Published:Updated:

இது ஒரு லாக்டெளன் காலம்!

இது ஒரு லாக்டெளன் காலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இது ஒரு லாக்டெளன் காலம்!

ஒரு யூடியூப் சேனல் தொடங்குறதுக்கு என்ன வேணும்னு இப்ப யார்கிட்டயாவது கேட்டுப்பாருங்களேன்...

இந்திய முழுப்பரீட்சை வரலாற்றிலேயே முதன்முறையாக மொத்தக்குடும்பத்துக்கும் ஒன்றரை மாசத்துக்கும்மேல முழுப்பரீட்சை விடுமுறை விட்டிருக்காங்க! என்னதான் விடுமுறைன்னாலும், குயிலைப்புடிச்சு கூண்டிலடைச்சு பாடச்சொல்லுற நிலைதான். லாட்டரியில லட்ச ரூபாய் விழுந்ததும், இப்ப நான் எதையாவது வாங்கியாகணுமேன்னு கவுண்டர் பரபரக்குற மாதிரிதான், அம்புட்டு மக்களும் எதையாவது பரபரப்பா பண்ணிக்கிட்டே இருக்காங்க... அப்டி என்னதான் பண்றாங்கன்னு ஒரு எட்டு பார்க்கலாம் வாங்க!

ஃபேஸ்புக்ல தீவிரமா நாளொரு அரசியல் மோதலும், பொழுதொரு டிரெண்டிங்குமாகப் போயிட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் ‘நமக்கு அரசியல் வாடையே ஆகாது’ன்னு சில கோஷ்டிகள் வேற வேலைகளில் மும்முரமா இறங்கிட்டு இருக்காங்க. என்ன மொக்கப் படம் போட்டாலும் பார்த்தே ஆகணும்கற கட்டாயத்தால டிவியிலிருந்து தப்பிச்சு, அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் கால்ல விழுந்து சரண்டர் ஆகிப் படம் பார்த்துட்டு, அதே வேகத்துல ஃபேஸ்புக்ல வந்து பக்கம்பக்கமா விமர்சனம் எழுதிக் கொன்னுக்கிட்டு இருக்காங்க! முன்னல்லாம் மலையாளப்படம் பார்க்கப்போறேன்னு சொன்னாலே ‘அடி செருப்பால’ன்னு திட்டுவாங்க. அது ஒரு ஷகீயே... காலம். இப்பல்லாம் மலையாளப்படத்தைப் பார்த்துட்டு விமர்சனம் எழுதினால்தான், அதுவும் தமிழ்ப் படங்களை நாலு திட்டு திட்டி விமர்சனம் எழுதினால்தான் அவர் ஒரு அறிவுஜீவி, இலக்கியவாதி, பன்மொழி வல்லுநர், மாற்றுசினிமா ரசிகர் ப்ளா... ப்ளா... இதுல சில பெண்கள் விமர்சனம் எழுதுற சாக்குல துல்கர் சல்மானுக்கும், பகத் பாசிலுக்கும் ஹார்ட்டீன் விட்டு, பசங்க மனசுல புகைச்சலைக் கிளப்புறாங்க. நம்ம தனுஷுக்கும், மக்கள் செல்வனுக்கும் என்ன குறைச்சலாம்?!

அடுத்ததா இந்த சேலஞ்ச் கோஷ்டி, சேலை சேலஞ்ச், நைட்டி சேலஞ்ச், வேட்டி சேலஞ்செல்லாம் நாலஞ்சு ரவுண்டுகட்டி முடிச்சுட்டு, காலத்துக்கேற்ப 10 நாள் தாடி சேலஞ்ச், பரட்டைத்தலை சேலஞ்ச், நோ மேக்கப் சேலஞ்ச்னு தீவிரமா களமாடிக்கிட்டு இருக்காங்க! இதுல சில அப்பாஸ், சலூன் கடை திறக்கலைன்னா என்ன, நாங்களும் சீப்பு வச்சிருக்கோம், நாங்களும் கத்தரிக்கோல் வச்சிருக்கோம், எங்களுக்கும் முடிவெட்டத் தெரியும்னு சொல்லிட்டு அவங்களோட பையனையே டெஸ்டிங் எலியா மாத்தி, எலி கரும்பிவச்ச மாதிரியே எத்தலும்கொத்தலுமா வெட்டுன போட்டோ போட்டு பெருமை பீத்துறதும் நடந்துச்சு... சிலர், நிலைமை கத்தரி மீறிப்போனதால, பசங்களுக்கு மொத்தமா மொட்டையடிச்சுவிட்டதையும் பார்க்க முடிஞ்சது! அந்த அப்பாவிக் குழந்தைகள்மீது வன்முறை நிகழ்த்தியதுக்காக கொரோனா ஊரடங்கு முடியிற வரைக்கும் அந்த அப்பாஸ்களைக் குடும்பத்தை விட்டே தனிமைப்படுத்தினாலும் தப்பில்ல.

