சென்னை, ஆவடியைச் சேர்ந்த 25 வயதான பாடிபில்டர் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஒருவர், உடற்கட்டமைப்பு போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சை பலனின்றி சமீபத்தில் இறந்தார். உடற்கட்டமைப்பு போட்டிக்காக ஸ்டெராய்டுகள் மற்றும் சப்ளிமென்ட்ஸ் அதிகளவில் எடுத்துக் கொண்டதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக, அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஸ்டெராய்டு என்றால் என்ன? எப்போது அது மருந்து, எப்போது ஆபத்து? விரிவான தகவல்களைக் கூறுகிறார் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, மருந்தியல் துறை இணை பேராசிரியர் மருத்துவர் மீனாட்சி.
``ஸ்டெரொய்ட்ஸை என்பது உடலில் இயற்கையாக சுரக்கும் ஹார்மோன், மற்றும் அந்த ஹார்மோன்கள் போலச் செயல்பட உருவாக்கப்படும் மருந்துகள் என இரண்டையும் குறிக்கும். ஆட்டோ இம்யூன் நோய் (Auto immune disease), ஆஸ்துமா, ருமட்டாய்டு, லூப்பர்ஸ் போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய ஸ்டெராய்ட்ஸ் மருந்துகள் ஒரு வகை. மற்றொரு வகை ஆண்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் போன்ற, உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்களைத் தூண்டக்கூடிய, அதன் மூலம் ஆண்களின் தசை வலிமை, விந்து எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அதிகரிக்கக்கூடிய டிரக்ஸ்.

பொதுவாக Auto immune disease-க்காக உள்ளிட்ட நோய் சிகிச்சைக்காக நாம் பயன்படுத்தும் ஸ்டெராய்டுகள் மருத்துவர்களின் மேற்பார்வையில், அவர்களின் பரிந்துரையின் பெயரில் எடுத்துக்கொள்ளக் கூடிய மருந்துகள். இவற்றை பரிந்துரை செய்யப்பட்ட அளவை விட அதிகமாகப் பயன்படுத்தும்போது, அதன் விளைவாக ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் எனப் பல பிரச்னைகள் உடலில் ஏற்பட ஆரம்பிக்கும். டோஸின் அளவை அதிகரிக்க அதிகரிக்க, பிரச்னைகளும் அதிகரிக்கும். இன்னொரு பக்கம், ஸ்டெராய்டுகளை சிகிச்சைக்காகத் தொடர்ந்து எடுத்துவிட்டு திடீரென எடுக்காமல் விட்டாலும் உடலில் பிரச்னைகள் ஏற்படும். எனவே, மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே முடிவெடுக்க வேண்டும்.
ஸ்டெராய்டுகளை மருத்துவரின் பரிந்துரையின்படி, அவர் குறிப்பிட்ட அளவில் எடுக்கும்பட்சத்தில், இதனால் பெரிதளவில் பிரச்னை ஏற்படாது. அப்படியே ஏதேனும் ஏற்பட்டாலும் அதனை சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியும். இந்த ஸ்டெராய்டுகள் யாரையும் அடிமையாக்காது.
ஆனால், டெஸ்டோஸ்டிரோன் ஸ்டெராய்டுகள் பயன்படுத்தும் நபரை அடிமையாக்கக் கூடியவை. இந்த ஸ்டெராய்டுகள் எடுக்கும்போது வெளிப்புறத் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், தசை வலுவாக உதவும். அதனால் உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், உடல்தோற்றம் பற்றிய அதீத சிந்தனை இருப்பவர்கள் எனச் சிலர் இதை தங்களுடைய பர்ஃபார்மன்ஸை அதிகப்படுத்துவதற்காகப் பயன்படுத்துகின்றனர். இது அடிக்ஷன் உள்ளிட்ட ஆபத்தைக் கொண்டது.

இயல்பாகவே டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு, மருத்துவர் இந்த மருந்தினை பரிந்துரை செய்வர். ஆனால் இப்படி மருத்துவர் பரிந்துரை இல்லாமல் ஆன்லைன் அல்லது வேறு விதத்தில் இதனை வாங்கிப் பயன்படுத்துவதுதான் பெரும் பிரச்னைகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இந்த மாதிரியான ஸ்டெராய்டுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் மனநிலையில் கவனம் சிதறி, எப்போதும் அந்த மருந்துகளைப் பற்றிய சிந்தனையும், அதனை வாங்குவது பற்றிய எண்ணமுமே மேலோங்கி இருக்கும். அதனை வாங்குவது, வைத்திருப்பது தொடர்பாக யோசிப்பதும், அதற்காகப் பணம் தயார் செய்வதும் என மனநிலையில் பிரச்னை ஏற்படும்.
கூடவே வன்முறை, மற்றவர்களை காயப்படுத்துதல் போன்ற ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. உடல்நிலையைப் பொறுத்தவரை அவர்களுடைய ஹார்மோன் சமச்சீரின்மையால், எப்போதும் சோர்வு, சரியாகப் சாப்பிட முடியாமல் இருப்பது, கல்லீரல், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளது. சில சமயம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் கூட உள்ளது. பாலின வேறுபாடு இன்றி இந்த ஸ்டெராய்டுகள் எடுக்கும் பழக்கம் இப்போது அதிகரித்து உள்ளது.

ஸ்டெராய்டுகள் ஆண்களுக்குப் பாலியல் பிரச்னைகள், ஆண்மைக் குறைபாடு, உடற்சோர்வு, மனச்சோர்வு உள்ளிட்டவற்றையும், பெண்களுக்கு முகப்பரு, குழந்தையின்மை, மார்பகங்களின் அளவுகளில் மாற்றம் உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை, மனநல சிகிச்சை என மேற்கொள்ளவேண்டும். சிகிச்சை மேற்கொள்ளும் பட்சத்தில் எளிதாக, விரைவில் குணம் பெறலாம்’’ என்றார் மருத்துவர் மீனாட்சி.