மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 6

போயே போச்சே போலியோ!

ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் போலியோ நோய், வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கிறது. இதனால் கை, கால் தசைகள் சிறுத்து, இளம்பிள்ளை வாதம் ஏற்படு்கிறது.

இந்த மோசமான இளம்பிள்ளை வாத நோயை, ஒவ்வொரு முறையும் இரண்டே இரண்டு மருந்துச் சொட்டு்க்கள் மூலமாக இருந்த இடம் தெரியாமல் ஒழித்தே விட்டோம். அப்படி ஒரு மகத்தான சாதனை புரிந்த மருந்துதான் போலியோ சொட்டு மருந்து.

தடுப்பூசி ரகசியங்கள்! - 6

நோய் பாதிப்பு  

போலியோ கிருமிகள் அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் நம் குடலுக்குள் சென்று, அங்கிருந்து ரத்தத்தின் வழியே மூளையை அடைந்து, நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன. முக்கியமாக, கால் தசைகளை இயக்குகின்ற நரம்புகளைப் பாதிப்பதால், இந்த நோய் உள்ளவர்களுக்குக் கால்கள் செயல் இழக்கும்.  இந்த நோய்க் கிருமிகள் மலத்தின் வழியாக வெளியேறி, மற்றவர்

களுக்கும் பரவும். பல நேரங்களில் போலியோ கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. ஆனால், சில நேரங்களில் மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும். சுவாசத்துக்கு உதவும் தசைகளை இந்தக் கிருமி தாக்கும்போது, பாதிக்கப்பட்ட நபர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி இறப்பைத் தழுவலாம் என்பதால், இது மிகவும் அபாயகரமானது.

போலியோ தடுப்பின் முக்கியத்துவம்

உலக அளவில், சென்ற நூற்றாண்டில் கோடிக்கணக்கான பேர் போலியோவால் முடமாயினர். இந்த நிலைமை ஆண்டுதோறும் அதிகரித்து வரவே, போலியோவுக்குக் கடிவாளம் போட மருத்துவ உலகம் களத்தில் இறங்கியது. 1952ம் ஆண்டில், 'ஜோனஸ் சால்க்’ (Jonas Salk) என்ற அமெரிக்க மருத்துவர், போலியோ நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். அதன் பிறகு, இந்த நோயின் தாக்குதல் உலக அளவில் குறையத் தொடங்கியது.

1957ம் ஆண்டில,் 'ஆல்பர்ட் சாபின்’ (Albert Sabin) என்ற மற்றொரு அமெரிக்க மருத்துவர் இதே நோய்க்குத் தடுப்புச் சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியைப் போடுவதை விட சொட்டு மருந்தைக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. இதனால், இந்திய அரசாங்கம் 'குழந்தைகளுக்கு முறைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தால், நோயைத் தடுக்கலாம்’ என்னும் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது. இந்தியாவில், 2011ம் ஆண்டிலேயே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது.  'இந்தியா போலியோ இல்லாத நாடு’ எனும் நற்சான்றிதழையும் உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கொடுத்துவிட்டது. 'அதான் போலியோவை முற்றிலும் ஒழித்தாயிற்றே... பிறகு ஏன், தொடர்ந்து தடுப்பூசி/சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்?’ என்ற சந்தேகம் எழலாம். காரணம் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் இன்னமும் போலியோ ஒழிக்கப்படவில்லை. அங்கிருந்து இடம்பெயர்ந்து குடியேறுபவர்கள் அல்லது சுற்றுலாவாசிகள் வழியாக இந்த நோய் மீண்டும் இந்தியாவுக்கு வந்துவிட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்கத்தான் தடுப்பூசி பயன்படுத்த வேண்டும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

தடுப்பு மருந்து வகை

போலியோவைத் தடுக்க, தடுப்பூசியும் (Inactivated polio vaccine - IPV ) தடுப்புச் சொட்டு மருந்தும் (Oral Polio Vaccine - OPV) உள்ளன. அழிக்கப்பட்ட போலியோ கிருமியைப் பயன்படுத்தித் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். உயிருள்ள, வீரியம் குறைந்த போலியோ கிருமியைப் பயன்படுத்தி சொட்டு மருந்தைத் தயாரிக்கிறார்கள்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 6

பென்டாவேலன்ட் தடுப்பு ஊசி

போலியோ தடுப்பூசியைத் தனியாகவும் போட்டுக்கொள்ளலாம்; பென்டாவேலன்ட் தடுப்பூசி மூலமும் போட்டுக்கொள்ளலாம். போலியோ தடுப்பூசியின் விலை அதிகம் என்பதால், குழந்தைக்குத் தடுப்பூசி போட வசதி இில்லாதவர்கள் போலியோ சொட்டு மருந்தை மட்டும் போடலாம்.

முகாம்களும் முக்கியம்!

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு தடுப்பூசியும் சொட்டு மருந்தும் கொடுத்திருந்தாலும்கூட, அரசாங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் போலியோ தடுப்பு முகாம்களிலும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டியது மிக அவசியம்.

தடுப்பூசி போடவில்லை எனில்...?

ஆரம்பத்திலிருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத குழந்தைக்கு, 5 வயதுக்குள், 2 மாத இடைவெளியில் 2 ஊசிகளையும், 6 மாத இடைவெளியில் மூன்றாவது ஊசியையும் போட வேண்டும். ஒன்றிரண்டுமுறை போட்டுவிட்டு மீதித் தவணைகளைத் தவறவிட்டவர்கள், ஏற்கனவே சொன்ன இடைவெளியில், விடுபட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்; விடுபட்ட சொட்டு மருந்தையும் போடலாம்.

அம்மாக்கள் கவனிக்க:

தடுப்பூசி ரகசியங்கள்! - 6

குழந்தைகளுக்கு மிதமான சளித் தொல்லை இருந்தாலும், தயங்காமல் போலியோ சொட்டு மருந்தைத் தரலாம்; தடுப்பு ஊசியையும் போட்டுக்கொள்ளலாம். பக்க விளைவுகள் இல்லை என்பதால் பயம் தேவை இில்லை!

போலியோ தடுப்பு ஊசியே சிறந்தது, ஏன்?

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் போலியோவைத் தடுக்க, தற்போது தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்துகி்ன்றனர். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளில் தடுப்பூசி, சொட்டு மருந்து இரண்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன. வாய்வழியாகத் தரப்படும் சொட்டு மருந்தினால், 25 லட்சம் பேரில் ஒருவருக்கு, போலியோ வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், போலியோ தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, இதற்குத் தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் சிறந்தது என்று 'இந்தியக் குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பு’ (மிகிறி) இந்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் சொட்டு மருந்துக்குப் பதில் தடுப்பூசியே பயன்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

போர் ஓயாது

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்