இது ஒரு லாக்டெளன் காலம்!

அப்டியே வாட்ஸப் பக்கம் வந்தால், வாழ்க்கையே புதிராகிப்போனதே புரியாமல் புதிர்களா மாத்திமாத்தி அனுப்பி விளையாடிக் கிட்டு இருக்காங்க. எல்லாமே அதரப்பழசான ஸ்மைலியை வச்சு படப்பெயர், ஊர்ப்பெயர் கண்டுபிடிக்கிறதும், அந்தப் பையில மொத்தம் எத்தனை தேங்காய் இருந்திருக்கும்கற மாதிரியான புதிர்கள்தான். இதுல ஒரு குரூப்ல தேங்காய் எண்ணிக்கையைக் கேட்கற புதிரையே அடுத்த குரூப்ல மாங்காய் எண்ணிக்கையைக் கேட்கற மாதிரி மாத்தி அனுப்புற புத்திசாலிகளும் உண்டு. ஒரு குரூப்ல ஒருத்தர் ஒரு புதிரை அனுப்பினால் எல்லாருமா அதைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் இருக்குற அம்புட்டு பேரும் ஆளுக்கு ஒரு புதிரை அனுப்பினால் வாட்ஸப் ஓனரா வந்து புதிருக்கு விடை கண்டுபிடிப்பாரு?!

புதிரெல்லாம் வேண்டாம்ப்பா, நான் வீடியோ பார்க்கப்போறேன்னு வீடியோவை ஓப்பன் பண்ணினா, கொரோனா விழிப்புணர்வுங்கற பேர்ல, நண்டு சிண்டுல தொடங்கி, தாத்தா, பாட்டிவரைக்கும் “கையக்கழுவுங்க” “கையக்கழுவுங்க”ன்னு ஒரே அட்வைஸ் மழைதான். அடேய், நாங்களே தண்ணிக்கஷ்டத்துல விரலைச் சூப்பிட்டு பேப்பர்ல தொடச்சிட்டுப் போறவிங்க, இப்டி ஆளாளுக்குக் கையக்கழுவச்சொன்னால், ஹவுஸ் ஓனர் எங்களைக் கையக்கழுவி விட்டுடுவாரு! அதுல ஒரு வீடியோல ஒரு சுட்டிப்பொண்ணு, செம முகபாவனையோடு கொரோனாவுக்கு அட்வைஸ் பண்ணத்தொடங்கும்... அப்டியே அசந்துபோயி பார்க்கத் தொடங்கினால், போகப்போக, “உங்களுக்கு அறிவே கிடையாதா, சூடு சொரணையே கிடையாதா?”ன்னு நம்மளையே பார்த்து, கேவலமா திட்டத் தொடங்குது. நல்லாத்தானடா போயிக்கிட்டு இருந்துச்சு! குழந்தைய வளர்க்கச்சொன்னால் கோவை சரளாவை வளர்த்து வச்சிருக்கீங்களேடா!

ஒரு யூடியூப் சேனல் தொடங்குறதுக்கு என்ன வேணும்னு இப்ப யார்கிட்டயாவது கேட்டுப்பாருங்களேன்... ஒரு அடுப்பு, ஒரு வடைச்சட்டி, ஒரு ஆண்ட்ராய்டு போன் போதும்னு பளிச்சுன்னு சொல்வாங்க. இந்த லாக்டௌன் பீரியட்ல சமையல் குறிப்பு சொல்றதுக்கு மட்டுமே ஒரு லட்சத்துப் பதினெட்டாயிரத்து நானூற்று நாப்பத்தாறு யூடியூப் சேனல் புதுசா வந்திருக்குன்னு புள்ளி விவரம் சொல்லுது. காலைல காபி போடுறதைக்கூட ஆண்ட்ராய்டு போன்ல வீடியோ எடுக்க மிஸ் பண்றதில்ல. 13ம் நம்பர் வீடுன்னா எல்லாருக்கும் பயம் வர்ற மாதிரி, எல்லா சமையல் குறிப்பையும் வீடியோ பண்ணி விடுறவங்க, உப்புமாவுக்கு மட்டும் வீடியோ பண்ணவே பண்ணல.

