ஸ்பெஷல்
Published:Updated:

எடை அதிகரிக்க என்னென்ன உணவு?

எடை அதிகரிக்க என்னென்ன உணவு?

எடை அதிகரிக்க என்னென்ன உணவு?
எடை அதிகரிக்க என்னென்ன உணவு?

''என்ன பண்ணாலும் எடை குறைய மாட்டேங்குது!'' என்று ஏங்குவோர் பலர் இருக்க, ''என்ன சாப்பிட்டாலும், சதை போட மாட்டேங்குது?'' என்ற பலரது புலம்பல்களும் கேட்கத்தான் செய்கிறது.

''வெயிட்... வெயிட்... வெயிட்தானே போடணும்? கவலையை விடுங்க... அதுக்கு நான் கேரன்டி!'' என்று உறுதி தருகிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன். உடல் மெலிந்து இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவற்றைப் பட்டியலிடுகிறார். அவர் கொடுத்த உணவுப் பட்டியலில் இருந்து, சில உணவுகளைச் செய்து வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் திவ்யா பெசாலா. இந்த ரெசிபிகள் அனைத்தும் இரண்டு  முதல் நான்கு நபர்களுக்கான அளவு.

வாழைக்காய் ஃபிங்கர்ஸ்

எடை அதிகரிக்க என்னென்ன உணவு?

தேவையானவை: விரல் நீளத்தில் நறுக்கப்பட்ட வாழைக்காய் துண்டுகள் - 10, எண்ணெய் - பொரிக்க, பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸ் - தேவையான அளவு, பிரட் தூள் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை. பேஸ்ட் தயாரிக்க: மைதா, அரிசி மாவு - தலா அரை கப், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள் - தலா அரை டீஸ்பூன், டொமேட்டோ கெட்ச்அப், சோள மாவு (கார்ன்ஃப்ளார்), இஞ்சி - பூண்டு விழுது, சோயா சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.

செய்முறை: 'பேஸ்ட்’ செய்யக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து, கெட்டியான விழுதாகப் பிசைந்துகொள்ளவும். ப்ளெய்ன் கார்ன்ஃப்ளேக்ஸை நொறுக்கி, இதனுடன் பிரட் தூள், உப்பு சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். வாழைக்காயில் சிறிது உப்பு, மிளகாய்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பாதி வெந்ததும் இறக்கி, தண்ணீரை வடிக்கவும். அரைவேக்காடாக வெந்த வாழைக்காய் துண்டை, மைதா மாவுக் கலவையில் தோய்த்து, பிரட் தூளில் புரட்டி எடுத்து, காயும் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சாஸ் உடன் பரிமாறலாம்.

மாலை நேரத்துக்கு கலோரி மிகுந்த சத்தான டிஷ் இது.

பாதாம் உருளைக்கிழங்கு கட்லெட்

தேவையானவை: கட்லெட் புரட்டுவதற்கு: சீவிய பாதாம் துருவல் - ஒரு கப், சோளமாவு (கார்ன் ஃப்ளார்) - அரை டீஸ்பூன், அரைத்த பாதாம் விழுது - அரை கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

கட்லெட் செய்வதற்கு: வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், பிரட் தூள் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்.

ஃபில்லிங்கிற்கு: பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய், பீன்ஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மிலகுத்தூள் - 2 சிட்டிகை, ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எடை அதிகரிக்க என்னென்ன உணவு?

பச்சை திராட்சை சாஸ் செய்வதற்கு: விதையற்ற பச்சை திராட்சை - அரை கப், கொத்துமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, சாட் மசாலா தூள் - அரை டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பாதாம்பருப்பை ஊறவைத்து, தோலை நீக்கி, சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கேரட், பீன்ஸ், குடமிளகாயைப் போட்டு வதக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறித் தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கில் பிரெட் தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, மாவு போலப் பிசையவும். இந்த மாவை சிறிய கிண்ணம்போல் செய்து, உள்ளே நிரப்புவதற்கான காய்கறிக் கலவையில் ஒரு ஸ்பூன் வைத்து, பந்து போல மூடிவிடவும். இந்தப் பந்தை, பாதாம் விழுதில் தோய்த்து, பாதாம் சீவலில் புரட்டியெடுத்து, சூடான எண்ணெயில் புரட்டி எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள, திராட்சை சாஸ் அருமையாக இருக்கும். பச்சைத் திராட்சையை மிக்ஸியில் அடித்து, அதில் கொத்துமல்லித் தழை, சாட் மசாலா தூள், உப்பு மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, நன்றாகக் கலந்து வைக்கவும்.

அதிக கலோரி உணவு என்பதால், நிச்சயம் அதிகரிக்கும் உங்கள் எடை.

கேரளா கடலை கறி

தேவையானவை: கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கப், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி - தலா 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓரு ஆர்க்கு, தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 2, கரம் மசாலா தூள், கடுகு - தலா அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம் - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எடை அதிகரிக்க என்னென்ன உணவு?

