மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தடுப்பூசி ரகசியங்கள்! - 10

விரட்டி அடிக்கலாம் ‘ரோட்டா’ வைரஸை!டாக்டர்.கு.கணேசன், படம்: ஜெ.முருகன்

குழந்தைகளின் ஆரோக்கி யத்துக்கு அதிகம் வேட்டு வைப் பது இரண்டே இரண்டு நோய் கள்தான். ஒன்று, நெஞ்சுச் சளி, மற்றொன்று, வயிற்றுப்போக்கு. பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா (protozoa) போன்ற கிருமிகள் குழந்தைகளைத் தாக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றில் 'ரோட்டா’ வைரஸால் ஏற்படும் வயிற்றுப் போக்குதான் மிகவும் கடுமையானது. இது சாதாரண வயிற்றுப்போக்கு போல் இல்லாமல், சிறுநீர் போல மலம் போகும். தொடர்ந்து வாந்தி. காய்ச்சல் ஏற்படும். இதனால், குழந்தை சீக்கிரத்திலேயே நீர்ச்சத்தை இழந்துவிடும். வயிற்றுப்போக்கு நிற்பதற்குச் சில நாட்கள் ஆகும். காலத்தோடு இதைக் கவனிக்கத் தவறினால், குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம், ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்குதான்.  

தடுப்பூசி ரகசியங்கள்! - 10

நோய் பரவும் வழி:

சுகாதாரமின்மையே ரோட்டா வைரஸை வீட்டுக்கு அழைத்து வருகிறது. அசுத்தமான சூழலில் வளரும் குழந்தைகளும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளும் இந்தக் கிருமிகளுக்கு எளிதான இலக்கு. சுகாதாரமற்ற உணவு, குடிநீர், பாதிக்கப்பட்ட நோயாளி உபயோகித்த பொருள்கள் ஆகியவை மூலமும் குழந்தைகளை ரோட்டா வைரஸ் தாக்குகிறது. மலம் கழித்துவிட்டு அல்லது மலம் கழித்த  குழந்தையை கழுவிவிட்டு கையை சோப் போட்டுக் கழுவாமல், குழந்தை யைக் கொஞ்சுவது ரோட்டா வைரஸைக் குஷிப்படுத்தி, குழந்தைகளைப் பாதிப்படையவைத்துவிடும்.

எப்படித் தவிர்ப்பது?

புட்டிப்பால் கொடுக்கும் முன் ஒவ்வொரு முறையும் ஃபீடிங் பாட்டில், நிப்பிள், பாட்டில் மூடி இந்த மூன்றையும் சுத்தமாகக் கழுவி, குறைந்தது ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். முறையாகக் கிருமி நீக்கம் செய்யாமல் குழந்தைக்குப் பால் கொடுப்பது, பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் பால் தருவது இவற்றைத் தவிர்க்கலாம். குழந்தையின் ரப்பர் நிப்பிள்கள் சுத்தமாக இருக்கிறதா என உறுதிசெய்வது அவசியம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். புட்டிப்பால் மற்றும் பசும்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், இந்த வைரஸோடு எதிர்த்துப் போராட முடியாது.

தடுப்பு மருந்துகள்

தடுப்பூசி ரகசியங்கள்! - 10

ரோட்டா வைரஸை அழிப்பதற்கான மருந்துகள், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக மூன்று வகை தடுப்புச் சொட்டு மருந்துகள் உள்ளன. இதில், 'ஆர்வி1’ (Rv1) என்று அழைக்கப்படும் ரோட்டாரிக்ஸ் (Rotarix) ஒரு வகை. ரோட்டா வைரஸ் கிருமிகளில் பல துணை இனங்கள் உண்டு. இதில் 'ஜி1பி1ஏ’ (G1P1A1) என்ற கிருமியை வீரியம் இழக்கச்செய்து, இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரிக்கி றார்கள். இதில் அமினோ அமிலம், டெக்ஸ்ட்ரான், சார்பிட்டால், சுக்ரோஸ் என்று பல துணைப்பொருட்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள். இது பவுடராக இருக்கும். இதற்கென்றே உள்ள கரைப்பான் விட்டுக் கரைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் இதைச் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்.

'ஆர்வி5’ (Rv5) என்று அழைக்கப்படும் ரோட்டாடெக் (RotaTeq) அடுத்த வகை. ரோட்டா வைரஸ் துணை இனங்களில் ஜி1, ஜி2, ஜி3, ஜி4, பி1ஏ என்று மொத்தம் ஐந்து வகைக் கிருமிகளை வீரியம் இழக்கச்செய்து இதைத் தயாரிக்கிறார்கள். இதில் சுக்ரோஸ், சோடியம் ஹைட்ராக் சைட், சோடியம் சிட்ரேட் ஆகியவற்றைத் துணைப் பொருட்களாகச் சேர்க்கின்றனர். இதை திரவ மருந்தாகவே தயாரிக்கிறார்கள். அதனால், அப்படியே இதை உபயோகிக்கலாம்.

புதிதாக 'இந்தியன் நியோநேட்டல் ரோட்டா வைரஸ் தடுப்புச் சொட்டு மருந்து’ (indian neonatal Rota Virus live Vaccine) என்ற சொட்டு மருந்தை ஒரு தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு 116 E (116 E) என்று இன்னொரு பெயரும் உண்டு. 'ஜி9பி’ (G9P) என்ற ரோட்டா வைரஸ் துணை இனத்தை வீரியம் இழக்கச்செய்து இதைத் தயாரிக்கிறார்கள்.

'ரோட்டாரிக்ஸ்’ எப்படிக் கொடுப்பது?

