ஸ்பெஷல்
Published:Updated:

இளமையில் உடற்பயிற்சி... இதயத்தை வலுவாக்கும்!

இளமையில் உடற்பயிற்சி... இதயத்தை வலுவாக்கும்!

ள்ளிக்கூடம் முடிந்ததும் ஓடி ஆடி விளையாடிவிட்டு, வீட்டுக்கு வரும் வழியிலேயே குழாயடி நீரைக் குடித்த காலம் இன்று இல்லை. இன்றைய விளையாட்டு என்பதும் அதிகபட்சம் 10-க்கு 10 அறைக்குள் சுருங்கிவிட்டது. கோலி, பம்பரம், கிரிக்கெட் மட்டை, ஹாக்கி ஸ்டிக், டென்னிஸ் ராக்கெட் எல்லாம் மறைந்து 'பி எஸ் 3, எக்ஸ் பாக்ஸ், மொபைல், ஆன்ட்ராய்ட், கம்ப்யூட்டர், நெட்’ இவையே இன்றைய டீன் ஏஜ் பிள்ளைகளின் தவிர்க்க முடியாத விளையாட்டுச் சாதனங்களாக உருவெடுத்துள்ளன. இதைத் தாண்டி அவர்கள் அதிக நேரம் செலவிடுவது தொலைக்காட்சியின் முன்புதான். நாள் முழுக்க படிப்பு, கம்ப்யூட்டர், டி.வி. என்று நேரத்தைச் செலவிடும் இன்றைய இளைஞர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இன்று பள்ளி மாணவர்களுக்குக்கூட 'இளந்தொந்திகள்’ இருக்கிறது.

இளமையில் உடற்பயிற்சி... இதயத்தை வலுவாக்கும்!

பாடி பில்டராக வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களைத் தவிர்த்து, மற்ற இளம் ஆண், பெண்களைப் பொருத்தவரை உடற்பயிற்சி என்பது 'முதியவர்கள் செய்வது, அல்லது ஸ்லிம் ஆக ஆசைப்படுபவர்கள் செய்ய வேண்டியது’ என்ற எண்ணம் மனதில் பதிந்திருக்கிறது.

இளைஞர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் பொதுநல மருத்துவர் தாமோதரனிடம் பேசினோம்.

உடற்பயிற்சியின் அவசியம்

'வளர் இளம்பருவத்தினர் மட்டுமல்லாமல், எல்லா வயதினருக்கும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். மிதமான உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்பைக் குறைக்கும்; மன அழுத்தத்தைக் குறைக்கும்; தசைகளின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து உறுதிப்படுத்தும். ஒரு காலத்தில் 40-50 வயதில் வந்த மாரடைப்பு, சர்க்கரை நோய் இன்று 20-30 வயதிலேயே வந்துவிடுகிறது. இளம்பருவத்தில் தங்களுடைய உடலைப் பராமரிக்கத் தவறியதன் விளைவுதான் இது. 13 வயதில் இருந்து 19 வயதுக்குட்பட்ட பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சியே இல்லாமல் போனதால், மன உளைச்சல், உடல் பருமன், இதய நோய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஆட்பட்டு வருவதாக சமீபத்திய ஆய்வும் தெரிவிக்கிறது. முறையான உடற்பயிற்சியினால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். எனவே குழந்தைகள், இளைஞர்களை கிரிக்கெட், ஃபுட்பால், வாலிபால், நீச்சல் போன்ற வெளிப்புற விளையாட்டுக்களில் ஈடுபட அதிகம் ஊக்குவிக்க வேண்டும்.

சர்க்கரை நோய் முதல்   இதய நோய் வரை

போதுமான உடற்பயிற்சி இல்லாததால் இளம் வயதிலேயே 'டைப் 2’ சர்க்கரை நோயால் அவதிப்பட நேரலாம். நாம் சாப்பிடும் உணவு குளுக்கோசாக மாற்றப்படுகிறது. அளவுக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு, எதிர்கால உபயோகத்துக்கு என்று சேகரித்து வைக்கப்படுகின்றன. இப்படி, தொடை, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்புக்கள் ஆபத்தானவை. இது சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை மட்டுமல்ல, இதய நோய்கள், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு, குறைந்தது 45 நிமிடம் முதல் 60 நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்தால்கூட போதும். உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பு எரிக்கப்பட்டுவிடும். ஃபிட்டான உடல் அமைப்பைப் பெறலாம்.

