மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

முக்கியம் இந்த முத்தடுப்பு ஊசி!

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

ஒரே ஒரு ஊசி போதும்... மூன்று நோய்களை விரட்டியடிக்கலாம். ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்த ஊசியின் பெயர் டி.டி.பி (DTP) தடுப்பூசி. இது தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் ஆகிய நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. ஒரு ஊசி மூலம் மூன்று தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவதால், இதற்கு 'முத்தடுப்பு ஊசி’ என்றும் பெயர் வந்தது. கொஞ்சம் விரிவாகப் பார்ப்போமா?

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

தொண்டை அடைப்பான் (Diphtheria):

'காரினிபாக்டீரியம் டிப்தீரியே’   (Corynebacterium diphtheriae) என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தொண்டையில் சாம்பல் நிறத்தில் ஒரு சவ்வு உருவாகும். இந்தச் சவ்வு வீங்கி, தொண்டையை அடைக்கும். அப்போது குழந்தை சுவாசிக்கவும் உணவை விழுங்கவும் சிரமப்படும். இந்த பாக்டீரியா வெளியிடும் ஒருவித நச்சுப் பொருள், இதயத்தைப் பாதித்து குழந்தையின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

 டெட்டனஸ் (Tetanus):

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

'கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி’   (Clostridium tetani) என்ற பாக்டீரியாவால் இது ஏற்படுகிறது. இந்த நோய்க்கு ரண ஜன்னி, இசிவு நோய், இழுப்பு நோய், வாய்ப்பூட்டு நோய், வில்வாத ஜன்னி, தசை விறைப்பு நோய் எனப் பல பெயர்கள் உண்டு. இந்த நோய் வந்தவரால் வாயைத் திறக்க முடியாது. கழுத்தை அசைக்க முடியாது. திடீரென்று முதுகு வில் போல் வளையும். வயிறு மரப்பலகைபோல் இறுகிவிடும். கைகால் தசைகள் விறைத்துக்கொள்ளும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். வலிப்பு வரும். இவற்றைத் தொடர்ந்து உயிரிழப்பும்கூட ஏற்படும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

 கக்குவான் இருமல் (Pertussis):

'பார்டெட்டெல்லா பெர்டூசிஸ்’ (Bordetella pertussis) என்ற பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது. தொடர்ச்சியான இருமல், இந்த நோயின் முக்கிய அறிகுறி. சுவாசிக்க முடியாத அளவுக்கு சில நிமிடங்கள் வரை தொடர்ந்து இருமல் வரும். இருமி முடிந்ததும் ஒரு விதக் 'கேவல் ஒலி’ எழும். வாந்தி வரும். இப்படிப் பல வாரங்கள் நீடிக்கும் இருமல் தொல்லையால், குழந்தை பால் குடிப்பதற்கும் உணவு உண்பதற்கும் சிரமப்படும். நோய் தீவிரமாகும்போது, நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழாய்த் தளர்ச்சி போன்ற நோய்களும் சேர்ந்துகொள்வதால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 5
தடுப்பூசி ரகசியங்கள்! - 5

 தடுப்பூசி வகை:

முத்தடுப்பு ஊசியில் டி.டி.டபிள்யூ.பி (DTwP) மற்றும் டி.டி.ஏ.பி (DTaP) என்று இரண்டு வகை உள்ளது. நோயில் இருந்து பாதுகாப்பதில் இரண்டுமே ஒன்றுதான். எனவே, குழந்தைகளுக்கு இதில் ஏதேனும் ஒரு ஊசியைப் போட்டாலே போதுமானது.

டி.டி.டபிள்யூ.பி ஊசி மருந்து, தொண்டை அடைப்பான் மற்றும் டெட்டனஸ் கிருமிகளின் முறிக்கப்பட்ட நச்சில் இருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால், கக்குவான் இருமலுக்குரிய கிருமியின் தயாரிப்பு மட்டும் வேறுபடும். அழிக்கப்பட்ட அந்தக் கிருமியின் மொத்த செல்களிலிருந்து (Whole cells) இது தயாரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியில் பக்கவிளைவுகள் உண்டு என்றாலும், விலை குறைவு என்பதால், இதுவே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.

