கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கொரோனா: என்னதான் ஆச்சு சென்னைக்கு?

கொரோனா வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா வைரஸ்

நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாததுதான் இதற்கெல்லாம் காரணம்.

தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய அதிகாரங்கள் குவிந்துகிடக்கும் தலைநகர் சென்னை, கொரோனா வைரஸ் தாக்குதலில் தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு அறிக்கை கொடுப்பதில் இருந்த ஆர்வம் கொரோனாவைத் தடுப்பதில் இருந்ததா என்றால் கேள்விக்குறிதான். தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொரோனாவிலிருந்து மீள, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்புக் கணக்கு விண்ணை எட்ட என்ன காரணம்?

சென்னையில் சுமார் ஒரு கோடிப்பேர் வசிக்கிறார்கள். 200 வார்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் சுமார் 30 - 40 வார்டுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. வடசென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர்; மத்திய சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. ராயபுரம்தான் முதலிடத்தில் இருந்தது. பிறகு ராயபுரத்தைத் திரு.வி.க நகர் பின்னுக்குத் தள்ளியது. தற்போது கோடம்பாக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அடையாறு உள்ளிட்ட தென்சென்னைப் பகுதிகளிலும் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது.

கொரோனா: என்னதான் ஆச்சு சென்னைக்கு?

திரையரங்குகள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடுகிற இடங்களை மூடுவதற்கு மார்ச் 17-ம் தேதியே தமிழக அரசு உத்தரவிட்டது. வரவேற்கத்தக்க நடவடிக்கை. அதே நேரம், தினமும் லட்சக்கணக்கானோர் வந்துசெல்லும் கோயம்பேடு காய்கறிச் சந்தையைக் கண்டுகொள்ளாமல் விட்டார்கள். அதன் விளைவு, ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்று என்கிற பெருமையைக் கொண்ட கோயம்பேடு சந்தை, கொரோனா வைரஸின் ஊற்றுக்கண் என்று சொல்லப்படும் சீனாவின் வூஹானுடன் ஒப்பிடும் அளவுக்கு நிலைமை மோசமாயிருக்கிறது. டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்தவர்கள் என்று சொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கைதான் இன்றைக்கு அதிகம். சென்னை ஒரு பெருநகரம் என்பதால், அதிக மக்கள்தொகையும் அடர்த்தியான வசிப்பிடங்களும்தான் கொரோனா அதிகமாகப் பரவியதற்கு காரணங்கள் என்கிற வாதம் சரியானதுதான். அதே நேரம், ஆட்சியாளர்களின் அலங்கோலமான செயல்பாடுகளும் தலைநகரின் தற்போதைய நிலைக்கு முக்கியக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் உட்படப் பல தரப்பினரும் விமர்சிக்கிறார்கள்.

“அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை. திறமையான அதிகாரிகள் இருந்தும், அவர்களுக்குப் போதுமான நிதியும் அதிகாரமும் கொடுக்கப்படவில்லை. இதுதான் சென்னையில் கொரோனா பரவியதற்கு முக்கியக் காரணம்” என்று குற்றம் சாட்டுகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ். மேலும் பல காரணங்களை நம்மிடம் அவர் அடுக்கினார்.

“ ‘டெஸ்டிங் செய்கிறோம், டெஸ்டிங் செய்கிறோம்’ என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லிக்கொண்டிருந்தாரே தவிர, அதிகமான எண்ணிக்கையில் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை. ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கார்டியாலஜி பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார். அவருக்குக் கொரோனாத் தொற்று இருந்தது, மரணத்துக்குப் பிறகுதான் தெரியவந்தது. உடனே, அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட் டோருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவர்களுக்கும் கொரோனாத் தொற்று இருப்பது உறுதியானது. திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தாயும் சேயும் இறந்துவிட்டார்கள். அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று இருந்தது, இறந்த பிறகுதான் கண்டறியப்பட்டது. உடனே, அவருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் உட்பட அத்தனை பேருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில், பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதியானது.நடந்தவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாததுதான் இதற்கெல்லாம் காரணம்.

கேரளாவில் உள்ளூர் அளவில் அனைத்துக் கட்சிக் குழுக்கள் அமைத்து, மக்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் பூர்த்திசெய்யப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு அரசே இடங்களை ஏற்பாடு செய்கிறது. இங்கு அதுபோன்ற ஏற்பாடுகள் இல்லை. சென்னை போன்ற மக்கள் அடர்த்தியாக இருக்கக்கூடிய இடங்களில் கொரோனா அதிக அளவில் பாதித்ததற்கு இதுதான் காரணம்” என்றார்.

கனகராஜ், சாந்தி, மா.சுப்பிரமணியன்
கனகராஜ், சாந்தி, மா.சுப்பிரமணியன்

“இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பவர்களில் பாதிப் பேர் மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், சென்னை போன்ற ஐந்தாறு பெருநகரங்களில் இருக்கிறார்கள். சர்வதேச விமானநிலையங்கள், அதிகமான ரயில் போக்குவரத்து, மக்கள்தொகை அடர்த்தி போன்றவையே இதற்குக் காரணம்” என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சாந்தி.

