ஸ்பெஷல்
Published:Updated:

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

"ரெண்டு நாளா காது வலியா இருக்கு, எச்சில் கூட முழுங்க முடியலைப்பா... இருமலா இருக்கு... ஏதாவது மாத்திரை, சிரப் இருந்தா கொடு..." இப்படி சுய மருத்துவம் செய்துகொள்பவர்களே அதிகம்.

கண்ணில் பார்வைக் குறைபாடு, மூட்டில் வலி என்றால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்து, மருந்துகளை சாப்பிடுகிறோம். ஆனால், பேசுவதற்கும், ஒலியைக் கேட்பதற்கும், காற்றை சுவாசிப்பதற்கும், உண்ட உணவை விழுங்குவதற்கும் உதவிபுரியும் காது-மூக்கு-தொண்டையில் பிரச்னை ஏற்பட்டால்... அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

"ஐம்புலன்களில், முக்கியமான மூன்று புலன்கள் காது - மூக்கு - தொண்டையில் உள்ளன. பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, உடலின் முக்கியப்பகுதிகளான காது-மூக்கு-தொண்டைதான். இவற்றை ஒழுங்காகக் கவனித்தாலே... உடலின் முக்கியமான பிரச்னைகள் பலவற்றைத் தவிர்க்கலாம்'' என்கிற காது மூக்கு தொண்டை மருத்துவர் குமரேசன், அவற்றில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான சிகிச்சை முறைகளை இங்கே அடுக்குகிறார். மேலும், மூலிகை மருத்துவர் ஜீவா சேகர் வழங்கியுள்ள இயற்கை மற்றும் மூலிகை வைத்திய முறைகளும், இயற்கைப் ப்ரியன் ரத்தின சக்திவேல் தந்துள்ள பராமரிப்புக் குறிப்புகளும் உங்கள் ஆரோக்கியத்துக்கான அச்சாரம்!

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

காது

சப்தங்களைக் கேட்பதற்கு மட்டுமே நம்முடைய காதுகளின் பயன்பாடு அல்ல. நாம் நிலையாக நிற்பதற்கும்கூட, காதுதான் முக்கியப் பங்காற்றுகிறது. காது வழியாக நாம் சப்தத்தைக் கேட்பதால்தான் பேச முடிகிறது. குழந்தைகள் சப்தத்தை உணர்ந்துதான் பேசவே ஆரம்பிக்கின்றன. மனிதனின் முக்கியமான புலன்களில் ஒன்று காது. தூக்கத்தின்போது கண், மூக்கு, வாய், சருமம் என நான்கு புலன்களும் ஓய்வு பெற்ற பிறகு கடைசியாக தன்னுடைய செயல்பாட்டை நிறுத்துவது காது. அதேபோல், விழிக்கும்போது முதலில் செயல்படத் தொடங்கும் புலனும் அதுதான். எனவே, கேட்கும் சக்தி மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம். இதன் முக்கியத்துவத்தை உணராமல், 'காது வலிதானே!’ என்று அசட்டையாக இருந்துவிட்டால் ஒலியையே நாம் கேட்க முடியாத பரிதாப நிலை ஏற்படலாம். எனவே காது மீது கவனம் செலுத்தவேண்டும்.  

காது அடைப்பு  காது வலி

ம்முடைய காது மண்டலம், வெளிக்காது (புறச்செவி), நடுக்காது (நடுச்செவி), உட்காது (உட்செவி) என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சப்தம் எழுப்பும்போது, அது நம் வெளிக்காதின் வழியே ஊடுருவி காது ஜவ்வை அசைக்கிறது. இது நடுக் காதில் இருக்கும் மிகச் சிறிய எலும்புகளான 'மெல்லன்ஸ், இன்கஸ், ஸ்டெப்ஸ்’ என்கிற மூன்று எலும்புகளை அசைக்கும். அதில் ஸ்டெப்ஸ் எலும்பினால் அதிர்வு தரப்பட்டு உள் காதிலுள்ள திரவம் அசைகிறது. இதனால் செவி நரம்பு தூண்டப்பட்டு, அந்த ஓசை நம் மூளைக்குச் சென்று சத்தத்தை உணரவைக்கிறது.  

எப்போதும் வெளிக் காது, உள் காது என இரண்டு பக்கமும் சரியான அழுத்தம் இல்லாமல் போனால், காது அடைப்பும் வலியும் ஏற்படும். விரல்களால் மூக்கை அழுத்திப் பிடித்து, முடிந்த அளவுக்கு வாயை மூடி காற்றை முழுவதுமாக உள்ளிழுத்து, காது வழியாக வெளியேற்ற முயற்சிக்கலாம். இதனால், காதுக்குள் இருக்கும் ஜவ்வானது சமநிலையை அடைந்து அடைப்பு, வலி குறையும். பிராணாயாமம் நல்ல பயிற்சி.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

பனிகாலத்தில் மூக்கடைப்பு ஏற்படுவது சகஜம்.  குழந்தைகளுக்கு மூக்கடைப்பு நீடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், தொண்டைக்கும் காதுக்கும் இடையில் உள்ள காது தொண்டை இணைப்புக் குழாய் அடைபட்டு காது வலியை ஏற்படுத்தும். இரவு நேரத்தில்தான் காதுவலி அதிகத் தொல்லையைக் கொடுக்கும்.

