
ஹெல்த்
இது நிஜம்... அமெரிக்காவிலிருக்கும் காப்பீட்டு நிறுவனம் ஒன்று, தன் ஊழியர்களுக்கு தூங்குவதற்கு ஊதியம் கொடுக்கிறது. ஏட்னா (Aetna) என்ற அந்த நிறுவனம், தன் ஊழியர்களை `தினசரி 7 மணி நேரம் தூங்க வேண்டும்’ என்று அன்புக்கட்டளை இட்டிருக்கிறது. அப்படித் தூங்குபவர்களுக்கு தினமும் ஒரு டாலர் என்ற கணக்கில், வருடத்துக்கு 300 அமெரிக்க டாலரை அவர்களின் கணக்குகளில் வரவுவைக்கிறது. கூகுள், ஆப்பிள் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள், பணி நேரத்தில் ஊழியர்கள் ஓய்வெடுக்க விரும்பினால், அதை வரவேற்கின்றன. அதேபோல், கூகுள் அலுவலகங்களில் தூங்குவதற்கென ஓய்வறைகளும், சத்தம் அதிகமில்லாத பகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

மேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் (Cambridge University), சோப்புகள், ஷாம்பூகள் முதல் குழந்தைகளுக்கான பொருள்கள்வரை உற்பத்தி செய்யும் யூனிலிவர் நிறுவனம் (Uniliver), கேமரா தயாரிப்பில் பல்வேறு நாடுகளில் முன்னணியிலிருக்கும் ஒலிம்பஸ் (Olymbus), கணக்குவழக்குகளைக் கையாளும் அக்கவுன்டன்ட் நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (PricewaterhouseCoopers), முன்னணி மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஷைர் பார்மாசூட்டிகல்ஸ் (Shire Pharmaceuticals) என இந்த முக்கிய நிறுவனங்கள் இடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை, `எப்படித் தூங்க வேண்டும்?’ என்பதற்காக நடத்தப்படும் வகுப்புகளுக்கு அனுப்புகின்றன. அந்த அளவுக்குத் தூக்கத்தின் முக்கியத்துவத்தை இந்த நிறுவனங்கள் உணர்ந்துவைத்திருக்கின்றன.

`தூக்கம் என்பது இயற்கைதானே... இரவு நேரமானால், நாமாகவே தூங்கிவிடுகிறோம். அதைப் பற்றி இப்போது நாம் பேச வேண்டிய அவசியமென்ன?’ என்று நினைக்கிறீர்களா... உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை.
டிஜிட்டல் யுகம் நம்மைப் பல்வேறு வகைகளில் மேம்படுத்தியிருக்கிறது என்றாலும், அது மனிதர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்தும் நாம் பேசியாக வேண்டும். கேட்ஜெட்கள், சமூக வலைதளங்கள் என டிஜிட்டல் யுகத்தின் முக்கிய அம்சங்களில் மூழ்கி, தங்கள் தூக்கத்தைத் தொலைத்த நெட்டிசன்கள் அநேகம்பேரை நீங்கள் பார்க்கலாம். தினசரி காலை எழுந்தவுடன் நம்மில் பெரும்பாலானோர் மொபலை எடுத்து சமூக வலைதளங்கள் முதல் அன்றாட நிகழ்வுகள்வரை அப்டேட் செய்துவிட்டே அடுத்த வேலையைப் பார்க்கச் செல்வோம். வாட்ஸ்அப் தொடங்கி ஃபேஸ்புக்வரை நோட்டிஃபிகேஷன்கள்சூழ் உலகில், அவை இல்லாமல் ஒரு நாளை... இல்லையில்லை... ஒருமணி நேரத்தைக்கூட நம்மால் கடக்க முடியாது.
போதுமான அளவு தூக்கம் இல்லாதது நமது சிந்திக்கும்திறனை, பணித்திறனைக் கடுமையாக பாதிக்கும் என்று ஏகப்பட்ட ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. அதனாலேயே தம் ஊழியர்களுக்குப் போதுமான தூக்கம் கிடைக்க வேண்டும் என்று நிறுவனங்கள் கவலைப்படுகின்றன. `நல்ல தூக்கம் கொடுக்கும் புத்துணர்ச்சிக்கு மாற்று இல்லை’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். சரியான தூக்கம் இல்லாததால், அமெரிக்காவில் ஊழியர் ஒருவர் ஆண்டுதோறும் 11.3 வேலை நாள்களின் பணித்திறனை இழப்பதாகச் சொல்கிறது அந்நாட்டு அரசின் சுகாதார அமைப்பு.