மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 9

நிமோனியா இனி நெருங்காது!டாக்டர் கு.கணேசன், படம்: ஆர்.எம்.முத்துராஜ்

பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் கொடிய நோய், நிமோனியா. 'ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே’ (Streptococus Pneumoniae) என்ற பாக்டீரியா, காற்றின் மூலமாகப் பரவி நுரையீரலைப் பாதிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. நிமோனியா நோயாளி இருமும்போதும், தும்மும்போதும், சளியைக் காறித் துப்பும்போதும் இந்தக் கிருமி, சளியுடன் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் நபருக்கும் தொற்றிக்கொள்ளும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கும், நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம்.

சரியாகத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான இடங்களிலும், அதிக நெரிசலான இடங்களிலும், மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், புகை அடுப்பில் இருந்து வரும் புகையைச் சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, குறிப்பாக வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை நிமோனியா எளிதில் தாக்கும். நிமோனியா நம்மை நெருங்கவிடாமல் தடுக்க 'நீமோகாக்கல்’ என்ற தடுப்பூசி உள்ளது.

தடுப்பூசி ரகசியங்கள்! - 9

அறிகுறிகள்:

இந்த நோய்த் தொற்று உள்ள குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிட மறுக்கும். காய்ச்சல், கடுமையான இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத்திணறல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம் பூத்துப்போதல் போன்ற அறிகுறிகளும் தென்படும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால், குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; சோர்வாகக் காணப்படும்.

நோய்ப் பாதிப்பு:

நிமோனியா நோய் இருப்பதைக் கவனிக்காமல்விட்டால், நோய்க் கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவும் ஆபத்து ஏற்படும்.  அதிலும் குறிப்பாக, முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை உறை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும்.

சிகிச்சை:

நிமோனியாவை அதன் தாக்கத்தின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்குச் சிகிச்சை பெற்றால் போதும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. இதன் தாக்குதலுக்கு உள்ளானவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, அவர்களின் சிரை ரத்தக்குழாய்களில் தகுந்த 'ஆன்டிபயாடிக்’ மருந்துகள் மற்றும் குளுக்கோஸை செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்சிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.

தடுப்பூசி வகை:

நிமோனியாவைப் பரப்பும் கிருமியின் செல் உறையிலிருந்து சர்க்கரைப் பொருளைப் பிரித்து எடுத்து, ஒரு புரதப் பொருளுடன் இணைத்து, 'நீமோகாக்கல் இணைப்பொருள் தடுப்பூசி’ (Pneumococcal Conjugate Vaccine) (சுருக்கமாக பி.வி.சி) என்ற தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். இதில் 'பி.சி.வி 10’, 'பி.சி.வி 13’ என்று இரண்டு வகை உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை, பச்சிளம் குழந்தைகள் முதல் 50 வயதைக் கடந்தவர்கள்வரை அனைவரும் போட்டுக்கொள்ளலாம்.

'நீமோகாக்கல் கூட்டுச் சர்க்கரைப் பொருள் தடுப்பூசி’ (Pneumococcal Polysaccharide Vaccine) (சுருக்கமாக பி.பி.எஸ்.வி23) என்பது மற்றொரு வகை. இந்தக் கிருமியின் செல் உறையிலிருந்து சர்க்கரைப் பொருளைப் பிரித்து, புரதப்பொருளுடன் இணைக்காமல், அப்படியே அதை ஒரு தடுப்பூசியாகத் தயாரிக்கிறார்கள்.

'பி.சி.வி’ தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை:

தடுப்பூசி ரகசியங்கள்! - 9

குழந்தைக்கு ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதங்கள் முடிந்தவுடன் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதற்கு முதன்மைத் தடுப்பூசி என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக ஒரு தவணை போட வேண்டும். ஒருமுறை தரப்படும் தடுப்பூசியின் அளவு அரை மில்லி. இந்தத் தடுப்பூசியை மற்ற தடுப்பூசிகளுடன் ஒரே நேரத்தில் போட்டுக்கொள்ளலாம். ஆனால், மருந்தைத் தனித்தனி சிரிஞ்சில் எடுத்து, தொடையில் தனித்தனி இடங்களில் தசைஊசியாகப் போட வேண்டும்.