இளமையில் உடற்பயிற்சி... இதயத்தை வலுவாக்கும்!

உடல் பருமன் மற்றும் மன உளைச்சல்

  தற்போது கொழுப்புச் சத்து நிறைந்த துரித உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம்.அதிலும், இளம்பருவத்தினருக்கு உணவில் வரைமுறையே இல்லை. இரவு நேரத்தில் மிதமான உணவை பலரும் பின்பற்றுவது கிடையாது. விளைவு, உடல் எடை கூடி கொழுப்பு சேர்ந்து ரத்தக்குழாயில் படிகிறது. இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தக் குழாயில் அழுத்தம் ஏற்படுகிறது. அதுவே உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பாகவும் அமைகிறது. இதனால், சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட வீண்பதற்றம் அடைகின்றனர். அதுவே மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது.  

இளமையில் உடற்பயிற்சி... இதயத்தை வலுவாக்கும்!

மன உளைச்சலை விரட்ட...

நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி உதவுவதுபோல், மன ஆரோக்கியத்துக்கும் துணை புரிகிறது. குழந்தைகளின் ஆரோக்கியமான தூக்கத்துக்கும், கவனச்சிதறலில் இருந்து காப்பதற்கும் உடற்பயிற்சி உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும்போது நம் உடலில் 'எண்டோர்பின்’ (endorphin) என்ற ரசாயனம் உற்பத்தியாகிறது. இது மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க உதவிபுரிகிறது. குழுவாக இணைந்து விளையாடும்போது தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், கூச்சம், தாழ்வு மனப்பான்மையும் விலகும்.  

யார் செய்யலாம்?

உடற்பயிற்சிக்கு கடுமையாக, பலமான பொருட்களைத் தூக்கிச் செய்யவேண்டும் என்பதில்லை. டீன் ஏஜினர் 20 வயதுக்கு மேல் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். மற்றவர்கள் 'எடை’ தூக்கும் பயிற்சிகளைச் செய்யாமல், நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.

பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள்!

  காலை நேரத்தில் பிள்ளைகளோடு நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், பிள்ளைகள் விரும்பிய விளையாட்டை ஊக்குவித்தல், முறையான ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தல் போன்றவைகளால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளமுடியும். இளம் பருவத்தினருக்கு எடுத்துக்காட்டாக பெற்றோர்கள் இருந்தாலே போதுமானது. இன்றைய இளைஞர்களுக்கு யோகா சிறந்த தீர்வாக அமையும். அதை உருவாக்கித் தருவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

இந்நாளை ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பின்நாளை சுகமாகக் கழிக்க மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வோம்.

- நா.இள.அறவாழி

இளமையில் உடற்பயிற்சி... இதயத்தை வலுவாக்கும்!

வீட்டிலேயே செய்யலாம் பயிற்சி!

இளவேங்கை (21), உடற்பயிற்சியாளர், பாண்டிச்சேரி

''எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக ஜிம் போகவேண்டிய அவசியமில்லை. பலரும் சினிமா படங்களை பார்த்து ஆர்வமிகுதியில் வருகின்றனர். ஆனால், ஒரு வாரம்கூட தாக்குபிடிப்பது இல்லை. தினமும் காலையில் அரைமணி நேரம் நடைபயிற்சி செய்து உடலை வார்ம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு, வீட்டில் 'புஷ் அப்ஸ்’ என்று சொல்லப்படும் தரையில் படுத்து கைகளை கொண்டு உடலை மேலே உயர்த்தும் பயிற்சியைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து 10 முறை வீதம் மூன்று செட் செய்ய வேண்டும். இதனால், மார்புப் பகுதி கை தசைகள் வலுப்பெறும். அதே சமயம் கடுமையான வலியும் இருக்கும். தினமும் இதைச் செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம். அதன் பிறகு, 'ஆப்ஸ் வொர்க் அவுட்’. வயிற்று பகுதியில் இருக்கும் சதையைக் குறைக்க இரு கைகளைத் தலைக்குப் பின்னால் வைத்து உடலை முன்னும் பின்னுமாக, படுத்துக் கொண்டே உயர்த்த வேண்டும். இது போன்ற எளிய வழிமுறைகளால் உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கிவிடலாம் ''