செய்முறை: தக்காளி, பெரிய வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கவும். கொண்டைக்கடலையை 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, குக்கரில் வேகவைக்கவும். தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு, பொன்னிறமாகும்வரை வதக்கி, மிக்ஸியில் போட்டு, கொத்துமல்லித் தழை, பொட்டுக்கடலை, வேகவைத்த கொண்டைக்கடலை சிறிது சேர்த்து அரைத்துக்கொள்ளவும். கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, பட்டை, லவங்கம், இலை போட்டுத் தாளித்து, நசுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும். 2 நிமிடம் வதக்கிய பின், தக்காளி, மற்ற மசாலா தூள்களையும் ஒவ்வொன்றாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, கடலையையும் சேர்த்து, 10 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக, தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, தேவையான அளவு கெட்டியாக வந்ததும் இறக்கிவிடவும்.

சப்பாத்தி, தோசை, சாதம், ஆப்பம் என எல்லா உணவுக்கும் ஈடுகொடுக்கும், இந்த சத்தான கடலைக் கறி.

பாலக் பருப்பு பராத்தா

எடை அதிகரிக்க என்னென்ன உணவு?

தேவையானவை: பராத்தா மாவு பிசைய: கோதுமை மாவு - ஒரு கப், பாலக் (பசலைக்கீரை) - அரை கட்டு, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப.

உள்ளே நிரப்புவதற்கு: வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - அரை இஞ்ச் துண்டு, ஓமம், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மாங்காய் தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழை - கால் கப்.

செய்முறை: பசலைக்கீரையைப் பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வேகவைத்து மசிக்கவும். இதில் தேவையான அளவு எடுத்து, கோதுமை மாவில் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். உள்ளே நிரப்புவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும், வேகவைத்து மசித்த பருப்புடன் சேர்த்துக் கலக்கவும். கோதுமை மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போலத் தேய்த்து, அதன் மேலே பருப்புக் கலவையைச் சமமாகப் பரப்பிவிடவும். அதை, இன்னொரு சப்பாத்தியால் மூடி, ஓரங்களை ஒட்டிவிட்டு, தோசை தவாவில் போட்டு எடுக்கவும்.

பச்சைப் பசேல் பராத்தா உடலைப் புஷ்டியாக்கும்!

எடை அதிகரிக்க என்னென்ன உணவு?

எடை அதிகரிக்க...

சேர்க்க வேண்டியவை:

சேனைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கசகசா, அவகேடோ (பட்டர் ஃப்ரூட்), ஜாம், இனிப்பு வகைகள்,  பனீர், கடலை மாவு, மில்க் ஷேக் வகைகள், சீஸ், வெண்ணெய், முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் அனைத்து வகை நட்ஸ், சப்போட்டா, சீதாப்பழம், உலர் பழங்கள், நேந்திரம் பழம், பரங்கிக்காய், வாழைக்காய், அனைத்துப் பருப்பு வகைகள், எண்ணெய் பதார்த்தங்கள், கொண்டைக்கடலை, பட்டர் பீன்ஸ், டபிள் பீன்ஸ், ஃப்ரெஷ் சோயா பீன்ஸ் மற்றும் அனைத்து அசைவ உணவு வகைகள்.

செய்யக் கூடாதவை:

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் அருந்தக் கூடாது. காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. நார்ச்சத்து மிகுந்த கோதுமை, கார்ன்ஃப்ளேக்ஸ் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் தவிர்க்கவேண்டும். இரு வேளை உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளி இருக்கக்கூடாது. மோர், இளநீர், ரசம் போன்ற திரவ உணவுகள் வயிற்றை நிரப்பிவிடும் என்பதால் தவிர்க்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

•  3 தோசையிலிருந்து 4, 5 என உணவின் அளவை மெதுவாக அதிகரிக்கலாம்.  

•  ஒரு நாளைக்கு 6, 7 முறை உணவும், நொறுக்குத் தீனியும் சாப்பிடலாம்.

•  சுலபமாக செரிக்கும் உணவை சாப்பிடுவது நல்லது.  ஏனெனில், சீக்கிரத்தில் செரித்து, 2 மணி நேரத்தில் மீண்டும் பசி எடுத்து, சாப்பிடத் தோன்றும்.

•  லிவ் 52 சிரப் அல்லது செரிமானத்துக்குரிய டானிக் வகைகள் கல்லீரலை வலுப்படுத்தி, பசியை அதிகப்படுத்திவிடும்.

•  கஞ்சியில் அதிக கலோரி இருப்பதால், அடிக்கடி கஞ்சி அருந்தலாம்!

• நிம்மதியான தூக்கம் அவசியம் தேவை.  

பிரேமா நாராயணன்

படங்கள்: எம்.உசேன்