காது இரைச்சல்

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

சாதாரணப் பேச்சின் ஒலி 30 முதல் 35 டெசிபல் இருக்கும். இந்த அளவு 85 டெசிபலுக்கு மேல் போகும்போதுதான் காது கேளாமை, இரைச்சல் ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இரைச்சலை 'டினிக்டஸ்’ பிரச்னை என்று சொல்வோம். வெளிக் காது, உட் காது, நடுக் காதில் வரலாம். ஒருசிலருக்கு அடைப்பினாலும் இரைச்சல் வரும். சிலருக்கு எப்போதும் இரைச்சல் இருக்கும். காதில் தண்ணீர் இருந்தாலும் இரைச்சல் இருக்கும். விடிந்ததும் சரியாகிவிடும். உள் காதில் நிணநீர் அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை இருக்கும்.

அந்தக் காலத்தில் இந்த அளவுக்கான சத்தம் பெரிய தொழிற்சாலைகள், சினிமா அரங்குகளில்தான் இருந்தது. ஆனால் இன்றோ, சினிமா தியேட்டர் சத்தம் வீட்டுக்குள்ளே வந்துவிட்டது. உடல் முழுவதும் பாதிக்கும் அதிக சத்தம் இது.  

10 - 20 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை அண்ணா சாலையில்தான் 85 டெசிபல் சத்தம் இருந்தது. ஆனால், இன்று பெருநகரின் முக்கிய இடங்கள் அனைத்தும் அந்த இடத்தைப் பிடித்துவிட்டன என்கிறது சமீபத்திய சர்வே. அதிக இரைச்சலான இடத்தில் இருக்கும்போது நிசப்தமாகவும், சத்தம் இல்லாத இடத்தில் இரைச்சலாகவும் சிலருக்குக் கேட்கலாம். இதன் விளைவாக, காது மட்டுமின்றி, கூடவே உணர்ச்சி நரம்புகள், மூட்டுக்கள், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கலாம்.

தீர்வு: காது இரைச்சலை சவுண்ட் தெரப்பி மூலம் குறைக்க முடியும். இதில், காதில் ஹெட்போன் போன்ற கருவி பொருத்தப்படும். அதில் முன்பே பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கும். இரண்டு விதமான குரல்கள் கலந்து, ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இதனால், பாதிக்கப்பட்டவருக்குக் கேட்டுவந்த இரைச்சல் சத்தம் குறைய ஆரம்பிக்கும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இந்த தெரப்பியை மேற்கொள்ளவேண்டும்

காதிலிருந்து சீழ் வடிதல்

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

காது தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் ஓர் உறுப்பு. மெழுகு போன்ற பொருளை உருவாக்கி தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கிறது. இந்த மெழுகை அகற்றுகிறேன் என்று, தினமும் குளித்து முடித்ததும், காதில் ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றை விட்டு அழுக்கு எடுப்பது சிலருக்கு வழக்கம். காது ஒரு சென்சிடிவ் உறுப்பு. கம்பி போன்ற பொருட்களை உள்ளே செலுத்தும்போது, உள்ளே புண்ணாகி சீழ் பிடித்துவிடும். இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது காதுக்கு நல்லது. தவிர, காதில் அடிபடுதல் மற்றும் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் காதில் சீழ் வடிதல் பிரச்னை ஏற்படலாம். சளி, பாக்டீரியா தொற்று, சுகாதாரமற்ற சூழ்நிலைகள்கூட காதில் சீழ் வடிதல் பிரச்னையை ஏற்படுத்தும். பாதிக்கப் பட்டவருக்குக் காய்ச்சல், சீழ் வடிவதால் நாற்றம், காதுகளில் வலி போன்ற அறிகுறிகள் தென்படலாம். இதற்கு வீட்டு வைத்தியம் பார்க்காமல், ஆரம்ப நிலையிலேயே டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

தலை சுற்றல் / மயக்கம்

லை சுற்றல், மயக்கத்துக்கு காதும் ஒரு பிரச்னைதான். உள்காதில் உள்ள மூன்று அரைவட்டக் குழாய்களின் நீர்க் கோர்வை அதிகமாகும்போது, தலை சுற்றலுடன் மயக்கம், வாந்தி, காதில் இரைச்சல், காது கேளாமை போன்ற பிரச்னைகள் தோன்றும். தக்க மருந்து மாத்திரைகள் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். தலை சுற்றலுக்குக் காரணமான நரம்பு மண்டலங்களை உணர்வு இழக்கச் செய்வதன் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.