குழந்தைக்கு 6 மாதங்களுக்குள் இது போடப்படவில்லை எனில், ஒரு மாத இடைவெளியில் 3 முதன்மைத் தடுப்பூசிகளும், 15 மாதங்கள் முடிந்ததும் ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். 6 மாதம் முதல் ஒரு வயதுக்குள் இது போடப்படவில்லை என்றால், அதற்குப் பிறகு ஒரு மாத இடைவெளியில் 2 முதன்மைத் தடுப்பூசிகளும், 2வது வயதில்  ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். ஒரு வயதிலிருந்து 2 வயதுக்குள்ளும் இது போடப்படவில்லை என்றால், ஒரு முதன்மைத் தடுப்பூசியும் ஓர் ஊக்குவிப்பு ஊசியும் போடப்பட வேண்டும். இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையில் இரண்டு மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இரண்டு வயது முதல் 5 வயதுக்குள் இந்தத் தடுப்பூசியைப் போடவில்லை என்றால், ஒருமுறை மட்டும் இதைப் போட்டுக்கொண்டால் போதும்.

'பி.பி.எஸ்.வி 23’ தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை:

இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இது போடப்பட வேண்டும். சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், உறுப்பு மாற்றறு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிற குழந்தைகள், பி.சி.வி13 தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதங்கள் கழித்து பி.பி.எஸ்.வி23 தடுப்பூசியை ஒருமுறையும் போட்டுக்கொள்ள வேண்டும். இதன் அளவு அரை மில்லி. இதை இடது புஜத்தில் தசை ஊசியாகப் போட வேண்டும்.

ஊசி போடப்பட்ட பகுதியில் லேசாக வலி, வீக்கம், தோல் சிவப்பது போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல் வரலாம். இவை எல்லாமே தானாகச் சரியாகிவிடும்.

யார் போட்டுக்கொள்ளக் கூடாது?

இந்தத் தடுப்பூசிகளுக்கும், டி.டி.ஏ.பி (DTap) ஊசிக்கும் அலர்ஜி உள்ளவர்கள் இவற்றைப் போட்டுக்கொள்ளக்கூடாது. டைபாய்டு, மலேரியா போன்ற கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், நோய் குணமான பிறகு போட்டுக்கொள்ளலாம். குழந்தைக்குத் தடுமம், சளி போன்ற சிறிய தொந்தரவுகள் இருந்தாலும், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.  

முதியோரின் உயிர் காக்கும் தடுப்பூசி!

நிமோனியா சில சமயம் வயதில் பெரியவர்களையும் தாக்கும். முதுமையில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகமிகக் குறைவாகவே இருப்பதே இதற்குக் காரணம். அந்த நேரத்தில் நிமோனியா அவர்களைத் தாக்கினால், உடனடியாக உயிரிழப்பும் நேரிடலாம். இதைத் தவிர்க்க, 50 வயதைக் கடந்தவர்கள் பி.பி.எஸ்.வி23 தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொள்வது நல்லது.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

நிமோனியாவை ஏற்படுத்துகின்ற நீமோகாக்கல் கிருமிக் குடும்பத்தில் 90 வகையான துணை இனங்கள் (Sero Types) உள்ளன. இவற்றில் பல, நிமோனியாவுக்குத் தரப்படும் மருந்துகளையே எதிர்த்து நிற்கும் குணமுள்ளவை என்பதால், உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது. ஆண்டுதோறும், உலகம் முழுவதும் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியாவால் உயிர் இழக்கின்றனர். இதில் 25 சதவீகிதம் பேர் இந்தியக் குழந்தைகள். ஆகவே, இந்த நோயை வரவிடாமல் தடுப்பதுதான் முக்கியம். இந்தத் தடுப்பூசியை முறைப்படி போட்டுக்கொள்பவர்களுக்கு நிமோனியா வருவது இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

'பி.சி.வி10’ தடுப்பூசி என்பது, நீமோகாக்கல் கிருமிகளில் மொத்தமுள்ள 90 துணை இனங்களில், 10 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கும் தடுப்பூசி. பி.சி.வி13 தடுப்பூசி, 13 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கிறது. பி.பி.எஸ்.வி23 தடுப்பூசி, 23 வகைகளால் ஏற்படும் நிமோனியாவைத் தடுக்கிறது. இந்தத் தடுப்பூசிகள் நவீனத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுவதால், இவற்றின் விலை அதிகம். எனவே அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைப் போடுவது இல்லை. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இவை போடப்படுகின்றன.

போர் ஓயாது...