“சென்னையில் ஊரடங்கு காலத்திலும் ‘விழித்திரு தனித்திரு’ என்பது இல்லாமல், லட்சக்கணக்கானோர் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர், அச்சு ஊடகத்தினர், காட்சி ஊடகத்தினர், பால்காரர், மளிகைக்கடைக்காரர், காய்கறிக்கடைக்காரர் என முன்களப் பணியாளர் கள் ஏராளமானோர் தினந்தோறும் வெளியே பணியாற்றினார்கள். முன்களப் பணியாளர்களான இவர்களில் பலருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு முன்பே பரிசோதனை செய்யாததால், இவர்கள் மூலமாகப் பலருக்கு வைரஸ் பரவியிருக்கிறது.

கோயம்பேடு காய்கறிச் சந்தை விஷயத்தை முதலிலேயே தவிர்த்திருக்க முடியும். போதுமான சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், கோயம்பேட்டில் கடைகளை வகைப்படுத்தி, எண்ணிக்கையைக் குறைத்திருக்க வேண்டும். அதற்கென ஒரு குழுவை அமைத்து வேலை செய்துகொண்டே இருந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் அரசு செய்யவில்லை. பெயரளவில் சில ஆலோசனைக் கூட்டங்களைப் போட்டார்கள். அவ்வளவுதான்.

அங்கு பணியாற்றும் தொழிலாளர்களையும் வியாபாரிகளையும் மொபைல் யூனிட்களைக் கொண்டுசென்று பரிசோதனை செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. அந்தத் தொழிலாளர்கள் சரக்கு வாகனங்களில் ஏறி சொந்த ஊர்களுக்குப் போய்விட்டார்கள். அதனால், கொரோனாத் தாக்கம் பெரிதாக இல்லாமல் இருந்த மாவட்டங்களில் இப்போது கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார் மருத்துவர் சாந்தி.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு 11 கேள்விகளை எழுப்பிக் கடிதம் ஒன்றை எழுதினார், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன். அவரிடம் பேசியபோது, “கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்குக் கலைஞர் அரங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்தோம். அதுபோல, கமல்ஹாசன் உட்படப் பலரும் இடங்களை அளிக்க முன்வந்தனர். அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாமல், கொரோனா நோயாளிகளுக்கு ஒரு ‘கிட்‘ கொடுத்து, வீட்டுக்கு அனுப்புகிறார்கள். இது மிகப்பெரிய கொடுமை. சென்னையில் பெரும்பாலும் சிறிய வீடுகளில் கூட்டுக்குடும்பமாக மக்கள் வசிக்கிறார்கள். ஒரே கழிப்பறையைப் பலர் பயன்படுத்தும் நிலை இருக்கிறது. கழிப்பறை கள் மூலமாகவே பலருக்கும் கொரோனா பரவியது என்பது தெரிந்தும், அரசு இப்படி நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது.

கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளச் சொல்லும் முடிவை அரசு உடனடியாக வாபஸ்பெற வேண்டும். பள்ளிக்கூடக் கட்டடங் களில் அவர்களைத் தங்கவைக்க வேண்டும். அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தால், லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற தன்னார்வ அமைப்புகளின் உணவுபோன்ற ஏற்பாடுகளை ஒப்படைக்கலாம். அவர்கள் உதவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்” என்றார் மா.சுப்பிரமணியன்.

சுனாமி, பெருமழை வெள்ளம் என, பேரிடர் களில் சளைக்காத சென்னை கொரோனா அபாயத்தையும் எதிர்கொண்டு மீளும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் சென்னைவாசிகள்.

அலட்சியம் வேண்டாம்!

சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸிடம் பேசினோம்.

கொரோனா: என்னதான் ஆச்சு சென்னைக்கு?

“சென்னையின் மக்கள்தொகை, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கு. மேலும், குடிசைப்பகுதிகளும், குறுகிய சந்துகளும், சிறிய வீடுகளும், நெருக்கமான வீடுகளும், பொதுக்கழிப்பிடங்களும், சந்தைபோன்ற மக்கள் அதிகம் கூடுகிற பகுதிகளும் சென்னையில் அதிகமாக இருக்கின்றன. இத்தகைய சூழலில்தான், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு முழு மூச்சுடன் மேற்கொண்டுவருகிறது. இறப்பு விகிதத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ளோம் என்பது முக்கியமான விஷயம். கடந்த இரண்டு வாரங்களாக பரிசோதனையைத் தீவிரப்படுத்திய காரணத்தால், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி, சென்னையில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள், பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலரும் களத்தில் இறங்கித் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார்கள். அதன் மூலம், மேலும் வைரஸ் பரவாமல் தடுக்கப்பட்டுவருகிறது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் இரண்டு வார்டுகளில் மட்டும்தான் அதிகமானவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 80 சதவிகிதம் பேருக்கு மேல் நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லை.

ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர், வணிகர் சங்கத்தினர், பொது அமைப்புகள் என அனைவரிடமும் கலந்தாலோசித்துப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தன்னார்வலர்களைப் பயன்படுத்துகிறோம்.பெரும்பாலான மக்கள் ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். ஆனால், சிலர் தமக்கு எதுவும் வராது என்று அலட்சியமாக இருக்கும் போக்கைப் பல இடங்களிலும் பார்த்துவருகிறோம். அதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. அனைவரும் முகக்கவசம் அணிவதையும், பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.