சிலருக்கு திரும்பும் போது, பாத்ரூமில் அடியெடுத்துவைத்ததும், தலை சுற்றல், மயக்கம் வரலாம். இதை 'பொசிஷனல் வெர்டிகோ’ என்று சொல்வோம். இதற்கு உட்கார்ந்து இருந்தாலே சரியாகிவிடும். நல்ல ஓய்வுதான் சிகிச்சையே. திரும்பவும் வராமல் இருக்க, நிணநீர் அளவு எப்படி இருக்கிறது என்று உள்காதை ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும். இதற்கும் புத்துணர்வு பயிற்சி நல்ல பலனைத் தரும்.

காதில் உள்ள சுற்றெலும்பு, பட்டை எலும்பு, அங்கவடி... எலும்புகள் சத்தத்தை எதிர்கொள்கின்றன. இதன் அதிர்வலைகளை நரம்பு, உணர்ச்சியாக மாற்றி உள் காதுடன் தொடர்புகொண்டு மெக்கானிக்கல் எனர்ஜியாக மாற்றிவிடும். உள் காதில் சீழ் வடிந்தாலும், நிணநீர் அளவு குறைந்தாலும் இந்த மூன்று எலும்புகளும் பாதிக்கும். நோய் தொற்று நம்மை அறியாமலேயே உள் காதுக்குப் போய் மூளையைச் சென்றடையலாம்... இதனால் மயக்கம் வரும். இதற்கு அறுவைசிகிச்சை செய்து சரிசெய்ய வேண்டும்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

காது கேளாமை

பிறவியிலேயே பேச்சுத் திறன் அற்ற குழந்தைகளுக்குக் கேட்கும் திறன் இல்லாமல் போய்விடும். நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம், குழந்தை பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடன் பிறத்தல், தாய்-தந்தை ஆர்.ஹெச். ரத்த வகை இருப்பது போன்ற காரணங்களால் இந்த மாதிரியான பாதிப்புகள் இருக்கும். ரத்தப் பரிசோதனை செய்து, குழந்தை கருவில் இருக்கும்போதே கவனமாக இருக்க வேண்டும். குழந்தை பிறந்ததும் மஞ்சள்காமாலை இருந்தால், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். மூளையில் உள்ள அணுக்களில் பிறவிக் குறைபாடு இருந்தாலும் 'காக்ளியர் இம்ப்ளான்ட்’ மூலம் சரிசெய்துவிட முடியும்.        

வயது முதிர்வின் காரணமாகவும் கேட்புத்திறனில் பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு இயற்கையாகவே இழப்பு ஏற்படுகிறது. அதிக இரைச்சலான சூழலில் பணிபுரிபவர்களுக்கு, காதுகளில் ஏற்படும் நோய்த் தொற்று, காது மெழுகு அடைப்பு, உள் உறுப்பில் ஏற்படும் நோய், காது சவ்வில் ஏற்படும் ஓட்டை, காது மற்றும் காது எலும்புகளில் ஏற்படும் நோய்கள், தேவையற்ற வளர்ச்சி இவற்றின் காரணமாகக் காது கேட்கும் திறன் இழக்க நேரிடலாம். இது பெரிய பிரச்னையாக இருந்தாலும் தடுக்கக்கூடிய நோய்தான். படிக்காத குழந்தைகள், நோட்ஸ் சொல்லியும் எழுதாத பிள்ளைகள், கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருப்பவர்கள், பக்கத்து மாணவனைப் பார்த்து எழுதுபவர்கள் என, பெரிய பள்ளிகளில் எடுத்த சர்வேயில் சென்னையில் மட்டும், செவித் திறன் குறைவாக உள்ள மாணவர்கள் ஒன்பது சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

காதை அடிக்கடி குடைவதாலும் காது கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். இதற்கு பல் எலும்பின் உறுதித்தன்மையை அறிந்து, 'டூத் ஆங்கர்டு தெரப்பி’ (tooth Achored therapy) தெரப்பி மூலம் காது கேட்கும் திறனை கொண்டு வரலாம்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

காக்ளியர் இம்ப்ளான்ட்

காது கேட்கும் சக்தியை முற்றிலும் இழந்த குழந்தைகளுக்கு, 'காக்ளியர் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கும் சக்தியையும், பேசும் திறனையும் மேம்படுத்தலாம். பெரியவர்களுக்கும் பேச்சுப் பயிற்சி இல்லாமலேயே, இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். எந்தவிதத் தழும்போ, வீக்கமோ, வலியோ இல்லாமல் கேட்கும் திறன் எளிதில் கிடைக்கச் செய்யலாம். விரைவிலேயே காது கேட்கும் சக்தியைப் பெறுவதுடன் பேசும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

காதுகளைப் பாதுகாக்க வழிகள்

• காதுக்குள் குச்சி, பட்ஸ் போட்டு சுத்தம் பண்ணுதல் கூடாது.

