மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 7

டாக்டர் கு.கணேசன், படம்:ஆர்.எம்.முத்துராஜ்

மக்களைத் தாக்கும் நோய்க் கிருமிகளில் வைரஸ் மிக மோசமானது. இது ஏற்படுத்தும் பாதிப்புகள் கடுமை யானவை; மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை. உதார ணத்துக்கு... சென்ற நூற்றாண்டில் எய்ட்ஸ்; இப்போது எபோலா. இந்த வரிசையில் சத்தம் இல்லாமல் உயிரைப் பறிக்கும் மற்றொரு வைரஸ் கிருமி 'ஹெபடைட்டிஸ் பி’  (Hepatitis - B). இதற்கு 'உயிர்க்கொல்லி நோய்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. ஆனால், இந்த வைரஸ் தொற்றைத் தவிர்க்க தடுப்பூசி உள்ளது என்பது ஆறுதலான விஷயம்.

பொதுவாக, எந்த ஒரு கிருமி கல்லீரலைத் தாக்கினாலும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும்.  அது பாக்டீரியாவாகவும் இருக்கலாம்; வைரஸாகவும் இருக்கலாம். வைரஸ்களில் 'ஹெபடைட்டிஸ்’ வைரஸ் முக்கியமானது. ஏ, பி, சி, டி, இ என இவற்றில் பல வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் பி மற்ற வைரஸ்களைவிட மிகவும் மோசமானது. இது கல்லீரலைத் தாக்கி மஞ்சள் காமாலை – பி எனும் தொற்று நோயை ஏற்படுத்துகிறது.

உலகில் சுமார் 20 கோடிப் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பிரத்யேகமாக மருந்து, மாத்திரை, சிகிச்சை எதுவும் இல்லை. இது வந்தால் மரணம் நிச்சயம் என்பதால், ஒவ்வொருவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது.

பரவும் விதம்

ரத்தம், தாய்ப்பால், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்களின் மூலம் இந்த நோய்க்கிருமி வெளியேறி பரவுகிறது. கர்ப்பிணிக்கு / பாலூட்டும் தாய்க்கு இந்த நோய் இருந்தால், குழந்தைக்கும் இது தொற்றுகிறது. உடலுறவு மூலம் இது மற்றவர்களுக்குப் பரவுகிறது.

தனக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது என்பதை அறியாமல்  யாராவது ரத்ததானம் செய்தால், அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்ட வருக்கும் இந்த நோய் வரும்.(தற்போது பரிசோதனைகள் பல செய்து நோய் பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகே தானமாகப் பெறப்பட்ட ரத்தம் மற்றவர்களுக்கு செலுத்தப்படுகிறது.) இவர்களுக்குப் போடப்பட்ட ஊசியையும் சரியாகத் தொற்று நீக்கம் செய்யாமல், மற்றவர்களுக்குப் பயன்படுத்தினால், நோய் பரவும்.

போதை ஊசி பழக்கம் உள்ளவர்கள், டாட்டூ குத்திக்கொள்பவர்களுக்கு இந்த நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் உள்ளவர்கள் பயன்படுத்திய சவரக்கத்தி, ரேசர் பிளேடு...போன்றவற்றில் சுமார் ஏழு நாட்கள் வரை இந்தக் கிருமிகள் உயிருடன் இருக்கும். அந்தச் சமயத்தில் அந்தப் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், அவர்களுக்கும் இந்த நோய் வந்துவிடும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 7

நோய் பாதிப்பு

இந்த நோய்த்தொற்று உள்ளவருக்குப் பசி இருக்காது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை ஏற்படும். இதனால், கண்களும் தோலும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். மலம் வெள்ளை நிறத்தில் போகும். வயிறு வலிக்கும். தோல் அரிக்கும். எலும்பு மூட்டுகளிலும் தசைகளிலும் கடுமையான வலி உண்டாகும். இந்த அறிகுறிகள் அனைத்தும் சில வாரங்களில் மறைந்துவிடும் என்றாலும், இந்த நோய் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, நோய் கடுமையாகும். அதேநேரத்தில் இதன் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. குறிப்பாக, குழந்தைகளுக்கும், சிறுவர்சிறுமிகளுக்கும் இந்த நோய் இருப்பதே வெளியில் தெரியாது. அந்த நேரத்தில் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே மற்றவர்களுக்கு இந்த நோயைப் பரப்புவார்கள். ஆதலால், இவர்களை 'நோய்க் கடத்துநர்கள்’ என்று கூறுகிறார்கள். இவர்

களுக்கு நாட்கள் ஆக ஆக கல்லீரல் சுருங்கும் (Liver Cirrhosis). கல்லீரலில் புற்றுநோய் வரும். இறுதியில், மரணம் ஏற்படும்.

