ஸ்பெஷல்
Published:Updated:

எலும்பின் காவலன் வைட்டமின் டி

எலும்பின் காவலன் வைட்டமின் டி

20 வருடங்களுக்கு முன் நாம் கேள்விப்பட்டிராத, சின்ன சின்னக் குறைபாடுகள் எல்லாம் இப்போது, சர்வசாதாரணமாகக் கேள்விப்படும் நோய்களாகிவிட்டன. அதிலும், நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் முக்கியமான பல பிரச்னைகளுள் ஒன்று, வைட்டமின் டி குறைபாடு. முந்தைய தலைமுறையைவிட, இப்போதைய தலைமுறையினரிடம்தான் இந்தக் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது. நம் உடல் கால்சியம் சத்தைக் கிரகிக்க வைட்டமின் டி தான் அடிப்படைத் தேவை.  வைட்டமின் டி சத்தின் முக்கியத்துவம், அது குறைந்தால் ஏற்படும் பிரச்னைகள், சரிசெய்யும் வழிமுறைகள் போன்றவற்றுக்கு விரிவான விளக்கம் தருகிறார், சென்னை இ.எஸ்.ஐ. கல்யாணி மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் எழிலன்.

எலும்பின் காவலன் வைட்டமின் டி

''மற்ற வைட்டமின்களைவிட வைட்டமின் டி கொஞ்சம் ஸ்பெஷல்தான். கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமினை, நம் தோலே உற்பத்தி செய்கிறது. மேலும், நம் உடலில் கால்சியம் எப்போதெல்லாம் குறைகிறதோ, அப்போது வைட்டமின் டி, குடலில் இருக்கும் கால்சியம் சத்தை அதிகமாக உறிஞ்சிக்கொள்ளும். அதே நேரம், சிறுநீரில் கால்சியம் அதிகம் வெளியேறுவதைக் குறைத்து, அதையும் ரத்தத்தில் சேர்த்துவிடும். இயற்கையின் அதிசயமான இந்தத் தொழில்நுட்பத்தால், உடலில் கால்சியத்தின் அளவைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது வைட்டமின் டி.

குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறையும்போது, 'ரிக்கட்ஸ்’ என்னும்  நோய் ஏற்படும். பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டால் வரும் நோய், ஆஸ்டியோபீனியா.

தசை, எலும்பு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் அணுக்களைப் பராமரிப்பது போன்ற அனைத்து பணிகளும், கால்சியம் வைட்டமின் டி கூட்டுமுயற்சியால் நடப்பதுதான்.

ஊட்டச்சத்து மிக்க உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, சூரிய வெளிச்சமே உடலில் படாமல் இருப்பது போன்ற காரணங்களால், வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. இதனால், உடலில் கால்சியம் குறையும். அதைச் சரிசெய்ய, கழுத்தில் இருக்கும் தைராய்டு சுரப்பிக்குள் உள்ள பாராதைராய்டு சுரப்பி, PTH என்ற ஹார்மோனைச் சுரந்து, தன்னிச்சையாக எலும்பில் இருக்கும் கால்சியத்தைப் போகச்சொல்லிக் கட்டளையிடும். இதனால் எலும்பின் அடர்த்தி பாதிக்கப்படுகிறது.

வயது முதிர்ந்தவர்களுக்கு, உடலில் கால்சியம் உற்பத்தி குறைந்துவிடுவதால், எலும்பிலுள்ள கால்சியம் ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் எலும்புகள் வலுவிழந்து விடுகிறது. இந்த சமயத்தில், லேசாக அடிபட்டாலோ, கீழே விழுந்தாலோகூட, உடனே எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலும் ஆஸ்டியோபோரோஸிஸ் நோயாளிகளுக்கு,   எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்.

எலும்பின் காவலன் வைட்டமின் டி

சூரிய ஒளி படும்படி வாழ்பவர்களுக்கு வைட்டமின் டி சாதாரணமாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் ஏ.சி அறை அல்லது மூடிய அறைகளிலேயே அதிக நேரம் இருப்பவர்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கும். கை வலி, அசதி, முழங்கால் வலி, தசை வலி, இருமல், சளி போன்றவை இருந்தால், மருத்துவர் பரிந்துரையோடு, வைட்டமின் டி-யின் அளவைப் பரிசோதித்து, தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

பெண்களுக்கு மெனோபாஸுக்குப் பிறகு, ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால், கை, கால், இடுப்பு வலி என உடலில் பல்வேறு பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும். டாக்டரிடம் ஆலோசனை பெற்று, வைட்டமின் டி சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு, 200 முதல் 400 யூனிட் வரை வைட்டமின் டி-யும், 800 முதல் 1200 யூனிட் கால்சியமும் தேவை. பால், தயிர், கேழ்வரகு, மாமிச உணவுகள், வாழைத்தண்டு போன்ற

எலும்பின் காவலன் வைட்டமின் டி

உணவுகளில் இருந்து, வைட்டமின் டி சத்தை நேரடியாக நாம் பெறலாம். காய்கறிகளில் வைட்டமின் டி சத்து மிகவும் குறைவு என்பதால், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறிதளவேனும் வைட்டமின் டி-யை பெறலாம். உணவு மூலமாகக் கிடைக்காதபோது, மாத்திரைகள் மூலமாகவும் எடுத்துக்கொள்ளலாம். கல்லீரல் பிரச்னைகள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, தேவைப்பட்டால் சதையிலேயே நேரடியாக, செயல்திறன் மிக்க வைட்டமின் டி கொடுக்கப்படுகிறது.''

- பிரேமா

எலும்பின் காவலன் வைட்டமின் டி

சருமத்துக்கு வைட்டமின் டி எந்த அளவு தேவை என்பது குறித்து சரும நோய் நிபுணர் டாக்டர் ஓ.எஸ்.ரமணி:

சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் (Ultra violet rays) உதவியுடன், நம் சருமம் வைட்டமின் டி-யை தயாரித்துக்கொள்ளும்.  காலையில் சூரியன் உதித்த பிறகு ஒரு மணி நேரமும், மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்பு ஒரு மணி நேரமும் (Dawn & Dusk) நம் சருமத்தில் சூரிய ஒளி படுவது நல்லது. எனவே, வாக்கிங், ஜாகிங் போன்ற பயிற்சிகளை குறிப்பிட்ட அந்த நேரத்தில் வைத்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.