், மைக்ரேன் தலைவலி, எப்போது வேண்டுமானாலும் வரும். வந்தால் தொடர்ந்து இருக்கும். பொதுவாக மாலையில்தான் வரும்.

‘மண்டை காயவைக்கும்’ மைக்ரேன்!

வலி ஏற்படுத்தும் சூழ்நிலைகள்:

அதிக வெயிலில் அலைவது, டென்ஷன், சரியான தூக்கமின்மை, மன உளைச்சல் (ஸ்ட்ரெஸ்), ஒழுங்காக சாப்பிடாமல், பசியுடன் இருத்தல், ஈரத் தலையுடன் இருத்தல்,  அதீத பிரயாண அலைச்சல், மிகவும் சத்தமான சூழல், பெண்களுக்கு மாதவிடாய்க் காலம். இவற்றைத் தவிர, சில பர்ஃபியூம் வாசனைகள், மல்லிகைப்பூ மற்றும் பெட்ரோல், டீசல் புகை இத் தலைவலியைத் தூண்டிவிடும் தொடர்புகளாக (Trigger links) உள்ளன.

பராமரிப்பு:

ஒற்றைத் தலைவலியை முற்றிலும் வராமல் நிறுத்த முடியாது. ஆனால், அதன் கடுமையையும் அடிகக்டி வருவதையும் மருந்து எடுப்பதால் தடுக்கலாம். பெரும்பாலும், குடும்பத்தில் யாருக்காவது இருந்திருக்கும் என்பதால், குடும்ப வரலாறு கண்டிப்பாகக் கேட்டு அறியப்படும். வலி வராமல் தடுக்கும் வழிகளில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. வலி லேசாக இருந்தால் வலி நிவாரணி தைலங்களைத் தடவலாம். தினப்படி வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கோ, அலுவலகம் செல்ல முடியாத அளவுக்கோ அதிகமாக இருந்தால், மருத்துவர் ஆலோசனையுடன் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். வலிக்கான தடுப்பு மருந்து எடுக்கும்போது, வலி கணிசமாகக் குறையும் வரை எடுத்துக்கொண்டு, பிறகு நிறுத்திவிடலாம். ஆனால், மீண்டும் வர வாய்ப்பு உண்டு. அப்போது மருந்தைத் திரும்ப எடுக்க வேண்டி இருக்கும்.

‘மண்டை காயவைக்கும்’ மைக்ரேன்!

ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால், பேசவே எரிச்சல் ஏற்படும்.  இதனால் சமூக வாழ்வு கெடும். அலுவலக வேலையில் ஈடுபட முடியாமல் போகும். மொத்தத்தில், அன்றைய நாளே வீணாகிப் போகலாம்.

வலி வராமல் தடுக்கும் வழிகளைக் கவனமுடன் பின்பற்றினால் போதும்.. மண்டையைக் குடையும் மைக்ரேனைத் தவிர்த்திடலாம்!

- மித்ரா

படங்கள்: தி. ஹரிஹரன்

'க்ளஸ்டர்’ தலைவலி

இந்த வகை வலி, தினமும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும் வரும். 10, 15 நாள் தொடர்ந்து இருக்கும். ஒரு பக்கம் மட்டும் வரும். குத்துவது போல இருக்கும். தினமும் 2 மணி நேரத்துக்குக் கூட வலி நீடிக்கும். வலி வரும்போது கண் சிவந்துவிடும்.

இன்னொரு வகை, டென்ஷனால் வரும் தலைவலி. அது, மன உளைச்சல் அதிகமாகும் நேரங்களில் ஏற்படுவது. இது தினப்படி தலைவலியாகவும் மாறலாம்.