 தடுப்பூசி வகை

மஞ்சள் காமாலை – பி நோய்க்கு சிகிச்சைதான் இல்லை. 100 சதவீதம் இதை வராமல் தடுக்க 'மஞ்சள் காமாலை – பி தடுப்பூசி’ உள்ளது. இது தனியாகப் போடப்படும் ஊசியாகவும், பென்டா

வேலன்ட் என்னும் கூட்டுத் தடுப்பூசியாகவும் கிடைக்கிறது. இந்த நோய்க் கிருமியை மரபு

சார் பொறியியல் தொழில்நுட்பத்தில் ஈஸ்ட் செல்களில் வளர்த்து, அதன் மேல் அடுக்கு ஆன்டிஜெனைப் (Surface antigen) பயன்படுத்தி இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள்.

 தடுப்பூசியின் அவசியம்

இந்தியாவில் 100ல் 4 பேர் மஞ்சள் காமாலை  பி கிருமியைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். 100 கர்ப்பிணிகளைப் பரி சோதித்தால், குறைந்தது 3 பேரிடம் இந்த நோய்க் கிருமிகள் காணப்படுகின்றன. இவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவ வாய்ப்புகள் அதிகம். அதே நேரத்தில் இந்தத் தடுப்பூசியை முறைப்படி போட்டுக்கொள் கிறவர்களுக்கு இந்த நோய் வருவதே இல்லை. இந்தியாவில் இந்தத் தடுப்பூசி போடத் தொடங்கிய பிறகு, கல்லீரல் புற்றுநோயும் கல்லீரல் சுருக்க நோயும் ஏற்படுவது மிகவும் குறைந்துள்ளது.

போட்டுக்கொள்ளும் முறை

குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, ஒன்று முதல் ஒன்றரை மாதங்களுக்குள் இரண்டாம் தவணை, 6 மாதங்கள் முடிந்ததும் மூன்றாம் தவணை என்று இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதன் அளவு அரை மில்லி. குழந் தையின்வெளிப்பக்கத் தொடையில் தசை ஊசியாகப் போட வேண்டும். குழந்தை குறை மாதத்தில் பிறந்து உடல் எடை 2 கிலோவுக்குக் குறைவாக இருந்தால், முதல் தவணைத் தடுப்பூசியைப் பிறந்தவுடன் போடக்கூடாது. பிறந்த 30ம் நாளில் முதல் தவணையையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையாக வழக்கம் போலவும் போட வேண்டும்.

தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வலி, சிறிது வீக்கம், மிதமான காய்ச்சல், களைப்பு, தலைவலி போன்ற சிறு அவஸ் தைகள் உண்டாகலாம். ஆனால், இவை தானாகவே சரியாகிவிடும். கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் இதில் இல்லை என்பது ஆறுதலான விஷயம்!

தடுப்பூசியைப் போடவில்லை எனில்....?

ஆரம்பத்தில் இருந்தே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் எந்த வயதிலும் இதைப் போட்டுக் கொள்ளலாம். மொத்தம் மூன்று முறை இதைப் போட்டுக் கொள்ள வேண்டும். முதல் ஊசிக்கும் இரண்டாம் ஊசிக்கும் ஒரு மாதம் இடைவெளியும், இரண்டாம் ஊசிக்கும் மூன்றாம் ஊசிக்கும் ஐந்து மாதம் இடைவெளியும் விட வேண்டும். 10 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதன் அளவு அரை மி.லி. 10 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இதன் அளவு ஒரு மி.லி. குழந்தைகளுக்குத் தொடையிலும், பெரியவர் களுக்கு இடது புஜத்திலும் போட வேண்டும். இடுப்பில் மட்டும் போடவேகூடாது.

யாருக்கு இது அவசியம் ?

இந்தியாவில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை  பி தடுப்பூசி அவசியம். அவர்களோடு, போதை ஊசி போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு வைத்துக்கொள்பவர்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், நெடுங்காலம் கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்கள், கல்லீரல் நோய் வந்துள்ளவர் வீட்டில் வசிக்கும் மற்றவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள்... ஆகியோர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

தவிர, மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணி உதவியாளர்கள், செவிலியர்கள், கிராமப்புற சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவச் சமூகப்பணி செய்பவர்கள், ரத்த வங்கி மற்றும் ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் பணிபுரிபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரும் இந்தத் தடுப்பூசியை அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால்?

கர்ப்பிணிக்கு மஞ்சள் காமாலை இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு அது பரவிவிடும். இதைத் தடுக்க, குழந்தை பிறந்தவுடன், மஞ்சள் காமாலை  பி இம்யுனோகுலோபுலின் எனும் தடுப்பு மருந்தை அரை மில்லி அளவில் தசை ஊசியாகப் போட வேண்டும். குழந்தை பிறந்தவுடன் போடவில்லை என்றால், அடுத்த 7 நாட்களுக்குள் இதை அவசியம் போட்டுவிட வேண்டும். இத்துடன் வழக்கமான மஞ்சள் காமாலை  பி தடுப்பூசியையும் போட வேண்டும். இந்த இரண்டையும் ஒரே தொடையில் போடக்கூடாது. தனித்தனி தொடைகளில் போட வேண்டும்.

போர் ஓயாது