•  80 முதல் 85 டெசிபல் வரை தான் நம் காதுக்கு சப்தத்தைத் தாங்கும் சக்தி உண்டு. அதற்கு அதிகமான சப்தத்தைத் தவிர்ப்பது நல்லது.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

•  சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை ஏற்பட்டாலும் காது பாதிக்கும் என்பதால், பாதிப்பை அதிகரிக்க விடாமல் உடனடியாகக் கவனிக்கவேண்டும்.  

•  அதிக சப்தம் இல்லாமல், மெல்லிய இசையை மட்டுமே கேட்க வேண்டும்.  

• காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகக் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.  

•  சுற்று வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ளலாம்.

•  தொடர்ந்து செல்போனில் பேச நேரிட்டாலும், ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது.

•  காதில் பூச்சி புகுந்துவிட்டால், எண்ணெய் சில சொட்டு விடலாம். பூச்சி செத்து வெளியே வந்துவிடும்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

•  காதில் அடிக்கடி டிராப்ஸ் போடக் கூடாது. இதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படலாம்.

•  காது, மூக்கில் நுழையும்படியாகவும், வாயில் போட்டு விழுங்கும்படியாகவும் உள்ள பொருட்களை குழந்தைகள் எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

(மூலி)கை வைத்தியம்

• காதில் திருகுவலி ஏற்பட்டால், 2 சொட்டு ரோஜா தைலத்தை விடலாம். வலி, குத்தல் மறையும்.

• மல்லிகை இலை எண்ணெயை 2 சொட்டு விடலாம். காது வலி, குத்தல், சீழ் சரியாகும்.

•  கரியபோளம் - 9 கிராம், சம்பங்கிப் பூ தூள் - 35 கிராம், இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி இறக்கி, ஆற வைத்துக்கொள்ளவும். திருகுவலி, புண் வந்தால் 2 சொட்டு விடலாம்.

மூக்கு

முகத்தை அழகாகக் காட்டுவதில் மூக்குக்குத்தான் முதல் பங்கு. சுவாசிக்கும் காற்றை உடலின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப மாற்றி, நுரையீரலுக்கு அனுப்பும் பணியைச் செய்வதுடன், மணத்தை நுகரும் கருவியாகவும் இருக்கிறது.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

குளிர்காலத்தில் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் நோய்கள் உண்டாகின்றன.  இவை முக்கியமாக சுவாச மண்டலத்தைத் தாக்குகின்றன.  இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்த் தொற்று ஏற்படுகிறது. குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது, சளி, மூக்கடைப்பு, தும்மல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.  இதனால் வாய் வழியே சுவாசிக்க நேரிடும்.  அப்போதும், மூச்சுக் குழாய்க்குள் கிருமிகள் எளிதில் நுழைந்து மூச்சுவிடுவதற்கே கஷ்டப்பட நேரிடும்.  

சளி

நுரையீரல் தனக்கே உரிய எதிர்ப்பு சக்தி மூலம் கிருமிகளை எதிர்த்துப் போராடும். சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த குழந்தைகளுக்கு கிருமிகளின் ஆக்கிரமிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.  இதனால், மூச்சுக் குழாய்க்குள் அழற்சி உண்டாகி, அங்கு நீர் கோத்து சளி பிடிக்கும்.  காய்ச்சல், இருமலும் வரும்.  இதற்கு மூச்சுக் குழாய் அழற்சி என்றுபெயர்.

இந்த தொந்தரவு ஒரு வாரம் வரை நீடிக்கும். இதனால் அதிக ஆபத்து இல்லை. நோயுள்ள குழந்தைக்கு அடிக்கடி சூடான வெந்நீரை தரவேண்டும். சத்துள்ள உணவுகளை வெதுவெதுப்பாகக் கொடுக்கவேண்டும். ஆவி பிடிக்கவேண்டும். இவற்றுடன் உரிய மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதன் மூலம் நோய் சீக்கிரத்தில் குணமாகிவிடும்.

சைனஸ்

மூக்கின் அருகில் இருக்கும் காற்று அறைகளில் சளி ஏற்பட்டு மூக்கடைப்பு ஏற்படுவதே சைனஸ். மூக்கில் உள்ள சளியால் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது தலைவலி, மூக்கில் சீழ் வடிதல், தொண்டையில் வீக்கம், காய்ச்சல், காது வலி ஏற்படும். லேசர் கருவி மூலம் எண்டோஸ்கோபிக் சிகிச்சை அளிக்கலாம்.  

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

மூக்கில் ரத்தம் வடிதல்

மூக்கில் சதை வளர்வது, மூக்கினுள் உள்ள ரத்தக் குழாய் உடைதல், சைனஸ் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரத்தம் வடியலாம். அதிக வேலை பளு, மூக்கில் காயம், வேகமாக மூக்கை சிந்துதல் போன்ற காரணங்களால் மூக்கில் ரத்தம் வடியலாம்.