டிக்டாக், ஸ்மூல், மியூசிக்கலில ஆடிப்பாடிப் பொழுதுபோக்குனவங்களுக்கும் சமூகத்துக்கு சேவை செய்யணும்னு தோணுமில்ல? மழைக்கு மழைக்கவிதை எழுதினவங்க, கொரோனாவுக்குக் கொரோனாக் கவிதை எழுதிக்கிட்டு இருந்த நேரத்துல, நாங்க கொரோனாப் பாட்டே பாடுவோம்னு களமிறங்கிட்டாங்க! அதுல சில பேர் ரொம்பப் பிரமாதமா பட்டையக் கிளப்பினாங்க... இன்னும் சிலர், பால்கனியில நின்னு சாப்பாட்டுத்தட்டுல தட்டிக்கிட்டே “கோ கோ கொரோனா”ன்னு கொரோனாவை விரட்டின மாதிரி, கொடூரமா பாட்டுப்பாடி கொரோனாவையே மிரள வச்சாங்க.

வொர்க் ப்ரம் ஹோம்ல ஆபீஸ் வேலை பண்றதால பலருக்கும் பழக்கப்பட்ட ஜூம் வீடியோ ஆப்ல நம்ம சொந்தக்கார அங்காளி பங்காளி எல்லாரும் பேசலாமேன்னு யோசிச்சு, வீடியோ கான்பரன்ஸ்ல பேசத்தொடங்கிட்டாங்க. முதல் நாளில் ஆர்வத்தோடு நலம் விசாரித்ததோடு சரி, அதுக்கப்புறம், கிரிக்கெட் ஸ்கோர் கேக்குறாப்ல, உங்க ஊர்ல எத்தனை பேருக்கு கொரோனா வந்திருக்குன்னு கேட்டுட்டு, நிலவேம்புக் கசாயம் குடி, திப்பிலிய அரைச்சுக்குடி, துளசி, மஞ்சளைக் கொதிக்க வச்சுக்குடின்னு மருத்துவக்குறிப்பு சொல்லத்தொடங்கிடுவாங்க!

இது ஒரு லாக்டெளன் காலம்!

இதுல நெட் ஸ்லோவா இருந்தால், “நான் சரியாத்தான பேசறேன்?” சங்கிலி முருகன் மாதிரி, “நாங்க பேசறது கேக்குதா?” “நாங்க பேசுறது கேக்குதா?”ன்னே கேட்டுக்கிட்டு இருப்பாங்க. ஆபீஸ் வீடியோ கான்பரன்ஸ்ல ஒரு ஒழுங்கு இருக்கும். ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பேசுவாங்க... ஆனால் சொந்தத்துக்குள்ள வீடியோ சாட்ல ஆளாளுக்குப் பேசுவாங்க... இதுல யாரையாவது கண்டுக்காம விட்டுட்டா சட்டுன்னு கோவிச்சுக்கிட்டு வெளிநடப்பு பண்ணிடுவாங்க. அதேபோல எப்போ வீடியோ சாட்ட கட் பண்றதுங்கறதுல குழப்பம் இருக்கும். திடீர்னு கட் பண்ணிட்டா மாமா கோவிச் சுப்பாரோ, சித்தப்பா கோவிச்சுப்பாரோன்னு பயந்துகிட்டே வீடியோ சாட்டை கன்டினியூ பண்ணிட்டு இருப்பாங்க.

முழுப்பரீட்சை விடுமுறைன்னா, கராத்தே கிளாஸ், நீச்சல் கிளாஸ், பாட்டு கிளாஸ்னு மணிக்கு ஒரு கிளாஸுக்கு விரட்டி விட்டுக்கிட்டு இருந்தாங்க... இப்ப என்னடான்னா, பல்லாங்குழி விளையாடுவது எப்படி, சீட்டுக்கட்டை எப்படிப் பிடிக்கணும், பரமபதக்கட்டத்தில் இருக்குற உருவமெல்லாம் யாருன்னு பேரன் பேத்திகளுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க. செல்போன்ல இருக்குற விளையாட்டை இப்படியும் விளையாடலாமான்னு பல்லாங்குழியை ஆச்சர்யமா பார்க்கும் 2K கிட்ஸ் தலைமுறை! அடேய், இப்டி விளையாடுனதத்தான்டா செல்போன்ல கொண்டுவந்துட்டாய்ங்கன்னு வரலாற்று உண்மைகளைவேற எடுத்துச் சொல்லணும். ஆண்ட்ராய்டு போனும், ஆப்புமா விளையாடிட்டிருந்த விர்ச்சுவல் தலைமுறை, இப்பத்தான் ஒரிஜினல் உலகத்துக்குள்ள காலடி எடுத்து வச்சாங்க, அதுக்குள்ள எஜுகேஷன் ஆப் மூலமா ஆப்பு வச்சு திரும்பவும் செல்போனுக்குள்ளயே தள்ளிட்டாங்க... இனி எல்லாமும் ஆப்பு மயமே!