குழந்தைக்கு இரண்டரை மாதம் முடிந்ததும் முதல் தவணை மருந்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால், 15 வாரங்கள் முடிவதற்குள் முதல் தவணையைக் கொடுத்துவிட வேண்டும். இரண்டாம் தவணை மருந்தை மூன்றரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். தவறினால், குறைந்தது 8 மாதங்களுக்குள் இரண்டாம் தவணையைக் கொடுத்துவிட வேண்டும். இந்த இரு தவணைகளுக்கு இடையில் குறைந்தது ஒரு மாதம் இடைவெளி இருக்க வேண்டும். குழந்தைக்கு எட்டு மாதங்களுக்குப் பிறகு இதைக் கொடுக்கக் கூடாது. ஒருமுறை கொடுக்கப்படும் தடுப்பு மருந்தின் அளவு ஒரு மி.லி வாய் வழியாகக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்து இது.

'ரோட்டாடெக்’ கொடுக்கப்படும் முறை:

குழந்தைக்கு ஒன்றரை மாதம் முடிந்ததும் முதல் தவணை மருந்தைக் கொடுக்க வேண்டும். தவறினால் 15 வாரங்கள் முடிவதற்குள் கொடுத்துவிட வேண்டும். இரண்டாம் தவணையை இரண்டரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். இடையில் நான்கு வாரங்கள் இடைவெளி இருக்க வேண்டும். மூன்றாம் தவணை மருந்தை மூன்றரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால், குறைந்தது எட்டு மாதங்களுக்குள் மூன்றாம் தவணையைக் கொடுத்துவிட வேண்டும்.

பொதுவாக, இந்தத் தடுப்பு மருந்துகளை தனியாகவோ, மற்ற தடுப்பூசிகள் போடப்படும் போதும் கொடுக்கலாம். இந்தியன் நியோநேட்டல் ரோட்டா வைரஸ் தடுப்புச் சொட்டு மருந்தை 'ரோட்டா டெக்’ மருந்தைக் கொடுப்பது போலவே கொடுக்க வேண்டும். இவற்றில் எந்தச் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டாலும் ஏழு நாட்களுக்குள் மிதமான வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இதனால் குழந்தை சில மணி நேரத்துக்குத் தொடர்ந்து அழலாம். மிக அரிதாகச் சில குழந்தைகளுக்குக் 'குடல்சொருகு நோய்’ ஏற்படலாம்.

யாருக்குக் கொடுக்கக் கூடாது?

தடுப்பூசி ரகசியங்கள்! - 10

மருந்து 'அலர்ஜி’ உள்ள குழந்தைகளுக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கக் கூடாது. மிதமான வயிற்றுப்போக்கு இருக்குமானால், இதைக் கொடுக்கத் தயங்க வேண்டாம். எய்ட்ஸ் நோய், 'சிட்’ (SCID) நோய், புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகள், ஏற்கனவே 'குடல்சொருகு’ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்தை ரொம்ப காலம் சாப்பிட்டுவரும் குழந்தைகளுக்கும் இந்த மருந்தை டாக்டர்கள் தருவது இல்லை.

தடுப்பு மருந்தின் முக்கியத்துவம்

பொது சுகாதாரம் குறைவாக உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை ஒவ்வொன்றும் ஒருமுறையாவது ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டிருக்கும். இந்தியாவில், வருடத்துக்கு 20 லட்சம் குழந்தைகள் இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை பெறுகிறார்கள். ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகள் இந்த வயிற்றுப்போக்கினால் மட்டுமே உயிரிழக்கிறார்கள். சுத்தமும் சுகாதாரமும் நன்றாகப் பேணப்படும் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில்கூட இந்த வயிற்றுப்போக்கின் பாதிப்பு இருக்கிறது. அந்த நாடுகளில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தைக் கொடுக்கத் தொடங்கிய பிறகுதான், இந்த நோயின் தீவிரம் குறையத் தொடங்கியது. ஆக, இந்த நோயைத் தடுக்க வேண்டுமானால், சுத்தமும் சுகாதாரமும் மட்டும் போதாது; குழந்தைக்குத் தடுப்பு மருந்தும் கொடுக்க வேண்டியது அவசியம்.

வயிற்றுப்போக்கு - என்ன செய்வது?

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கும்போது, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சி, ஆறவைத்த சுத்தமான தண்ணீரை, அடிக்கடி சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலை, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன் மூலம் கொடுக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில், 20 கிராம் சர்க்கரையையும், 5 கிராம் உப்பையும் கலந்து, அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தரலாம். எலுமிச்சைச் சாறு, மோர், இளநீர், ஜவ்வரிசிக் கஞ்சித் தண்ணீர் போன்றவையும் உதவும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். அப்படியும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நிற்கவில்லை என்றால், டீஹைட்ரேட் பாதிப்பைத் தடுக்க, மருத்துவமனையில் உடனே அனுமதிக்க வேண்டும்.

மருந்தும் இலவசம்!

ரோட்டாரிக்ஸ், ரோட்டா டெக் என்ற இரண்டு சொட்டு மருந்துகளுமே அதிக விலை. ஒரு டோஸின் விலை 1,000 ரூபாயைத் தாண்டும். ஆனால், இந்தியன் நியோநேட்டல் சொட்டு மருந்தின் ஒரு டோஸ் விலை 80 ரூபாய்க்குள்தான் அடங்கும். எனவே, இந்தச் சொட்டு மருந்தைக் கூடிய சீக்கிரத்தில் நம் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்க்க இருக்கிறார்கள். அதன் பிறகு அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவே கிடைக்கும்.

போர் ஓயாது