மூக்கில் ரத்தம் வடிந்தால், தலையைச் சற்றே முன்பக்கமாகச் சாய்த்துக்கொள்ளவேண்டும். இதனால், ரத்தம் தொண்டைக்குள் செல்லாமல் தடுக்கலாம்.

மூக்கைப் பிடித்தபடி, வாய்வழியாக சில மணித்துளிகள் சுவாசிக்க வேண்டும்.  

ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியை மூக்கின் மேல் வைக்கலாம். இது ரத்தம் வடிவதைத் தடுக்கும். நாசித் துவாரத்திலிருந்து ரத்தம் வடிந்தால் குறைந்தது 10 நிமிடங்கள் இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படியும் விடாமல் ரத்தம் வடிந்தால், மூக்கில் பஞ்சை வைத்து, ரத்தம் வடிவதைக் கட்டுப்படுத்தி, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  

மூக்கில் சதை

தூசு நிறைந்த காற்று, டீசல் புகை போன்றவற்றால் அலர்ஜி ஏற்பட்டு மூக்கில் 'பாலிப்ஸ்’ எனப்படும் சதை வளரும். இதனால், மூச்சுத் திணறல் வரலாம். நுகர்வுத் தன்மை பாதிக்கப்படும். அறுவை சிகிச்சை மூலம் 'பாலிப்ஸ்’-ஐ அகற்றிவிடலாம். மாத்திரைகள் மூலமாக அலர்ஜியைக் கட்டுப்படுத்தலாம்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

தும்மல்

யாருக்கு எப்போது தும்மல் வரும் என்று சொல்லமுடியாது. தும்மல் வந்தாலும் நொடியில் நின்றுவிடும்.  தூசியைத் தட்டும்போது, உதறும்போது, ஒட்டடை அடிக்கும்போது, மாசுபடிந்த சாலையைக் கடக்கும்போது தூசியின் காரணமாகத் தும்மல் வரும். மேலும், காரப் பொருளை வதக்கும்போதோ, காரமான அல்லது சூடான உணவைச் சாப்பிடும்போதோ தும்மல் வரலாம்.

உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் தூசுகள், காரம், கிருமிகள் போன்றவை மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் நுழையும்போது, 'ஹிஸ்டமைன்’ என்ற தும்மல் சுரப்பியைத் தூண்டும். இதனால் தும்மலின்போது நீர்த்துளிகளும் வெளியேறும். அது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கான ஒரு செயல்தானே தவிர, ஒரு நோய் கிடையாது. தும்மல் வரும்போது அடக்கவே கூடாது. அதுவே நோயாக மாறிவிடலாம். தும்மல் வரும்போது தும்முவதுதான் அதற்கான நல்ல சிகிச்சையே.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

மூக்கைப் பாதுகாக்க வழிகள்

•  தூசுகள் நிறைந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேறிவிடுவது நல்லது.  

•  இளம் காலை நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிர்க்கலாம்.

•  முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு செல்லலாம்.

•  ஈரமான இடத்தில் நிற்பதைத் தவிர்க்கவேண்டும்.

•  மூக்கை பலமாக சிந்தக் கூடாது.  

•  டாக்டர் பரிந்துரைக்காத எந்த மருந்துகளையும் மூக்கில் விடக்கூடாது. இதனால் மூக்கு அதிகமாக அடைத்துவிடக்கூடும்.

•  அடிக்கடி மூக்கினுள் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்தவேண்டும்.  

•  கர்ச்சீப் முனையைச் சுருட்டி மூக்கினுள் நுழைத்து செயற்கையாகத் தும்மலை வரவழைக்கக்கூடாது.

•  மூக்குப்பொடி போடுவது கூடாது.

•  நார்ச்சத்து நிறைந்த பழங்கள், முளைக்கட்டிய பயறுகள், கீரைகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம்.

•  சைனஸ் அலர்ஜி இருப்பவர்கள் தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் யூகலிப்டஸ் ஆயிலை போட்டு ஆவி பிடிக்கலாம்.

•  மிதமான சூட்டில் சூப் குடிக்கலாம். சளி இளகி, எளிதில் வெளியேறும்.

•  ஜலதோஷம் என்றால், மூக்கு சிந்தும்போது அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம்.

•  சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும் பிராணாயாமம், மூச்சுப்  பயிற்சி, யோகாசனப் பயிற்சிகள் நல்ல பலனைத் தரும்.  

(மூலி)கை வைத்தியம்

•  ஒரு கைப்பிடி அருகம்புலை அரைத்துச் சாறு எடுத்துக் குடித்து வந்தால் சளித் தொல்லை இருக்காது.

•  சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சிரைப்பு தொல்லை இருப்பவர்கள் கறந்த பால், தயிர், வாழைப்பழம், முட்டை இவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

•  துளசிச் சாறு அல்லது தூதுவளைச் சாறை தினமும் ஒரு சின்ன டம்ளர் அளவுக்குக் குடித்து வந்தால் சளி, இருமல், நெஞ்சு கபம், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் சரியாகும். மேலும் தினமும் இரண்டு துளசி இலையை மெல்லலாம்.

