மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 3

தடுப்பூசி என்னும் தாழ்ப்பாள்

டுப்பூசி என்பது எப்படி உருவாக்கப்படுகிறது? இதைத் தெரிந்துகொண்டால், அது எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது சுலபம். 'முள்ளை முள்ளால் எடுப்பது’ என்ற சொலவடையை அடிக்கடி பயன்படுத்துவோமே, தடுப்பூசித் தயாரிப்பும் முள்ளை முள்ளால்

தடுப்பூசி ரகசியங்கள்! - 3

எடுக்கிற வேலைதான். ஒரு தடுப்பூசியை உயிருள்ள, வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அல்லது அழிக்கப்பட்ட கிருமிகளை முழுவதுமாகவோ, ஒரு பகுதியாகவோ பயன்படுத்தியும் தயாரிக்கலாம். இந்த மூலக்கூறுகளை 'ஆன்டிஜென்’ (Antigen) என்கிறோம். இவைதான் ரத்தத்தில் 'எதிர் அணு’க்களின் (Antibodies)  உற்பத்தியைத் தூண்டுகின்றன. இந்த எதிர் அணுக்கள் உடலுக்குள் நுழையும் கிருமிகளுடன் போராடி, நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன. ஒரு தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் அது 'தடுப்பூசி’ (Injectable Vaccine). அதையே சொட்டு மருந்தாக வாய்வழி செலுத்தினால், அது 'வாய்வழித் தடுப்பு மருந்து’ (Oral Vaccine).

தடுப்பு மருந்துகளில் உள்ள கிருமிகள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்தக் கிருமிகள் உடலுக்கு நோய் ஏற்படுத்தும் அளவுக்கு வீரியமுள்ளவை அல்ல. ஆனால் நம் தடுப்பாற்றல் மண்டலம், இந்தக் கிருமிகள் உடலில் நோய்களை உண்டாக்கிவிடக் கூடாதே என்று எச்சரிக்கையாக இருந்து, எதிர் அணுக்களை உற்பத்திசெய்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. ஆக மொத்தம், ஓர் அலாரம் அடிக்கும் வேலையைச் செய்வதுதான் இந்தக் கிருமிகளின் வேலை.

ஒற்றைகூட்டுத் தடுப்பூசி:

தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒரே ஒரு ஆன்டிஜெனை மட்டும் பயன்படுத்தி, தடுப்பூசி தயாரித்தனர். இந்த வகைத் தடுப்பூசிக்கு 'ஒற்றைத் தடுப்பூசி’ (Single vaccine) என்று பெயர். இந்தத் தடுப்பூசி மூலம், குறிப்பிட்ட ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தியை மட்டுமே பெற முடிந்தது. உதாரணமாக டைபாய்டு தடுப்பூசி. தற்போது உள்ள அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் ஒரே தடுப்பூசியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டிஜென்களைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல நோய்களைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகளைத் தயாரிக்கின்றனர். இந்த வகைத் தடுப்பூசிக்குக் 'கூட்டுத் தடுப்பூசி’ (Combination vaccine) என்று பெயர். பைவேலன்ட், டிரைவேலன்ட், டெட்ராவேலன்ட், பென்டாவேலன்ட் தடுப்பூசி எல்லாம் இதற்கான உதாரணங்கள்.

கூட்டுத் தடுப்பூசியின் நன்மைகள்:

தனித்தனியாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும் போது, உடலில் பல இடங்களில் தடுப்பூசிகளைக் குத்தவேண்டியது வரும். கூட்டுத் தடுப்பூசியைப் பயன்படுத்தும்போது குத்தப்படும் இடங்களையும், வலியையும் குறைக்கலாம். ஒற்றைத் தடுப்பூசியைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் தனித்தனியாக மருத்துவமனைக்குச் சென்றுவர வேண்டும். கூட்டுத் தடுப்பூசியால் மருத்துவமனைக்குச் சென்று வரும் பயணங்களையும் குறைக்க முடியும். பணச் செலவும் குறையும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 3

முதன்மைத் தடுப்பூசி (Primary vaccine):

ஒருவருக்கு முதல்முறையாகச் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'முதன்மைத் தடுப்பூசி’ என்று பெயர். இது 24 மணி நேரத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்கிவிடும். அதே நேரத்தில், நான்கு வாரங்கள் ஆகும்போது, எதிர்ப்பு சக்தியின் அளவு சிறிது குறையத் தொடங்கும். ஆகவே, மீண்டும் அதே தடுப்பூசியைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் செலுத்த வேண்டும். இப்படி, உடலுக்குத் தேவையான அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதற்காக மீண்டும் செலுத்தப்படுகிற தடுப்பூசிக்கும் 'முதன்மைத் தடுப்பூசி’ என்றுதான் பெயர். வீட்டுக்குச் சரியான காவலாளி அமையும் வரை ஒருவர் மாற்றி ஒருவர் எனக் காவலாளிகளைப் பணியில் அமர்த்துவதைப் போலதான் இதுவும்.

ஊக்குவிப்புத் தடுப்பூசி (Booster vaccine):

சில தடுப்பூசிகளை முதன்மைத் தடுப்பூசியாகப் பல முறை போட்ட பிறகும்கூட குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த நோய்களுக்குரிய எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். அந்த நேரத்தில், மீண்டும் அதே தடுப்பூசி போடப்பட வேண்டும். இதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்காக, மீண்டும் செலுத்தப்படும் தடுப்பூசிக்கு 'ஊக்குவிப்புத் தடுப்பூசி’ என்று பெயர். வீட்டில் காவலாளி இருப்பார். ஆனால், அவர் காவல் நேரத்தில் தூங்குவார். அப்போது அவரைத் தட்டி எழுப்புகிறோம். அதுமாதிரிதான் இது.

தடுப்பூசி வகைகள்

தடுப்பூசி தயாரிக்கப் பயன்படும் 'ஆன்டிஜென்’களைப் பொறுத்து தடுப்பூசிகள் ஒன்பது வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன;

உயிர் நுண்ணுயிரித் தடுப்பூசிகள் (LIve vaccines)

தடுப்பூசி ரகசியங்கள்! - 3

உயிரற்ற நுண்ணுயிரித் தடுப்பூசிகள் (Killed vaccines)

மொத்த செல் தடுப்பூசிகள் (Whole-cell vaccines)

பகுதிப்  பொருள் தடுப்பூசிகள் (Fractional vaccines)

துணைப் பொருள் தடுப்பூசிகள் (sub unit vaccines)

நச்சு முறிக்கப்பட்ட தடுப்பூசிகள் (Toxoid vaccines)

தனிக் கூட்டுச் சர்க்கரைப்பொருள் தடுப்பூசிகள் (Pure polysaccharide vaccines)

இணைக் கூட்டுச் சர்க்கரைப்பொருள் தடுப்பூசிகள் (conjugate polysaccharide vaccines)

மறுசேர்க்கை டி.என்.ஏ. மரபணுத் தடுப்பூசிகள் (Recombinant DNA vaccines)

இனி ஒவ்வொரு தடுப்பூசியைப் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்வோமா?

- போர் ஓயாது