டி.டி.ஏ.பி ஊசியில், தொண்டை அடைப்பான் மற்றும் டெட்டனஸ் நோய்க்கான தடுப்பு மருந்து முதலில் சொல்லப்பட்டது போலவே தயாரிக்கப்படும். ஆனால், கக்குவான் இருமலுக்கு மட்டும் அந்தக் கிருமியின் 'ஆன்டிஜென்’களைப் (Antigens)  பயன்படுத்தி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். இந்தத் தடுப்பூசியில் பக்கவிளைவுகள் குறைவு. குறிப்பாக, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி ஏற்படுவது, காய்ச்சல் உண்டாவது போன்றவை குறைவாக இருக்கும். அதேவேளையில், இது 'மரபுசார் பொறியியல்’ (Genetic engineering) எனும் நவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுவதால், இதன் விலை அதிகம். தனியார் மருத்துவமனைகளில் இது கிடைக்கிறது.

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

 போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் மற்றும் ஒன்றரை வயது, ஐந்து வயது முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதன் அளவு அரை மி.லி. குழந்தையின் வெளிப்பக்கத் தொடையில், முன் பக்கத்தின் மத்தியப் பகுதியில் (Antero lateral aspect) தசை ஊசியாகப் (Deep intra muscular route) போட வேண்டும். இதனுடன், போலியோ தடுப்பூசி, 'ஹிப்’ தடுப்பூசி (Hib vaccine), மஞ்சள் காமாலை பி தடுப்பூசி ஆகிய தடுப்பூசிகளும் போடப்படுவது உண்டு. இந்த ஊசிகளைக் குழந்தையின் தொடையில் தனித்தனி இடங்களில் ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ளலாம். இப்போது முத்தடுப்பு ஊசியானது, 'ஹிப்’, மஞ்சள் காமாலை பி, போலியோ தடுப்பூசி ஆகியவற்றுடன் கலந்து ஒரே ஊசியாகவும் கிடைக்கிறது. இதற்கு, 'பென்டாவேலன்ட் தடுப்பூசி’ என்று பெயர். பல முறை ஊசி குத்தினால் குழந்தைக்கு வலிக்கும் என்று கருதுபவர்கள், இந்த பென்டாவேலன்ட் தடுப்பூசியை ஒவ்வொரு முறையும் ஒரே ஊசியாகப் போட்டுக்கொண்டால் போதும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 5
தடுப்பூசி ரகசியங்கள்! - 5

 முத்தடுப்பு ஊசியைப் போடவில்லை என்றால்...

இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத குழந்தை, 7 வயதுக்குக் கீழ் இருந்தால், முத்தடுப்பு ஊசியை 6 மாத இடைவெளியில் விடுபட்ட தவணைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு ஒன்றரை வயதிலும், 5 வயதிலும் இதைப் போடவில்லை என்றால், இப்போது உடனடியாக ஒரு ஊசியையும் அடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு ஒரு ஊசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு ஒரு முறை கூட முத்தடுப்பு ஊசி போடவில்லை என்றால், உடனடியாக ஒரு ஊசியையும், ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணைகளையும், பிறகு 6 மாத இடைவெளியில் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு 7 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், டி.டி.ஏ.பி (Tdap) என்ற தடுப்பூசியைப் போட வேண்டும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

 யார் போட்டுக்கொள்ளக் கூடாது?

ஏற்கனவே இதைப் போட்ட ஒரு வாரத்தில், குழந்தைக்கு மூளை மற்றும் நரம்பு தொடர்பான பாதிப்புகள் வந்திருந்தால், மீண்டும் போட்டுக்கொள்ளக் கூடாது. இதைப் போட்டுக்கொண்டபோது குழந்தைக்கு வலிப்பு வந்திருந்தாலும், தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேல் குழந்தை அழுதிருந்தாலும், 105 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் காய்ச்சல் வந்திருந்தாலும் அடுத்த முறை தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும்போது மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். புற்றுநோய் போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த நோயிலிருந்து முற்றிலும் குணமான பிறகே போட்டுக்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 5

 காய்ச்சல் வந்தால்?

இந்தத் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்குக் காய்ச்சல் வரலாம். தடுப்பூசி போடப்பட்ட உடல் பகுதியில் வீக்கம், வலி, தோல் சிவப்பது ஆகியவை ஏற்படலாம். குழந்தை நீண்ட நேரம் அழக்கூடும். இரண்டு நாட்களுக்கு 'பாராசிட்டமால்’ மாத்திரை/மருந்து கொடுத்தால் காய்ச்சல், வலி குறைந்துவிடும். எனவே, கவலை வேண்டாம்!

- போர் ஓயாது