•  சளி, மூச்சுத் திணறல் சீராவதற்கு ஒரு தக்காளியைச் சாறாக்கி, அதில் இரண்டு துளி தேன் கலந்து அருந்தலாம்.

•  பழுத்த நேந்திரம் பழத்தைத் தினமும் பாதி அளவு இரவில் சாப்பிட்டு வந்தால் மூச்சு சீராகும்.

•  சளி இருமல், ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் மூலிகை டீ, துளசி காபி, தூதுவளை சூப், எள்ளு லட்டு, முருங்கைக் கீரை அடை, முருங்கைக்காய் பொரியல், கொத்தமல்லி தோசை, புதினா அவல் மிக்ஸ், பேரீட்சை ஜாம், தூதுவளை தோசை, அடை, வில்வ சூப் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல நிவாரணம் பெறலாம்.  

•  கற்பூரவள்ளிச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி குணமாகும்.

•  மூக்கில் புண் இருந்தால், மஞ்சள் கிழங்கைச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து, வேப்ப எண்ணெயில் குழைத்துத் தடவ புண் ஆறும்.

•  சிலருக்கு வாழைப்பழம் சாப்பிட்டவுடன் தொண்டையில் தங்கி, சளி ஏற்படலாம். பழம் சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் சூடான தண்ணீர் பருகினால் சளி ஏற்படாது.

• சப்போட்டா பழ ஜூஸுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் சளித் தொல்லை இருக்காது.

•  உடல் சூட்டினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்க, மாதுளம்பழச் சாறுடன் அருகம்புல் சாறை சம அளவு கலந்து குடிக்கவேண்டும்.

•  கொய்யாப் பழம் சளித்தொல்லையை விரட்டும் தன்மை கொண்டது. வளரும் குழந்தைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கொய்யாப் பழம் சாப்பிடலாம்.  

•  ரோஜா பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்ள மூச்சு இரைப்பு நீங்கும். ரோஜாவை முகர்ந்தாலே, சளி, மூக்கடைப்பு நீங்கி, சுவாசிக்க முடியும்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

தொண்டை

குரல் பாதிப்பு

சிரியர்கள், பாடகர்கள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள், டிரில் மாஸ்டர்கள் போன்றவர்களுக்கு அவர்களின் தொழிலையே பெரும் கேள்விக்குறி ஆக்கிவிடுவது, அவர்களின் குரல் பாதிப்புதான். மோஸ்ட் யூஸ், ஓவர் யூஸ், அப்யூஸ் என மூன்று காரணங்களால் குரலில் பாதிப்பு ஏற்படுகிறது.  உதாரணத்துக்கு 20 வருடமாக ஆசிரியைப் பணியில் இருப்பவருக்கு தங்கள் குரல் ஆண் குரலாக மாறலாம். அதிகம் கத்தி கத்தி, தொண்டை சோர்வுற்று 'குரல் நாண் மொட்டுக்கள்’ அடிபட்டு, தேய்ந்து போகலாம். நோய்த் தொற்று ஏற்படலாம். இதற்கு அறுவைசிகிச்சை செய்தாலும் திரும்பவும் வர வாய்ப்புகள் அதிகம்.  மறைந்த பிரபல பாடகர் செம்மங்குடி சீனிவாச அய்யர் பாடிக்கொண்டே இருக்கும்போது திடீரென குரல் எழும்பவில்லை.  அவர் எந்த ஆபரேஷனும் செய்துகொள்ளாமல் கேரளா குருவாயூர் போய் கழுத்தளவு தண்ணீரில் நின்றும், கூழாங்கல்லை வாயில் போட்டும் பயிற்சிகள் சிலவற்றை மேற்கொண்டார்.  உடனடியாக சரியானது.

குரல் வளப் பயிற்சி, பேச்சுப் பயிற்சிதான் நல்ல பலனைத் தரும்.

டான்சில்

து தொண்டையில் ஏற்படும் பிரச்னை. நுண்கிருமி தாக்குதலால் தொண்டைச் சதையில் சீழ் கோத்துக் காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும். தொற்று பரவும்போது டான்சில்ஸ் வீங்கும். இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தக்க சமயத்தில் சிகிச்சை பெற்றால் மருந்துகளால் சரிசெய்துவிடமுடியும். டான்சில் முற்றிய நிலையில், சீழ் பிடித்து செப்டிக் ஆன புரையேறிய திசுக்களை அறுவை சிகிச்சை செய்து எடுக்கவேண்டியிருக்கும்.

