மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 8

டாக்டர்.கு.கணேசன்

மனித உடலின் தலைமைச் செயலகம் மூளை. இதயம் இயங்கிக்கொண்டிருக்கும்போதே, மூளை இறந்துவிட்டால், உயிர் இருந்தும் பயன் இல்லை. அப்படிப்பட்ட மூளையைத் தாக்குவதற்கு என்றே பல நோய்கள் வரிசையில் காத்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, மூளை உறைக் காய்ச்சல்.

 
மூளையை மூன்று உறைகள் போர்த்திப் பாதுகாக்கின்றன. அவற்றுக்கு ‘மெனிஞ்சஸ்’ என்று பெயர். இவற்றை பாக்டீரியா / வைரஸ் கிருமிகள் பாதிக்கும்போது, கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும். அதற்கு ‘மூளை உறைக் காய்ச்சல்’ (Meningitis) என்று பெயர். இது ஒரு கொடுமையான தொற்றுநோய். இதை ஏற்படுத்துகின்ற பாக்டீரியாக் கிருமிகளில் ஒன்று, ‘ஹீமோபிளஸ் இன்ஃபுளூயென்சா-பி’( Haemophilus Influenza –Type b). இந்தக் கிருமி மூளை உறையைப் பாதிக்கும்போது உண்டாகிற நோய்க்கு ‘ஹிப் மூளை உறைக் காய்ச்சல்’ என்று ஒரு தனிப் பெயரும் உண்டு. பொதுவாக, இந்த நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைகளின் உடலில் இந்த நோய்க்கு உரிய இயற்கையான எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால், உடனே நோய் தாக்குவதற்கு ஏதுவாகிறது. 

நோய்ப் பரவல் மற்றும் அறிகுறிகள்:

தடுப்பூசி ரகசியங்கள்! - 8

இந்த வகை பாக்டீரியாக் கிருமிகள் மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற இடங்களில் தங்கி, நோயை உண்டாக்கும்; இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், சளியைக் காறித் துப்புதல் ஆகியவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் வெளியாகி, காற்றின் வழியாக மற்றவர்களுக்குப் பரவும்.


இந்த நோய்க் கிருமிகள் மூளையை மட்டுமல்லாமல், தொண்டை, மூளை, இதயம், எலும்பு, ரத்தம் என்று பல பகுதிகளைப் பாதிக்கும். இவற்றில் மூளை உறைக் காய்ச்சல்தான் திடீரென்று கடுமையான காய்ச்சலாக வரும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலியை உண்டாக்கும். அடிக்கடி குமட்டலும், வாந்தியும் ஏற்படும். மூளை உறைகளை மட்டுமன்றி மூளைத் தண்டுவடத்தையும் இந்த நோய்க் கிருமிகள் பாதிக்கின்றன. இதனால், தண்டுவடச் சவ்வு வீங்கும். இதன் விளைவாக, கழுத்துத் தசைகள் கடுமையாக இறுகிக்கொள்ளும். கழுத்துப் பகுதி கடுமையாக வலிக்கும். கழுத்தை அசைக்கவோ, திருப்பவோ முடியாது. இதுவே இந்த நோயின் மிக முக்கிய அறிகுறி. இந்த நோயாளிகளுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு, மனநோயாளிபோல் நடந்துகொள்
வார்கள். இவர்கள் அரள்வதும், மிரள்வதும், உளறுவதுமாக இருப்பார்கள். பேச்சுக்கொடுத்தால், சம்பந்தமில்லாமல் பதில் கூறுவார்கள். 

நோய் பாதிப்பு:

இந்தக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்தால்கூட, நோயாளிக்குப் பேச்சு நின்றுபோவது, பார்வை பறிபோவது, காது கேட்காமல் போவது, பக்கவாதம் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் நிரந்தரமாகிவிடும். எனவே, இதை வரவிடாமல் தடுக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு இரண்டு தடுப்பூசிகள் நமக்கு உதவுகின்றன.

தடுப்பூசி ரகசியங்கள்! - 8

தடுப்பூசி வகை:

தனியாகப் போடப்படும் ‘ஹிப்’ தடுப்பூசி (Hib vaccine) ஒரு வகை. பென்டாவேலன்ட் எனும் ‘கூட்டுத் தடுப்பூசி’ மற்றொரு வகை. இந்த நோய்க் கிருமியின் மேலுறையில் இருக்கின்ற பி.ஆர்.பி (Polyribosyl-ribitol phosphate - PRP) எனும் சர்க்கரைப் பொருளைப் பிரித்து எடுத்து, ஒரு புரதப் பொருளுடன் இணைத்து, இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார் கள். இதனால் ‘இணைக் கூட்டுச் சர்க்கரைப் பொருள் தடுப்பூசி’ (Conjugate polysaccharide vaccine) என்று இதனைக் கூறுகிறார்கள்.

போட்டுக்கொள்ளும் முறை:

குழந்தைக்கு  ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதற்கு முதன்மைத் தடுப்பூசி என்று பெயர். அதன் பிறகு, ஒன்றரை வயது முடிந்தவுடன், ஊக்குவிப்பு (Booster) ஊசியாக ஒரு தவணை போட வேண்டும். இந்த வயதில் போட்டுக்கொள்ளாதவர்கள் பிறகு எந்த வயதில், எப்படிப் போட்டுக் கொள்வது என்பதை அட்டவணையில் தெரிந்து கொள்ளலாம்.


ஒருமுறை தரப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இதைக் குழந்தையின் வெளிப்பக்கத் தொடையின் முன் பகுதியில் தசை ஊசியாகப் போட வேண்டும். ஊசி போடப்பட்ட இடத்தில் சிறிது வலி, வீக்கம், தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல் வரலாம். இவை எல்லாமே மூன்று நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சலுக்கு ‘பாராசிட்டமால்’ திரவ மருந்து அல்லது மாத்திரை தரலாம். 

தடுப்பூசி ரகசியங்கள்! - 8


செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்:

தடுப்பூசி ரகசியங்கள்! - 8

குழந்தைக்கு எந்தத் தடுப்பூசியை எப்போது போடுவது என்று பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. சிலர் வேலைப் பளுவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மறந்துவிடுகின்றனர். இந்த மாதிரி பெற்றோர்களுக்கு உதவுவதற்காகவே, ‘இந்தியக் குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு’ (Indian Academy Of Paediatrics) நல்லதொரு ஏற்பாட்டை செய்துள்ளது.


பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.


இதற்கு என்ன செய்ய வேண்டும்?


Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.
உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.


போர் ஓயாது..