அடினாய்டு சதை வளர்ச்சி

மூக்கில் உள்ள திசுக்களின் அபரிமித வளர்ச்சி காரணமாக அடிக்கடி சளி பிடித்தல், மூக்கு அடைப்பு ஏற்பட்டு வாயில் மூச்சு விடுதல், காதில் சீழ் கோத்தல், காது கேளாமை குறட்டை மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம். இதனால், மூளை மற்றும் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் வினியோகம் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படும். அறுவை சிகிச்சை மூலம் அடினாய்டு சதை வளர்ச்சியை நீக்க முடியும்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

குரல்

குரல் கரகரப்பு, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை குரல்வளை நோயின் அறிகுறிகள்.

குரல் நாண் பாதிக்கப்பட்டால் குரல் நாண் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இந்தச் சிகிச்சைக்குப் பின் பேச்சுப் பயிற்சி அளிப்பதன் மூலம் நல்ல குரலைப் பெற முடியும்.

குறட்டை

.என்.டி. தொடர்பான பிரச்னைதான் இது. குறட்டையால் தம்பதிகளே பிரிந்து போன சம்பவங்களும் உண்டு. மூக்கு முதல் தொண்டை வரை இதன் பாதிப்பு இருக்கும். மூக்கடைப்புதான் இதற்கு முக்கிய காரணம். மூச்சு உள்ளே போய் வெளியே வருவது தடைப்படுகிறது. இந்த அதிர்வினால் உள்நாக்கும் தடிக்கும்.

பலரும் குறட்டையை நோயாக நினைப்பதில்லை. லேசான அளவில் குறட்டை விடும்போது பிரச்னையில்லை. ஆனால், குறட்டையின் அளவு அதிகரிக்கும்போது அது ஒரு நோயாகி விடும்.

அதிக உடல் எடை, கழுத்துப் பகுதியில் அதிக சதை, சைனஸ் தொல்லை, மூக்கு, உள் நாக்கு, தொண்டைப் பகுதியில் பிரச்னை, ஆல்கஹால் பழக்கம் உள்ளவர்களுக்கும் குறட்டைப் பிரச்னை ஏற்படும்

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

.  

குறட்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகலில் எப்பவும் தூக்கம் வரும். மதியம் சாப்பிடும்போது, வண்டி ஓட்டும்போதுகூட தூக்கம் வரும். பேசிக்கொண்டே இருக்கும்போது தூங்கிவிடுவார்கள்.  சிலசமயம் இரவு தூக்கத்தில் மூச்சுவிடவும் மறப்பது உண்டு. இதனால் தூங்கக்கூட பயப்படுவார்கள்.  இதனால் தூக்கம் கெடலாம்.  

எப்போதும் ஒருவித சோர்வு, அசதி, மறதி, கோபம், எரிச்சல், உணர்ச்சிவசப்படுதல், மன உளைச்சல் இருக்கும்.

இதைப் போக்க உடல் எடையைக் குறைக்கவேண்டும். மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளைப் பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் சிகிச்சையின் மூலம் அடைப்பை சரி செய்துவிடலாம். சுவாச அடைப்பைச் சரி செய்துவிட்டால் ஆரோக்கியமான, ஆழ்ந்த தூக்கத்தையும் தெளிவான மனநிலையையும் உற்சாகத்தையும் பெறலாம்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

தொண்டையைப் பாதுகாக்க வழிகள்

•  அதிக சூடு, குளிர்ந்த பானங்களைத் தவிர்க்கவேண்டும்.  

•  தினமும் தூங்கும்போது சூடான பாலில் மஞ்சள்ள், மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம்.

•  சப்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

•  வெற்றிலை போடும் பழக்கம்கூட குரல்வளத்தைத் தக்கவைக்கும். தொண்டையில் கிருமி பாதிக்காமல் காக்கும்.

•  சிகரெட், பான்பராக், பாக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

•  புகைபிடிக்கும் நபர்களின் அருகில் நிற்பதும் தொண்டையை பாதிக்கும்.  

•  தொடர்ந்து பேசும்நிலை ஏற்பட்டால், இடையிடையே தண்ணீர் குடிக்க வேண்டும்.

•  தொண்டையில் சளி இருந்தால், கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். தொண்டைக்கு இதம் அளித்து சளி வெளியேற உதவும்.

(மூலி)கை வைத்தியம்

•  கரகரப்பு சளி, தொண்டைக்கட்டு நீங்க மா இலையைச் சுட்டு தேனில் வதக்கி சாப்பிட வேண்டும்.  

•  பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப் பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால், தொண்டைக்கு இதமாக இருக்கும். குரல் வளம் பெருகும்.    

•  குழந்தைகளுக்கு ஃப்ரிட்ஜில் வைத்த பழங்களைக் கொடுக்கவே கூடாது.

•  நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர தொடர் விக்கலையும் விரட்டிவிடலாம்.

•  இஞ்சிச் சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

•  இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

•  உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக் கட்டு குணமாகும்.

•  மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால், இருமல், காய்ச்சல் குணமாகும். புளிக்குழம்பைத் தவிர்க்கவும்.

•  வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி, மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண்கள் குறையும்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

•  சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்துப் பொடித்து, தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

•  தண்ணீரில் நான்கு துளசி இலையை தினமும் போட்டுக் குடிக்கத் தொடர் இருமல் நீங்கும்.  

•  சுடுதண்ணீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். சளி, மண்டைக் குத்தல் குணமாகும்.

•  மாதுளம் பழச் சாறுடன் இஞ்சிச்சாறை சம அளவு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நாள்பட்ட வறட்டு இருமல் ஓடி போகும்.  

•  பசும்பாலில் காய்ந்த திராட்சையை பசும்பாலில் ஊற வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சளி இருமல் போகும்.  அன்னாசிப் பழச் சாறுடன் மிளகுத் தூள், தேன் கலந்து சாப்பிடலாம்.

•  விளாம் மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்தக் கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க வறட்டு இருமல், மூச்சு இழப்பு, வாய் கசப்பு நீங்கும்.  

•  வறட்டு இருமலைப் போக்க, துளசியுடன் இஞ்சி சேர்த்து அரைத்து மாத்திரையாக உருட்டி காயவைத்து தேனில் கலந்து குடிக்கலாம்.

•  மாந்தளிரை நன்றாகக் காய வைத்து பொடித்து, அதில் 3 சிட்டிகை தண்ணீரில் கலந்து குடித்தால் தொண்டை தொடர்பான நோய் நெருங்காது. குரல் வளம் பெருகும்.  

•  மா இலைச் சாறுடன் அதே அளவு தேன், பால், பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டைக் குரலும் இனிமையாக மாறும்.

•  தொண்டைப் புண், எரிச்சல் நீங்க, மல்லிகை இலையை நெய்யில் வறுத்து துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

ஈ.என்.டி  டிப்ஸ்

•  தினமும் காதுகளில் சோப்பு போட்டு சுத்தம் செய்யவேண்டும்.  வயதானவர்களுக்கு காதுகளை சரிவர சுத்தம் செய்ய கொள்ள முடியாமல் போகலாம். இதனால், காது ஓரம் அழுக்கு அடைபோல் படிந்துவிடும். எடுப்பது மிகவும் கடினம். ஒரு காட்டன் பஞ்சில் எண்ணெய், தோய்த்து, காது வெளிப்புற இடுக்குகளில் ஒற்றி எடுத்து, மிதமான வெந்நீரில் சுத்தம் செய்தால், அழுக்கு மறைந்து காது பளிச்சென மின்னும்.  

•  சிலரது காதின் தோல் மிகவும் முரட்டுத்தனமாக இருக்கும்.  இவர்கள் தினமும்  மாய்ச்சரைசர் க்ரீம் தடவி வரலாம்.  பஞ்சு போல் காது மெல்லியதாகும்.  

• காதில் சிலருக்கு ஆங்காங்கே முடி இருக்கும். இதுவும் நல்லதுதான். தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

•  காது திடீரெனக் கேட்கவில்லை எனில், 24 மணி நேரத்துக்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது கேட்புத் திறனையே பாதித்துவிடும்.  

ஈ.என்.டி. தொல்லை... இனி எப்போதும் இல்லை!

•  காது கேட்கவில்லை என்பதற்காக கடைகளில் விற்கும் ஹியரிங் எய்டை நாமே வாங்கி பயன்படுத்துவது கூடாது.  மருத்துவரிடம் காட்டி, செவித்திறன் குறைவு அளவை அறிந்த பிறகே அதற்கேற்ற ஹியரிங் எய்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.  

•  மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.

•  அதிக எண்ணெய் சருமம் மற்றும் மூக்கின் மேல் அழுக்குப் படியும்போது பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் வரும்.  இதற்கு நல்ல தீர்வு ஆவி பிடிப்பதுதான்.  கொதிக்கும் வெந்நீரில் வெட்டிவேரைப் போட்டு நன்றாக ஆவிப் பிடிப்பதன் மூலம் மூக்கு சரும துளை பெரிதாகும்.  ஒரு காட்டன் பஞ்சினால் துடைத்து எடுக்கலாம்.  

•  பெரியவர்கள் மூக்கு சளிக்காகப் பயன்படுத்தும் துண்டை குழந்தைகள் தொடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.  குழந்தைகளுக்கு சட்டென கிருமித் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.      

•  சிலர், இருமல் வந்தால் உடனடியாக கடையில் இருமல் மருந்தைக் கேட்டு வாங்கி அளவுத் தெரியாமல் குடிப்பார்கள். குழந்தை இருமும் போதும் ஒரு ஸ்பூன் கொடுப்பார்கள். இது பெரும் ஆபத்து. இருமல் மருந்து எதுவானாலும், மருத்துவரின் பரிந்துரையில்லாமல் வாங்கக் கூடாது.

- ரேவதி

படங்கள்: ஆ.முத்துக்குமார், கு. கார்முகில் வண்ணன்